பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் உடனடித் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவதற்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:
மார்ச் 2014-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 7,548 மாணவ, மாணவிகளில் 7,248 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் தோல்வியடைந்த 263 பேர் உடனடித் தேர்வு எழுதி, 181 மாணவர்கள் தேர்ச்சியடைந்து உயர்கல்விகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
மார்ச் 2014-ல் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 9,161 மாணவ, மாணவிகளில் 8,458 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளைச் சேர்ந்த 607 மாணவ, மாணவிகள் உடனடித்தேர்வு எழுதி 245 பேர் தேர்ச்சி பெற்று மேல்படிப்பை தொடர்கின்றனர். தோல்வியடைந்த மாணவ, மாணவிகளில் சிலர் ஐ.டி.ஐ சேர்ந்துள்ளனர். எந்த படிப்பிலும் சேராத 159 மாணவ, மாணவிகள் உள்ளனர்.
தேர்வில் தோல்வியடைந்தால் மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்புவதும், மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் நடைபெற்று வந்தது. இந்நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தால், பொதுத்தேர்வில் தோல்விடைந்தவர்களை உடனடித் தேர்வில் பங்கேற்க வைத்தனர். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு அதிகளவில் வெற்றி பெற்றனர்.
எனவே தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் தங்களால் படிக்க இயலவில்லை, படிப்பு வராது என்று மனம் தளர தேவையில்லை.
தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களே அதிகம் உள்ளனர். அனைவரும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்று பொதுத்தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த ஆண்டு மேல்நிலைக்கல்வி, கல்லூரிக் கல்வியில் சேரவேண்டும். அதற்கான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும்.
பெற்றோரும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். பாலு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத், நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.