மதரஸாக்கள் குறித்த பாஜக எம்.பி,யின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சமூகங்களுக்கிடையே பிரிவினையையும், வன்முறையையும் தூண்டும் விதத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,க்கள் மற்றும் அதன் தலைவர்கள் தொடர்ந்து கண்டனத்திற்குரிய கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

தென் மாநிலங்களில் பழிக்காத லவ்-ஜிகாத் போலி பிரச்சாரத்தை வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேஷ், மத்தியபிரதேஷ் மற்றும் பீகார் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் பிரதிநிதிகள் பரப்பி வருகின்றனர்.

சமீபத்தில் பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் 1க்கு 100 என்ற விதத்தில் முஸ்லிம் பெண்களை இந்துக்களாக கட்டாயமாக மாற்ற வேண்டும் என்றும், முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில் தான் கலவரம் ஏற்படுகிறது என விஷ கக்கும் கருத்தினை தெரிவித்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டினார்.

இந்நிலையில் உ.பி உன்னாவோ தொகுதி எம்.பி. சாக்ஷி மகாராஜ், மதரஸாக்களில் தீவிரவாதம் மற்றும் லவ்-ஜிகாத் போதிக்கப்படுவதாகவும், மதரஸாக்களிலிருந்து தீவிரவாதிகளும், ஜிகாதிகளும் உருவாக்கப்படுகின்றனர் என்ற கண்டனத்திற்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மதரஸாக்களில் மாணவர்களுக்கு தேசியவாதம் பற்றி போதிக்கப்படுவதில்லை. குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தின் போதும் மதரஸாக்களில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதில்லை. தேசியவாதத்துடன் எந்த ஒற்றுமையும் இல்லாத மதரஸாக்களுக்கு அரசு நிதியை வழங்கிக்கொண்டிருக்கிறது என பகைமையை தூண்டும் கருத்துக்களை கூறியுள்ளார். பாஜக எம்.பியின் இந்த கருத்து கடும் கண்டனத்திற்குரியது.

மதரஸாக்கள் என்பது ஒழுக்கத்தினையும், ஆன்மீக கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்விச்சாலையே அன்றி பாஜக எம்பி சாக்ஷி கூறுவது போன்று தீவிரவாதத்தை பரப்புவதற்காகவும், லவ் ஜிதாத்தை பரப்புவதற்கும் அல்ல. மதரஸாக்களில் தேசியம் குறித்து போதிக்கப்படுவதில்லை எனக் கூறும் பாஜக எம்.பி சாக்ஷி, தங்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை அலுவலகத்தில் இன்றுவரை தேசிய கொடி ஏற்றப்படாத செய்தியினையும் அளித்திருக்கலாமே.

ஆனால் இன்றுவரை நாட்டின் பல்வேறு மதரஸாக்களில் தேசிய கொடியினை ஏற்றும் வழக்கம் உள்ளதை மறைத்து, முஸ்லிம்கள் தேசப் பற்று இல்லாதவர்கள் என்பது போல சித்தரிக்கும் வகையில், அவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் அவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மதரஸாக்களை நவீனப்படுத்த 100 கோடி ரூபாயை ஒதுக்கிவிட்டு, மற்றொரு புறத்தில் இதுபோன்று மதரஸாக்களுக்கு எதிராக விஷக் கருத்துக்களை கட்சியின் தலைவர்கள் மூலம் பரப்புவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. உ.பி தேர்தலை முன்னிலைப்படுத்தி பாஜ கட்சியால் பரப்பப்பட்ட லவ்-ஜிகாத் பிரச்சாரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படியென்றால் என்ன? என எதுவுமே தெரியாதது போல கேட்டதும், தேர்தல் ஆதாயத்திற்கான பிரச்சாரங்கள் தாம் இதுபோன்றவை என தெளிவாகத் தெரிகிறது.

தேர்தல் வரும் காலமெல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடையே பிளவை உண்டாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து செய்து வருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

ஆகவே சமூகங்களுக்கிடையே வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துக்களை பரப்பும் பாஜக எம்.பிக்கள் மற்றும் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும். இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரங்களை பாஜகவும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதரஸாக்கள் குறித்த பாஜக எம்.பி,யின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்! மதரஸாக்கள் குறித்த பாஜக எம்.பி,யின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 07:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.