ஜெயலலிதா மரணத்திற்குப் பின்:தி.க.செயல்பாடுகள்!


ஜெயலலிதா அவர்கள் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலே, அவரது உடல் நிலை பற்றிய உண்மைகளை உளவறிந்து கொண்ட மத்திய பி.ஜே.பி அரசு, ஜெயலலிதா எதிர்த்து வந்த முக்கிய முடிவுகளை, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவோடு நிறைவேற்றியது.
ஜெயலலிதா இல்லாத நிலையில் தங்களின் விருப்பபடியே அ.தி.மு.க ஆட்சி நடக்கும் என்பதற்கான ஓர் அறிவிப்பாக அது அமைந்தது.
ஓ.பன்னீர்செல்வத்தைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு தமிழகத்தை ஆள்வதற்கு பி.ஜே.பி முயன்று கொண்டே, மறுபுறம் அ.தி.மு.க.வை சிதறடித்து, அந்த இடத்தை தனதாக்ககவும் பல கோணங்களில் முயற்சி மேற்கொண்டது.
இந்நிலையில் தான் திராவிடர் கழகம், தாய்க்கழகப் பொறுப்பில் தன் கடமையைச் செய்யத் தொடங்கியது.
இலஞ்சம், ஊழல் என்ற குற்றச்சாட்டுகள் இருப்பினும் தமிழகத்தில் மதவாத பி.ஜே.பி அரசு காலூன்றாமல் தடுக்க தி.மு.கவும், அ.தி.மு.கவும் வலுவுடன் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அதுவே தமிழர்க்கும் தமிழ் நாட்டிற்கும் பாதுகாப்பு.
இந்த அடிப்படையில் அ.தி.மு.க. சிதறாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு தி.க.விற்கு உண்டு. அதன் அடிப்படையில் தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு மிகச் சரியாகச் செயல்பட்டு வருகிறார்.
தி.க. தலைவர் தி.மு.க., அ.தி.மு.க என்ற இருகட்சிகளில் எதற்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயல்படவோ கருத்துக்கூறவோ இல்லை என்பதை அரசியல் நோக்கர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மாறாக அவர் செயல்பாடுகள் பி.ஜே.பியின் சூழ்ச்சிக்கு, வஞ்சகத்திற்கு, ஊடுருவலுக்கு எதிராகவே செய்யப்படுகின்றன. ஜெயலலிதாவுடன் பின்னி வாழ்ந்த சசிகலா என்ற தலைமை இல்லை என்றால், அ.தி.மு.க பலவாகச் சிதறும் என்பது பார்ப்பன பா.ஜ.கவின் எதிர்பார்ப்பு. எனவே, அவரைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது.
“ஜெயலலிதாவைக் கொன்றுவிட்டார்”; “ஜெயலலிதா உறவுகளை ஒதுக்கிவிட்டார்” “ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்துவிட்டார்” என்பன போன்ற பிரச்சாரங்களை முடுக்கிவிட்டு, அ.தி.மு.க. தொண்டர்களை வெறுப்பேற்றுவதன் மூலம் சசிகலாவை வீழ்த்திவிட்டால், அ.தி.மு.க கட்டுக் குலைந்து நெல்லிக்காய் மூட்டையாகும்; அதன் வழி அ.தி.மு.க தொண்டர்களை இழுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதே பா.ஜ.க.வின் சூழ்ச்சித் திட்டம்.
இதை நன்றாகப் புரிந்து கொண்டே தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், அ.தி.மு.க. இராணுவக் கட்டுப்பாட்டோடு ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார்.
இந்த அறிக்கையைக் கண்டதும. தி.மு.கவினர் குழம்பினர்.மற்றவர்கள் அதிர்ந்தது சரி. அதில் அர்த்தம் உள்ளது. ஆனால், தி.மு.கவினர் குழம்ப வேண்டிய கட்டாயம் என்ன?
அ.தி.மு.க ஒற்றுமையாய் இருந்து பி.ஜே.பி உள்ளே ஊடுறுவாமல் உறுதியாய் இருக்கவேண்டும் என்பதில் தி.மு.கவிற்கு அதிருப்தி வரவேண்டிய அவசியம் என்ன? அது ஒருவகையில் தி.மு.க.விற்கு பாதுகாப்பு என்பதோடு, நன்மை பயப்பதும் ஆகும்.
அ.தி.மு.கவுடன், தி.மு.க எதிர்களம் காண்பது 40 ஆண்டுகளாக நடப்பது. இதில் மாறிமாறி இருவரும் வெற்றி பெற்றுவருகின்றனர். இதனால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இல்லை, பாதுகாப்பு.
ஆனால், அ.தி.மு.க. சிதறி, அந்த இடத்தில் பி.ஜே.பி வளர்ந்தால் அந்த நிலை ஆபத்தானதல்லவா? எனவே, அ.தி.மு.க. உறுதியாய் இருப்பது, மதவாத சக்தி ஊடுறுவதைத் தடுக்கும் அரண் என்பது மட்டுமல்ல, தி.மு.கவிற்கு அது ஒருவகையில் அரண் என்பதை தி.மு.க ஆழ்ந்து சிந்தித்து உணரவேண்டும்.
இதில் தி.மு.க.விற்கு பயன் என்னவென்றால், ஜெயலலிதா என்ற மக்கள் ஈர்ப்பு மறைந்த நிலையில், தி.மு.க மக்கள் செல்வாக்கை தன்பக்கம் ஈர்ப்பது எளிது; ஆட்சிக்கு வருவதும் எளிது. ஆனால், பி.ஜே.பி.யை எதிர் அமைப்பாக வளர்த்துவிட்டால் அத்திமிங்கலம் தி.மு.கவை விழுங்கிவிடுமே!
இதில் எது சரி? எது நல்லது? தி.மு.கவினர் சிந்திக்க வேண்டுமல்லவா?
அ.தி.மு.க. சிதறி, 30 எம்.எல்.ஏ., தி.மு.க பக்கம் வந்தால் தி.மு.க ஆட்சி உடனே அமைக்கலாம் என்ற குறுகிய கால பலன் கருதும் எதிர்பார்ப்பிற்கு வேண்டுமானால் இது ஏமாற்றமாக அமையலாம்.
ஆனால், தொலை நோக்கில் அது கேடானது.
மத்தியில் பெரும் பலத்தோடு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவினர், அ.தி.மு.க சிதறினால், அத்தனை பேரையும் விரட்டியும் விலைக்கு வாங்கியும் ஆட்சிக்கு வரமுயலுவார்கள் என்பதும் நடக்கக் கூடியதே!
நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில் தி.க.வின் செயல்பாட்டை பா.ஜ.கவினரே நிர்ணயிக்கின்றனர்.
அதைத் தமிழினப் பற்றாளர்கள், தி.மு.கவினர் சிந்திக்க வேண்டும்.அவர்கள் யாரை வீழ்த்தத் துடிக்கிறார்களோ அவர்களைக் காப்பதில் தான் தமிழர் நலன் இருக்க முடியும் என்பது பாலபாடம்.
தி.மு.கவின் தலைமைக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏதாவது அய்யம், குழப்பம் இருப்பின் தி.க. தலைவருடன் கலந்து பேசி தெளிவு பெறுவதே கட்சிக்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது.
மாறாக, கற்பனையாக அதிருப்தி கொண்டு, எதிர் செயல்பாடுகளுக்கான “சமிக்ஞை” தருவது சரியான அணுகுமுறையாகாது.
ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவையே பகைத்துக் கொண்டு, தி.மு.கவிற்காக உழைத்த இயக்கம் தி.க; அதன் தலைவர் கி.வீரமணி என்பதை தி.மு.க.வினர் மறக்காமல் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அ.தி.மு.க. சிதறிவிடக்கூடாது என்று தி.க. தலைவர் முயற்சி மேற்கொள்வது என்பது, அ.தி.மு.க. வுக்கு ஆதரவு தி.மு.க.விற்கு எதிரானது என்பது தவறான கருத்தாகும்.
தி.க., தி.மு.க உறவு எப்போதும் போல உள்ள நிலையில், அ.தி.மு.க சிதறி பி.ஜே.பி வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக முயலுவது என்பது அ.தி.மு.க ஆதரவாகவோ, தி.மு.க எதிர்ப்பாகவோ எப்படி ஆகும்?
சரியான புரிதலோடு பார்த்தால் இதைத் தி.மு.க.வே மேற்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக் காட்டினால் விளக்கமாக அமையும்.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் எழுத்தாளார் மாலன் தி.க. கொள்கைப் பரப்புச் செயலர் அ.அருள்மொழியைப் பார்த்து, “ஜெயலலிதா இல்லாத நிலையில், தி.மு.கவையும், அ.தி.மு.க.வையும் ஒருங்கிணைக்க உங்கள் தலைவர் கி.வீரமணி அவர்கள் முயற்சிக்கலாமே” என்று கேட்க,
அருள்மொழி பட்டென்று பதில் சொன்னார், “இரண்டும் இருப்பதுதான் நல்லது” என்றார். இரண்டும் ஒன்றானால், எதிர் கட்சியாக தான் வளர்ந்து ஆளும் கட்சியாக மாறிவிடலாம் என்ற சூழ்ச்சியால். அதைப் புரிந்து அருள்மொழி பதில் சொன்னார். இதைத்தான் தி.மு.க.வினர் சிந்திக்க வேண்டும்.
தி.க., தி.மு.க. உறவில் எந்தச் சிக்கலும் இல்லாத போது, அதிருப்திக்கு வேலையே இல்லை!தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிற்கும் உள்ள தரவேறுபாடும் கொள்கைப் பிடிப்பும் திராவிடர் கழகமும் அதன் தலைமையும் அறியாதவை அல்ல. ஆனால், தரத்தை எடைபோடவேண்டிய நேரமல்ல இது. ஆபத்தை தடுக்க வேண்டிய அவசியம் இப்போது. அதைப் புரிந்து செயல்படவேண்டியது கட்டாயக் கடமையாகும்!
மதச்சார்பின்மை, ஜாதி ஒழிப்பு, சமுகநீதிகாத்தல், போன்ற பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் நிலை நிறுத்த, மூன்றாவதாக ஓர் அமைப்பு வலுவாக இல்லாத நிலையில், இந்த இரண்டுகட்சிகளையும் காப்பாற்றி களத்தில் நிறுத்த வேண்டிய பொறுப்பு தாய்க் கழகத்திற்கு உண்டு. அதைத்தான் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்கிறார். இதை கலைஞர் நிச்சயம் அறிவார்!
மற்றவர்களும் அறிந்து செயல்படுவதே நல்லது.
தி.மு.க அதிமுகவிடம் ஒற்றுமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.ஊழலற்ற, சாராயமற்ற ஆட்சி நடத்த இவரும் முடிவெடுத்தால் பா.ஜ.க. என்றுமே தமிழகத்தில் தலைகாட்ட முடியாது!
இதில் இருகட்சிகளும் போட்டிபோடுவதுதான் தமிழர்க்கு நலம்பயக்கும். இருகட்சிகளின் இளைய தலைவர்களுக்கு நிதானம், கூர்நோக்கு அவசியம். எதிரிகளின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் இருக்கவும்; உண்மையான நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் யார் என்பதை அறியவும் அது உதவும்.
மஞ்சை.வசந்தன்
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்:தி.க.செயல்பாடுகள்! ஜெயலலிதா மரணத்திற்குப் பின்:தி.க.செயல்பாடுகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.