இந்தியாவில் வேலையில்லாதோர் அதிகமாவார்கள்! - ஜெயரஞ்சன்


2017ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை மேலும் ஒரு லட்சம் அதிகரிக்கும் எனவும் 2018ஆம் ஆண்டு இதைவிட இன்னும் 2 லட்சம் அதிகரிக்கும் என்றும் உலக நாடுகளின் தொழிலாளர் அமைப்பு (ILO) கணித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 1 கோடியே 77லட்சமாக இருந்தது. 2018ஆம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் வேலையில்லாதோர் விகிதம் 3.5 விழுக்காடு என்பதிலிருந்து 3.4 விழுக்காடாக குறையும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் மற்றும் வளர்ச்சியின் தன்மையும் மாறியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது ஏட்டளவில்தான் இருக்கிறது. ஆகவேதான் வேலையின்மை அதிகரிக்கிறது. போதுமான அளவில் வேலையே உருவாகாதபோது தரமான வேலையைக் குறித்து என்ன பேசுவது? என அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் கவலை தெரிவித்தார்.
மிகமோசமான வேலை வாய்ப்புகள்தான் அதிகமாக உருவாகி வருகின்றன. நாட்டில் வேலை செய்வோரில் 42 விழுக்காடு அளவிற்கு இத்தகைய வேலைகளில்தான் மக்கள் பணிபுரிகிறார்கள். இந்த நிலை தொடரும் என்பதுதான் வேதனை. அது மட்டுமல்ல. அதுபோன்ற வேலைகள் இன்னமும் அதிகரிக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார். அதாவது, இருவர் வேலையில் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் இத்தகைய நிரந்தரமற்ற வேலையில்தான் இருக்கிறார். இது இன்னும் அதிகரிக்கும். மேலும், அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அளவும் குறையும். இவ்வாறு சொற்ப சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவர்கள் சராசரியாக ரூ.200 தான் ஒரு நாள் கூலியாக பெறுகிறார்கள். உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலும் தரமான வேலைவாய்ப்பும் இல்லாததும்தான் கவலை கொள்ளத்தக்க செய்தி என ILO(International Labour Organization) தெரிவித்துள்ளது.
இதைப் பற்றியெல்லாம் ஏராளமான ஆய்வுகளும் புள்ளி விபரங்களும் இருந்தபோதிலும் நடுவண் அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை எத்தகைய மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனை சரிசெய்யாமல் தேசியம் பேசுவதும் மத அரசியல் பேசுவதும் எவ்வளவு “பொறுப்பான” செயல் என எண்ணிப் பாருங்கள்.
இந்தியாவில் வேலையில்லாதோர் அதிகமாவார்கள்! - ஜெயரஞ்சன் இந்தியாவில் வேலையில்லாதோர் அதிகமாவார்கள்! - ஜெயரஞ்சன் Reviewed by நமதூர் செய்திகள் on 02:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.