பெரு நஷ்டத்தில் இந்திய அச்சு ஊடகம்!
டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம்!
அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான கூச்சலுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த பரபரப்புக்கிடையே அச்சு ஊடகம் தனது ஜீவமரணப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. நீண்டகாலமாக ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகவும் பேச்சு சுதந்திரத்தின் பாதுகாப்பு அரணாகவும் இருந்துவந்த அச்சு ஊடகத்துக்கு இடர் நேர்ந்துள்ளது.
அச்சு ஊடகம் ஏற்கனவே உலகளவில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. பெரும்பாலான முக்கிய தினசரிகளின் பதிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன, ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். அதேபோல, முதலீடு மற்றும் விரிவாக்கப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து வருடங்களாக சிறு பத்திரிகைகளின் நிலைமையும் இதேதான். ஜி.எஸ்.டி. அடிப்படையில் வரி விதிப்பு உயர்ந்தாலோ, பண மதிப்பழிப்பு அறிவிப்பால் கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட பாதிப்பு நடப்புக் காலாண்டிலும் தொடர்ந்தாலோ, அரசாங்கம் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்றாலோ, விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.
ஊடக ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு பணித்தது. இதனால் பெரும்பாலான அச்சு நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. முந்தைய அரசாங்கம் ஊடக ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று தினசரிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தை 45 – 50 சதவிகிதம் வரை உயர்த்த உத்தரவிட்டது. இதனால் பியூன், கிளர்க், ஓட்டுநர் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களின் ஊதியம் பெருமளவு உயர்ந்தது. இந்தியாவில் வேறு எந்தத் துறையிலும் அவர்களால் பெறமுடிந்த சம்பளத்தைவிட இது மூன்று மடங்கு அதிகம். ஊதியக்குழுவின் இந்த திடீர் ஊதிய உயர்வால் இதுவரை லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த பெரிய பதிப்பகங்கள் இழப்பைச் சந்தித்தன. இதன் காரணமாக இந்தியாவின் மதிப்புமிக்க ‘தி இந்து’ நாளிதழ் 2013-14 மற்றும் 2014-15ஆண்டுகளில் வரி செலுத்தும்முன்பே (Pre-Tax Loss ) இழப்படைந்ததாக அறிவித்தது. இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான ‘பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா’-வும் 2013-14 காலகட்டத்தில் ஊழியர்களின் ஊதியம் 173 சதவிகிதம் அதிகமானதால் இழப்பு அதிகரித்ததாக அறிவித்தது. முந்தைய ஆண்டைவிட அதிக இழப்பை இந்நிறுவனம் சந்தித்தது.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் வெளியான பண மதிப்பழிப்பு நடவடிக்கையும் அச்சு ஊடகத்துக்கு மிகப்பெரிய அழிவை இழைத்திருக்கிறது. இந்திய தினசரிகளின் வர்த்தகம் என்பது விளம்பரங்களிலிருந்து கிடக்கும் வருவாயையே அதிகம் சார்ந்திருக்கிறது. இவற்றின் மொத்த வருவாயில் 70 – 80 சதவிகிதம் வரையிலான வருவாய் விளம்பரங்கள் மூலமே கிடைக்கின்றன. கடந்த சில வருடங்களாக, இதன்மூலம் கிடைக்கும் வருவாய் சற்றே அதிகரித்து வருகிறது. அச்சு ஊடகத்துக்கு 4 – 6 சதவிகிதமும், தொலைக்காட்சிகளுக்கு 15 - 18 சதவிகிதமும், டிஜிட்டல் ஊடகங்களுக்கு 35 - 40 சதவிகிதம் வரையிலும் விளம்பர வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் பண மதிப்பழிப்பு அறிவிப்பு இதிலும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அனைத்து நிறுவனங்களும் விளம்பரத்துக்காக செய்யும் செலவின் அளவை குறைந்துள்ளன. அரசாங்கம் விளம்பர வரியை உயர்த்தியுள்ளது. கடந்த 2010க்குப் பின்னர், விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகம் (DAVP) அளிக்கும் மிகக் குறைந்த விளம்பரத்துக்கான தொகையை ஒரே ஒருமுறை மட்டுமே திருத்தி அமைத்தது.
தினசரிகளை அச்சிடுவதற்கு ஆகும் காகிதத்துக்கான செலவு அதிகரிக்கத் தொடங்கியது இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் இறக்குமதி செய்யப்படும் செய்தித்தாள் காகிதங்கள் விலை உயர்ந்தது.
இவ்வளவு பிரச்னைகள் இருந்தபோதிலும், இந்திய தினசரிகள் தங்களது விலையை உலகிலேயே மிக மலிவான (3 – 5 ரூபாய்) ஒன்றாகவே வைத்திருக்கின்றன. காரணம், அவற்றின் வாசகர்களுக்கு இவை வெறும் செய்திகளாக மட்டுமல்லாமல், கல்வியாகவும் அறிவாகவும் மற்றும் கேளிக்கையாகவும் உள்ளன. இதன் காரணமாக, நாளிதழ் விற்பனைமூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக குறையத் தொடங்கியது. (நவம்பருக்குப் பிறகு விளம்பர வருவாயும் குறையத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது)
இதன் விளைவாக இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகைகளின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கடந்த சில வருடங்களாகவே நலிவடைந்துவரும் பல முன்னணி பத்திரிகைகளும் இதில் அடங்கும். உதாரணத்துக்கு, இந்தியாவின் லாபகரமான பத்திரிகையாக கருதப்படுகிற ஒரு தேசிய நாளிதழ் குழுமத்தின் 2011-12 மற்றும் 2015-16 காலகட்டத்தின் ஆண்டு வருவாய் வளர்ச்சி (CAGR)வெறும் 4 சதவிகிதம் மட்டுமே. ஆனால் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மனிதவளச் செலவு 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒரு மிகப்பெரிய நிறுவனத்துக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சிறு பத்திரிகைகளின் நிலைமையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
இதைத் தடுப்பதற்கான வழிகளும் இருக்கின்றன. ஆனால் அவை மிக விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், அடுத்த சில வருடங்களில் இந்திய தினசரிகளை நலிவடையாமல் பாதுகாக்க முடியும்.
ஒன்று: அரசாங்கம் அதன் ஊடக ஊதியக் குழுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதோடு பத்திரிகையாளர் அல்லாத ஊழியர்களை இதிலிருந்து நீக்க வேண்டும். இந்தியாவிலேயே அரசாங்கத்தால் ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் ஒரே தனியார் துறை பத்திரிகை துறையாகத்தான் இருக்கும். தேசிய தொழிலாளர் சங்கம், கடந்த 2002ஆம் ஆண்டே, எந்தவொரு துறைக்கும் ஊதியக் குழு தேவையில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு: புதிய ஜி.எஸ்.டி. அறிவிப்பு, நாளிதழ்கள் மீதான வரிவிலக்கை உறுதிசெய்ய வேண்டும். பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவது போன்றவற்றை ஊக்குவிப்பதன்மூலம், கடந்த அறுபது ஆண்டுகளாக நாளிதழ்கள் மீதான மறைமுக வரி பூஜ்ஜியம் அல்லது மிகக் குறைந்த அளவாகவே இருந்துவந்துள்ளது. நாளிதழ்களுக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் விளக்கமானது, ‘நாளிதழ்களில் வரும் விளம்பரங்களுக்கு ஜி.எஸ்.டி-யின் அடிப்படையில் வரிவிலக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறுகிறது. அதேபோல, நாளிதழ்களை நுகர்வோருக்கு விற்பதிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக் கூடாது. அதுதான் உலக நியதி. அனைத்து ஜனநாயக நாடுகளும் பத்திரிகைகளை வரிகளிலிருந்து விலக்கு அளிப்பதோடு உறுதியாக ஊக்குவிப்பதும் முக்கியமான கடமையாக கருதுகின்றன.
பொதுவாக ஊடகத் துறையும் குறிப்பாக பத்திரிகைத் துறை ஒரு முக்கியமான மாற்றத்தை எதிர்கொள்ளும் காலகட்டம் இது. வரி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஆகியவற்றைக் கடந்து, இந்தத் துறையை வலுப்படுத்துவதற்கான நேரம் இது. இதன்மூலம் ஜனநாயகத்தின் கால்களை ஆழமாக வேரூன்றவும், படிப்பறிவை விரிவுபடுத்தவும் வேண்டும். இதை உறுதிசெய்ய, அரசாங்கத்தின் நியாயமான நிதி மற்றும் தொழிலாளர் கொள்கையும்தான் இப்போதைய தேவை.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ்
பெரு நஷ்டத்தில் இந்திய அச்சு ஊடகம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:32:00
Rating:
No comments: