சமூகத்தை தூய்மையாக்கும் இளைஞர் படை!
ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராடும் இளைஞர் படை, தமிழகத்தின் கலைகளை வளர்ப்பதைப் பற்றி நேற்றுப் பார்த்தோம். இன்று சமூக அக்கறையுடன் அவர்கள் செயல்படுவதைப் பற்றிப் பார்ப்போம்.
சென்னை மெரினா கடற்கரைக்குள் நுழையும் இளைஞர்களில் பலர் கைகளில் கையுறைகளுடன் நுழைகிறார்கள். முதலில் சுகாதாரம் கருதி பாதுகாப்புடன் வருகிறார்கள் என நினைத்தால், நம்மைக் கடந்து சென்றவர் திடீரென குனிந்து கீழே இருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து கையில் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டு சென்றார். அவரைப் பின்தொடரலாம் எனக் கூட்டத்துக்குள் புகுந்து சென்ற போது, எதிரே வரும் யாரையும் பொருட்படுத்தாமல் கண்ணில் படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பைக்குள் திணித்துக்கொண்டு சென்றார். அவரைப் பார்த்த சிலரும் அவர்களுக்குக் கீழே இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து அவரது பைக்குள் போடத் தொடங்கினார்கள். அண்ணா சதுக்கத்திலிருந்து ஒளவை சிலை வரை வந்த அவர், ஒரு இடத்தில் தனது குப்பை மூட்டையை போட்டுவிட்டுச் சென்றார். அந்த இடத்தில், பெரிய பெரிய மூட்டைகள் இருந்தன. அவரைத் தொடர்ந்து சென்று அழைத்துப் பேசியபோது, தனது பெயர் ராஜ்குமார் என்றார். டைடில் பார்க்கில் வேலை செய்யும் அவர் ஏன் இதைச் செய்கிறார் என்று கேட்டோம். பதில் சொன்னார்.
ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்சதை செஞ்சிகிட்டு இருக்காங்க. யாருமே சும்மா இல்லை. பெண்கள் சாப்பிட இருக்க பொருட்களை கொடுக்குறாங்க. ஆண்களில் பலர் டிராஃபிக் கிளியர் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் சாயங்காலம் வந்தப்ப பலர் குப்பைகளை எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அவங்க இப்ப வீட்டுக்கு போயிருக்காங்க. காலைல வருவாங்க. அப்ப அவங்களுக்கு நிறைய வேலை இருக்கக்கூடாதுன்னு நானும் என் பிரெண்ட்ஸும் ஆளுக்கு கொஞ்சம் இடமா பிரிச்சு குப்பைகளை எடுத்துக்கிட்டு இருக்கோம். யார் கொஞ்சமா குப்பையை எடுக்கிறாங்களோ, அவங்க தான் ட்ரீட் கொடுக்கணும்னு பந்தயம் கட்டிருக்கோம். அதனால எல்லாரும் வேகவேகமா வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. வர்றேன் பாஸ். என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்பின் மெரினா முழுவதும் ஒரு ரவுண்டு வந்தபோது, இவர்களில்லாமல் பலரும் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிந்தது. போராட்டம் நடைபெறும் இடங்கள் மட்டுமல்லாமல், கடற்கரையை அலை தொடும் இடம்வரை இவர்களது பணி தொடர்கிறது.
நேற்று இரவு மட்டும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் மெரினாவில் கூடியிருந்தார்கள். மிகப்பெரிய கடல் எனப் பெயர் பெற்ற மெரினாவில் நடந்துசெல்லக்கூட இடமில்லாமல் நெரிசல் ஏற்பட்ட வரலாற்றுச் சாதனையை இந்த மாணவர் போராட்டம் நடத்திக்காட்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பகல் - இரவு என இரண்டு ஷிஃப்டுகளாக பிரித்து இளைஞர்கள் கூடுகிறார்கள். யாரும் சொல்லிக்கொடுத்ததல்ல இது. இரவில் இருந்தவர்கள் பாவம் என பகலில் சிலர் வருவதும், இரவில் இருந்தவர்கள் பகலில் கூட்டம் சேரத் தொடங்கியதும் செல்வதென ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டிருந்தது மெரினா கடற்கரை.
தன்னார்வலர்கள் என எந்தக் குழுவும் பிரித்துவிடப்படவில்லை. டிராஃபிக் கிளியர் செய்ய யார் நினைத்தாலும் அவர்கள் தன்னார்வலர்கள் தான். குப்பைகளை அகற்ற யார் நினைத்தாலும் அவர்கள் தன்னார்வலர்கள் தான். சாப்பாடு விநியோகம் செய்ய யார் முடிவெடுத்தாலும் அவர்கள் தன்னார்வலர்கள் தான். எவ்வித கேள்விகளும் இல்லாமல் பொருட்கள் கைகளில் கொடுக்கப்படுகின்றன. இங்கு தன்னார்வலர்களாக இருக்கத் தேவையான ஒரே தகுதி உதவி செய்யவேண்டும் என்ற உணர்வு மட்டும்தான். நாமும் சிலமணிநேரம் டிராஃபிக் கிளியர் செய்ய நின்றோம். முதல் ஒருமணிநேரத்துக்கு எந்தக் கேள்வியும் யாரும் கேட்கவில்லை. நீண்ட நேரமாக நமக்கு எதிர்திசையில் நின்றிருந்தவர் அருகேவந்து இந்தாங்க பிஸ்கெட் சாப்டுங்க என்றார். பிஸ்கெட்டைக் கொடுத்ததும் தொடர்ந்து கருப்பு காப்பியும், தண்ணீர் பாட்டிலும் கைகளுக்கு வந்தன.
சரியாக இரவு மூன்று மணிக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. எந்தப் பகுதியில் கேட்டாலும் தண்ணீர் இல்லை. சில மூட்டைகள் மட்டும் தான் இருந்தன. சாலையில் பலமணிநேரங்களாக நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தியவர்களில் முக்கால்வாசி தன்னார்வலர்கள் தண்ணீர் இருக்கா? எனக் கேட்டுவிட்டனர். உடனே, இந்தப் போராட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட நிதியுதவியிலிருந்து பணத்துடன் பறந்த சிலர் 30 நிமிடத்தில் திரும்பவந்தனர். கொண்டுபோன பணத்தை அப்படியே கொண்டுவந்துக் கொடுத்துவிட்டு, கடைக்காரர் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக தெரிவித்தனர். ஒரு வண்டி தண்ணீர் மூட்டைகள் ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு மூட்டைகளென பறந்து சென்றது. அந்தவண்டி விநியோகத்தை முடிக்கும் வரை, டிராஃபிக் நிறுத்தப்பட்டது. தன்னார்வலர்கள், வாகனங்களில் நின்றிருந்தவர்களிடம் விஷயத்தை சொன்னதும் பரவாயில்லை நிற்கிறோம் என்று இன்முகத்துடன் சொன்னார்கள்.
சாலையில் நிற்கும் தன்னார்வர்களுக்கு அவர்களைக் கடந்து சென்ற அனைவரும் கைகொடுத்துவிட்டு, சூப்பர் பாஸ் என்று சொல்லி உத்வேகம் கொடுத்தனர். நிற்கமுடியாமல், ஒருவர் சாலையில் உட்கார்ந்து எழுந்திருப்பதைப் பார்ப்பவர்கள் உடனடியாக அவரை மாற்றிவிட்டனர். சிலரை கட்டாயப்படுத்தி ஓய்வெடுக்கச் சொன்னார்கள். திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டலிலிருந்து ஒரு வண்டி முழுக்க ஆயிரம் பிரியாணி பொட்டலங்கள் வந்து சேர்ந்தன. வரிசையில் நின்றிருந்தவர்களிடம் ஒவ்வொன்றாகக் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலங்கள் 20 நிமிடத்தில் தீர்ந்துபோயின. தொடர்ந்து வந்த புளியோதரை, எலுமிச்சை சாதம் ஆகியவை காஞ்சிபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக ஓட்டுனர் பூபதி பாண்டி தெரிவித்தார். இன்னொரு சின்ன யானை வண்டியில் வந்து சேர்ந்த சப்பாத்திப் பொட்டலங்களும், சர்க்கரை டப்பாக்களும் ஆந்திராவிலிருந்து வந்திருக்கிறது. இன்னொரு தக்காளி சாதம் வண்டி சென்னையைச் சேர்ந்தது. கன்னியாகுமரியிலிருந்து நண்பர் அனுப்பிவைத்ததாக, சென்னையைச் சேர்ந்த புவன் தனது வண்டியில் கொண்டுவந்திருந்தார்.
இவர்கள் இத்தனை வேலையையும் அலுப்பின்றி செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள், மைக்கைப் பிடித்துப் பேசும் மக்கள். இத்தனை ஆண்டுகள் எப்படி பாதிக்கப்பட்டோம் என்று விவரமாக சொல்கிறார்கள். சென்னை பெருவெள்ளத்தின்போதே இதைச் செய்திருக்கவேண்டும் என வருத்தப்படுகிறார்கள். இங்கு இருக்கும் எத்தனையோ பேர் உதவியிருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்கிறேன். நன்றி என்று சைதாப்பேட்டையைச் சேர்ந்த வாசு பேசினார். மேடையில் பேசும் ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கிறது. ஆனால், அந்த அரசியலை துளியும் வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். பேச்சு தான் சார்ந்த கட்சியின் திசையில் பயணிக்கத் தொடங்கியதுமே, பேச்சை நிறுத்தி சாரி, நான் வேற எங்கயோ போறேன் என்று தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் தெளிவும் அவர்களிடையே இருப்பதால் தான் நான்கு நாட்களைத் தாண்டி இந்தப் போராட்டம் சக்தி குறையாமல் சென்றுகொண்டிருக்கிறது. அதிலும் கலைக்குழுவினர் ரகளை செய்கிறார்கள், தமிழ்க் கலைகளிலிருந்து வெஸ்டர்ன் மியூஸிக் வரை இசைத்து மக்களை உற்சாகமாக வைத்திருக்கின்றனர். ஆனால், சொந்த உரிமைக்காகப் போராட வைத்துவிட்டார்களே என்ற ஆதங்கம் பேசுபவர்களிடம் தென்படுகிறது. சமயத்தில் கெட்டவார்த்தைகளையும் பயன்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்கிறார்கள். அரசியல் கட்சிக் கூட்டங்களில் கேட்காத வார்த்தைகள் இல்லை என்பதால், மக்களும் சிரிப்புடன் கடந்துவிடுகிறார்களே தவிர நொந்துபோவதில்லை.
எங்கிருந்தோ மரக்கன்றுகள் வந்து வண்டி வண்டியாக இறங்குகின்றன. போராட்டங்கள் நடைபெறும் மற்ற இடங்களைவிட, சென்னையில் அதிக மரக்கன்றுகளை நடவேண்டும் என்று பல இடங்களிலிருந்து பலராலும் மரக்கன்றுகள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. வர்தா புயலினால் காணாமல் போன மரங்கள் இருந்த இடத்திலேயே இந்த மரக்கன்றுகளை நடவேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த ஒரு போராட்டத்தின் மூலம் எத்தனை நன்மைகளை தமிழகத்துக்குச் செய்யமுடியுமோ, அத்தனையையும் செய்துவிடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் இந்த இளைஞர் படை எதையும் செய்யும். ஜல்லிக்கட்டு, இவர்களுக்கு மிகவும் சாதாரணமான செயல். இவர்கள் இப்போது சுத்தப்படுத்திக்கொண்டிருப்பது மெரினாவை மட்டுமல்ல, சமூகத்தையும் சேர்த்துத்தான்.
-சிவா
சமூகத்தை தூய்மையாக்கும் இளைஞர் படை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:34:00
Rating:
No comments: