சரியும் பன்னீர்;சாதிக்கும் சசிகலா! - ப்ரியன்


தமிழக அமைச்சர்கள் பலரும் ‘தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும்’ என்று சொல்லிவந்த நிலையில், அந்தக் குரல்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும்விதமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், ‘சசிகலா உடனடியாக முதல்வர் பதவியேற்க வேண்டும்’ என்று, உரத்தகுரலில் முழங்கியிருக்கிறார். இதன் விளைவாக, விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் பன்னீர். ஒருவர் முதல்வராக இருக்கும்போதே வேறொருவரை முதல்வராக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது அநாகரிகம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், தினசரி சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் பன்னீர், தனக்கென ஒரு ஆளுமைப் பண்பையோ, நிர்வாகத் திறமையையோ, ஆதரவாளர் பின்பலத்தையோ வளர்த்துக்கொள்ளாத நிலையில் ‘கையறு’ நிலையில் நிற்கிறார். தலைமைக்கு காட்டிவந்த அடிமை விசுவாசம், அவரது சிந்திக்கும் திறனைக்கூட கபளீகரம் செய்துவிட்டது. தனது அரசியல் வாழ்வில், தான் கற்றுக்கொண்ட ஒரே பண்பான அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காலில் விழுந்ததன்மூலம் காட்டிவிட்டார். இரண்டாம் இடமே தனக்கு தன்னிறைவைக் கொடுத்துவிடும் என்ற மனநிலைக்கு பன்னீர் வந்துவிட்டார் என்று நன்றாகவே தெரிகிறது.
ஆட்சியும் கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும்; அப்போதுதான் இரண்டையும் கட்டுப்பாட்டுடன் எடுத்துச்செல்ல முடியும் என்பது தம்பிதுரையின் வாதமாக இருக்கிறது. அப்படி இல்லாததால்தான் உத்தரப்பிரதேசத்தில், தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டதை சுட்டிக்காட்டுகிறார் தம்பிதுரை. அதேசமயம் சோனியா, கட்சித் தலைவராகவும் மன்மோகன் ஆட்சித் தலைவராகவும் இருந்தபோது அவர்களிடையே எந்தப் பிரச்னையுமில்லாமல் பத்து வருடம் கடத்தியதை வசதியாக மறந்துவிட்டார். திராவிட இயக்க கட்சிகளில், கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒருவரிடமே இருந்த காலமும் உண்டு; தனித்தனி நபரிடம் இருந்த காலமும் உண்டு. திமுக-வை தொடங்கியபோது தலைவர் பதவியை காலியாக வைத்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அண்ணா. பெரியாருக்காக தலைவர் பொறுப்பை காலியாக வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளில் உயர்நிலையில் பொதுச்செயலர் பொறுப்பு இருப்பதைப் போன்று திமுக-விலும் உருவாக்க விரும்பினார் அண்ணா என்ற பேச்சும் உண்டு. அண்ணா, தான் இருக்கும்போதே ஐந்து வருட காலம் நெடுஞ்செழியனை பொதுச்செயலாளராக்கி அழகு பார்த்தார். தன்னை மீறி யாரும் செயல்பட முடியாது என்ற ஆளுமைப் பண்பும் அறிவுத் திறமையும் அண்ணாவிடம் இருந்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக-வில் ஏற்பட்ட பதவிப் போட்டியில் பொதுச்செயலாளருக்கு மேலாக தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். அதிமுக-வை தொடங்கியபோது அண்ணா காலத்து பாணியிலேயே பொதுச் செயலாளர் பதவியே உயர் பதவியாக இருந்தது. அதேசமயம், அவைத்தலைவர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அவைத்தலைவர் பதவி அண்ணா காலத்திலேயே இருந்தது. சம்பத் சில காலம் அந்தப் பொறுப்பில் இருந்தார். அண்ணா செய்ததுபோலவே எம்.ஜி.ஆரும் பொதுச்செயலாளர் பொறுப்பை நெடுஞ்செழியன், ராகவானந்தம் ஆகியோருக்கு கொடுத்திருக்கிறார். அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கு காரணமாக, தன்னை மீறி யாரும் செயல்பட முடியாது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆனால் கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டிருந்ததாக பெருமைப்பட்டுக்கொண்ட ஜெயலலிதாவே, தான் வாழ்ந்த காலம் வரை பொதுச் செயலாளர் பதவியை இறுகப் பிடித்துவைத்துக் கொண்டிருந்தாரே தவிர யாரிடமும் கொடுக்கவில்லை. ஆனால் சிறைக்குச் சென்றதன் காரணமாகவும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதன் காரணமாகவும் இருமுறை, பன்னீரிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் ஜெயலலிதா. இன்று அவர் மறைவுக்குப் பிறகு, ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ளதாகச் சொல்லப்படும் கட்சியில், ஜெயா-வால் அரசியல் அடையாளம் காட்டப்படாத ஒருவரை கட்சியில் முன்னிறுத்தி, ஆட்சியையும் அவர் கையில் ஒப்படைக்கத் துடிக்கிறார்கள். ஜெயலலிதாவால் வளர்த்துவிடப்பட்ட கட்சிக்காரர்கள் ஒருவருக்குக்கூட தலைமைப் பொறுப்பு ஏற்க தகுதியில்லாமல் இருக்கிறார்கள் என்பது பெரிய அவமானம் இல்லையா? அண்ணாவோடு அரசியல் நடத்தியவர்கள் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பது கூடுதல் அவமானம். உயரே கொண்டு உட்காரவைத்தபின் சசிகலாவுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுக்கும் வேலை துரிதமாக நடந்துகொண்டிருக்கிறது. கட்சித் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் செல்வாக்கு இல்லாத சசிகலா மட்டுமே, கட்சியை ஒற்றுமையாக வைத்துக்கொள்ள முடியும் என்று திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்காகவே பல கட்சிப் பிரமுகர்களையும் மீடியாகாரர்களையும் வளைத்துப்போட ஒரு குழுவே வேலை செய்கிறது. நாலரை வருடம் ஆட்சியை நகர்த்திக்கொண்டு போகவேண்டுமென்றால் அது, சசிகலா பின்னால் அணிவகுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்ற எண்ணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களிடையே பலமாக வேரூன்றியிருக்கிறது. ஒரு தேர்தல் நெருக்கத்தில் ஜெயா மரணம் நிகழ்ந்திருக்குமானால் சசிகலா பின்னால் இதுபோல திரண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.
கட்சிப் பொறுப்பும் ஆட்சிப் பொறுப்பும் ஒருவரிடமே இருப்பதும், தனித்தனியாக இருவரிடம் இருப்பதிலும் பல சாதக பாதகங்கள் இருக்கின்றன. பன்னீர் முதல்வராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு அரசியல் பின்பலம் இல்லாமலிருப்பது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். அந்த நிலையில், அதிகாரிகள் சசிகலாவிடம் கட்டளை பெறும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சசிகலாவின் சொந்தங்கள் அதிகார மையங்களாக மாறுவார்கள். சட்ட சம்மதமில்லாத அதிகார மையமாக மாறுவார் சசிகலா. நடக்கும் முறைகேடுகளுக்கும் அத்துமீறல்களுக்கும் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார் பன்னீர். இதுவரை நாம் பார்த்த பன்னீரின் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது, அவரால் அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாது என்பதை நிச்சயம் சொல்ல முடியும். அது சரி; சசிகலாவே முதல்வராகவும் இருந்தால் என்ன ஆகும்? அப்போது, அரசைப் பொருத்தவரை சட்ட சம்மதமில்லாத அதிகார மையம் இருக்காது. ஆனால் சசிகலா குடும்பத்து அதிகார மையங்கள் தங்கள் ஆளுமையைச் செலுத்தும். ஆனால் இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், முதல்வர் பொறுப்பிலிருக்கும் சசிகலா, முறைகேடுகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கும். இந்த வகையில் நழுவ முயற்சித்தால் அரசின் மீது விமர்சனம் கடுமையாகும். அரசானது மக்கள் நம்பிக்கையை இழக்கும். சசிகலா, தனது குடும்ப அதிகார மையங்களை கட்டுப்படுத்துவாரா அல்லது ஊக்குவிப்பாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஜெயா இருந்தபோதே சசிகலா சொந்தங்கள் சொத்துகளைக் குவித்தன என்பது தமிழக மக்கள் அறிந்த ஒன்றுதான்.
நிர்வாகத்திறனை பொருத்தமட்டில் மூன்றாவது முறை முதல்வராக இருக்கும் பன்னீருக்கும் சசிகலாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரது நிர்வாகத்திறன் குறித்தும் தமிழக மக்கள் பெரியளவில் தெரிந்துகொள்ள இதுவரை வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதுதான். எல்லாம் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றால், அங்கே நசுக்கப்படுவது ஜனநாயகமாகத்தான் இருக்கும்.
சசிகலா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகப் போகிறாரா அல்லது முதல்வராகி ஆறு மாதத்துக்குள் தேர்தலை சந்திக்கப்போகிறாரா என்று தெரியவில்லை. அவர், எப்படி முதல்வரானாலும் சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும் லட்சக்கணக்கான கோடி கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக் கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும். தொழில்துறையில் மந்த நிலை. இவற்றின் காரணமாகவும் பண மதிப்பிழப்பின் காரணமாகவும் வேலையிழப்பு, விவசாயிகளின் தொடர் தற்கொலை, தமிழகம் முழுவதும் வறட்சி நிலை, விலைவாசி உயர்வு, அம்மா உணவகங்களை நடத்த முடியாதளவு நிதிப் பற்றாக்குறை. இவற்றைத் தவிர நதிநீர் பிரச்னைகள், ஜல்லிக்கட்டு, மருத்துவ நுழைவுத் தேர்வு என்று பல பிரச்னைகள் வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் வலுவான தலைமையில்லாத நிலையில், ஆட்சியில் ஊழலும் கட்சியில் ஒழுங்கீனமும் தலைவிரித்தாடுவதை தவிர்க்க முடியாது.
இவற்றையெல்லாம்விட, அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும். அதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலையும் சசிகலா சந்திக்கவேண்டி வரும். ஆனால் அதிமுக-வை பொருத்தவரை பணமும் அதிகாரமும் பின்பலமாக அமைய, வெற்றிக்கான யுக்திகளை வகுப்பது அந்தக் கட்சிக்கு இதுவரை சுலபமாகவே இருந்து வந்திருக்கிறது. சிறு கட்சிகளைத் துண்டிவிட்டு திமுக-வை ஆவேசமாகத் தாக்குவது, திமுக பலமான கூட்டணி அமைப்பதை தடுக்கும்விதமாக புரோக்கர் தலைவர்களை தூண்டிவிடுவது போன்ற ‘ஜெயா’வின் யுக்திகளையும் தொடர்ந்து செயல்படுத்துவார்கள்.
மத்தியில் ஆளும் பாஜக-வை பொருத்தவரையில் அதிமுக கட்சியையோ, ஆட்சியையோ பெரியளவில் பிரச்னைக்கு உள்ளாக்கமாட்டார்கள். பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களில் ஆதரவு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு, தேர்தலில் கூட்டணி என்ற நோக்கங்களின் அடிப்படையிலேயே இரு கட்சிகளின் நெருக்கம் அமையும். பாஜக-வை பகைத்துக்கொண்டால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளுவோம் என்பது சசிகலா உட்பட அதிமுக பிரமுகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
கட்சி நிர்வாகிகளிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச அதிருப்தியையும் போக்கும்விதமாக, எல்லா மாவட்ட நிர்வாகிகளையும் கலந்துரையாடலுக்கு அழைத்திருக்கிறார் சசிகலா. இந்த கூட்டங்களுக்குப் பின்னரே சசிகலா, உடனடியாக முதல்வராகப் பொறுப்பேற்பாரா அல்லது இடைத்தேர்தலில் வென்று பதவியேற்பாரா அல்லது கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பதவியை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவரும். எது எப்படியிருந்தாலும், எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்படும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என்பது, சசிகலாவின் அரசியல் ஏற்றம் அல்லது இறக்கத்துக்கு காரணமாக அமையப்போகும் ஒன்று என்பது மட்டும் நிச்சயம்.
சரியும் பன்னீர்;சாதிக்கும் சசிகலா! - ப்ரியன் சரியும் பன்னீர்;சாதிக்கும் சசிகலா! - ப்ரியன் Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.