ஜல்லிக்கட்டு : மத்திய அரசின் டபுள் கேம்!
மத்திய அரசு விதித்த 2 தடை அறிக்கைகளை திரும்பப் பெறும் முடிவை எதிர்த்தும், தமிழக அரசின் அவசர சட்டத்தை தடை செய்யவும் கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியமும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளன. அதையடுத்து, மத்திய அரசின் டபுள் கேம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது தெரியவருகிறது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவால், கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்த ஆண்டு நடைபெற வேண்டுமென்று கூறி பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவசர சட்டம் பிறப்பிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு, பிரதமர் மோடியோ, இது விபரம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று முதல்வர் பன்னீர் செல்வத்திடம் தெரிவித்தார், மேலும், இது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு தருமென்று தெரிவித்தார்.
அதையடுத்து, தமிழகம் திரும்பிய முதல்வர் நேற்று முன்தினம் 23ஆம் தேதி மாலையில் கூடிய சிறப்பு சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துவதுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தார். ஆனால், நிரந்தர சட்டம் வேண்டுமென்று மாணவர்கள் தொடர்ந்து போராடியதால் தமிழக சட்டசபையில் நேற்று நிரந்தர சட்டத்துக்கான முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ,ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கடந்த 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு வெளியிட்ட 2 தடை அறிக்கைகளை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதையடுத்து, தடை செய்த 2 அறிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதி மன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை திங்களன்று விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட 2 அறிக்கைகளை திரும்பப் பெறுவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த மனுவில், 2016-ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் ஜல்லிக்கட்டு அனுமதியுடன் வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, அறிக்கையில் உள்ள மற்ற அம்சங்களையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இம்மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது.
மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளதை பார்க்கும்போது, பிரதமர் மோடி தமிழக அரசு விவகாரத்தில் டபுள் கேம் ஆடுவது போல் உள்ளது. தமிழக முதல்வரிடம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசின் ஆதரவு உண்டு என்று தெரிவித்துவிட்டு, மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக, தமிழக அரசுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளதன வாயிலாக பிரதமர் மோடி நாடகமாடுவது நன்றாகவே தெரியவருகிறது. மோடியின் இந்த நயவஞ்சக செயலை தமிழக மக்கள் நிச்சயம் மன்னிக்கவே மாட்டார்கள். அதற்கான பதிலை தக்க நேரத்தில் கொடுக்கவும் தமிழக மக்கள் முடிவெடுப்பார்கள் என்பது நிச்சயம்.
தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து. பீட்டாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியும் , விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த அரிமா சுந்தரமும் ஆஜராக உள்ளனர்.
"இந்நிலையில், தமிழக அரசின் சட்டம் நமது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. உச்ச நீதிமன்றத்தின் இருக்கருத்துகளுக்கும் தமிழக அரசின் சட்டம் எதிராக உள்ளது. மத்திய அரசு தமது அறிவிப்பை திரும்பப்பெறுவதற்கும் தமது வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பேட்டியளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு : மத்திய அரசின் டபுள் கேம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:36:00
Rating:
No comments: