மத்திய அரசின் செயல்பாடு தமிழக நலன்களுக்கு எதிரானது-எஸ்.டி.பி.ஐ

சென்னை: பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு தமிழக மற்றும் இந்திய நலன்களுக்கு எதிரானது என்று எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது இன்று வெளிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை மக்கள் பிரச்னைகளை மட்டுமே பேசிவந்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க இயலாமல் மக்களின் உணர்வுகளை திசை திருப்பும் வகையில் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருவது பாரதிய ஜனதா கட்சியின் இரட்டை நிலையினை தெளிவுபடுத்துகிறது.

ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபருக்கு பகவத்கீதையை அன்பளிப்பாக கொடுத்ததும், இந்தியாவில் மதசார்பற்றவர்கள் தம்மை பற்றி பேசுவதற்கு தீனி கிடைத்துவிட்டது என கூறியதும் இந்திய தேசத்தின் மதச்சார்பின்மையை கேலி கூத்தாக்கிய செயலாகும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பல்வேறு சாதி, மத, இன, மொழிகளை கொண்ட மக்கள் வாழ்கின்ற மதச்சார்பற்ற தேசத்தின் பிரதமர் தன்னை அனைத்து இந்திய மக்களின் பிரதிநிதியாக காட்டுவதற்கு பதிலாக ஒரு மதம் சார்ந்த நபராக மட்டுமே அடையாளப்படுத்தும் நடவடிக்கை எப்படி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். அனைத்து மக்களும் கொடுக்கின்ற வரிப்பணத்தில்தானே அரசாங்கம் இயங்குகிறது. அரசாங்க செலவில் செல்கின்ற பிரதமர் இந்தியாவின் கொள்கைக்கு முரணாக பேசுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்.

மேலும் இலங்கை சென்ற பாரதீய ஜனதா கட்சியின் சுப்ரமணிய சுவாமி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதத்தில் கருத்துக்களை கூறியதும், தமது கருத்துக்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று கூறியதும் மிகவும் கண்டிக்கதக்கதாகும். இது தமிழக மீனவர்களுக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சியின் செயல்திட்டத்தை சுப்ரமணிய சுவாமி செயல்படுத்தியதாக கருத முடிகிறது.

அதே போல் கேரளா சென்ற தமிழக பா.ஜ.க.வை சார்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்துக்கள் ஒன்றுபட்டிருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று தமிழ்நாட்டுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். பா.ஜனதா கட்சியின் தலைவர்களும், பிரதமர் உள்ளிட்ட பாஜக அமைச்சர்களும், தமிழக நலன்களுக்கு எதிராகவும், இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கது. இது இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறைக்கு உகந்ததல்ல" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் செயல்பாடு தமிழக நலன்களுக்கு எதிரானது-எஸ்.டி.பி.ஐ மத்திய அரசின் செயல்பாடு தமிழக நலன்களுக்கு எதிரானது-எஸ்.டி.பி.ஐ Reviewed by நமதூர் செய்திகள் on 02:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.