சிரியா: முறிந்தது அமைதி ஒப்பந்தம்!
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ஆம் ஆண்டு, மார்ச் 15-ஆம் தேதி உள்நாட்டுப் போர் தொடங்கியது. தொடர்ந்து 6-வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் வீடுகளை விட்டு, உயிர் பிழைக்க இடம் பெயர்ந்தனர்.
இந்த நிலையில் ரஷியா, துருக்கி ஆதரவுடன் இரு தரப்புக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. “இது உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்து, அரசியல் தீர்வு காண்பதற்கு உண்மையான வாய்ப்பாக அமையும்” என சிரியா அரசு கூறியுள்ளது.இந்த சண்டை நிறுத்தம் டிசம்பர் 29-ஆம் தேதி இரவில் இருந்து அமலுக்கு வந்தது. போராளி குழுக்கள் மற்றும் சிரியா அரசு பிரதிநிதிகளிடையே இந்த மாதம் கஜகஸ்தான் நாட்டில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் இந்த முயற்சியை ஆதரித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கடந்த முதல்தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சிரியாவில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவும், அரசியல்ரீதியான தீர்வு காணவும் ரஷியா மற்றும் துருக்கு எடுத்துள்ள இந்த முயற்சிகளை வரவேற்று, ஆதரிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை ஆதரித்து, ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம்வகிக்கும் 15 நாடுகளும் வாக்களித்தன.
இதற்கிடையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் பகுதிக்கு குடிநீர் வினியோகத்துக்கு மூலாதாரமாக இருக்கும் முக்கிய நீரருவிகளின் ஊற்றுக்கண் கருவாகும் பல பகுதிகளை போராளிகளின் பிடியில் இருந்து மீட்பதற்காக அரசுப்படைகள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.இதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை தவிர்க்க சில போராளி குழுக்கள் முயற்சித்து வருகின்றன.இந்நிலையில், அரசுப் படைகளும், அதன் ஆதரவுப் படைகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையிலும் போராளிகள் மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தி வருவதால், கஜகஸ்தான் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என அந்நாட்டின் மிகப்பெரிய போராளிகள் குழுவான ‘சிரியாவை விடுவிப்போம்’ என்ற அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.
சிரியா: முறிந்தது அமைதி ஒப்பந்தம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:52:00
Rating:
No comments: