டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து- தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
டெல்லி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பென்ட் செய்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தகுதியற்ற நபர்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக எப்படி நியமிக்கலாம்? எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டிஎன்பிஎஸ்சியில் தலைவர் உட்பட 14 பேர் உறுப்பினர்கள். டிஎன்பிஎஸ்சி-யில் காலி இடங்களள நிரப்பும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 11 பேர் புதிய உறுப்பினர்களாக்கப்பட்டனர்.
ஹைகோர்ட்டில் வழக்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, வழக்கறிஞர்கள் ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன். ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, பொறியாளர்கள் பி.கிருஷ்ண குமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி. புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் ஆகியோர் புதியதாக உறுப்பினர்களாக ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கு எதிராக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், சமூகநீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிரடி உத்தரவு இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கடந்த மாதம் 11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களையும் நியமனம் செய்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு அப்பீல் இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான பெஞ்ச், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.
சுப்ரீம் கோர்ட் கேள்வி அத்துடன் தகுதியே இல்லாத 11 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஒரே நாளில் நியமனம் செய்தது எப்படி? எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாகும்.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து- தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:34:00
Rating:
No comments: