நாகூரில் அப்பாவி இளைஞர்கள் கைது : உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

கடந்த ஆகஸ்ட் 30 அன்று நாகூர் பட்டினச்சேரி சீராளம்மன் கோவில் பூச்சொறிதல் திருவிழா ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும்
அதை ஒட்டி உருவாகியுள்ள பதட்ட நிலை ஆகியவை தொடர்பான உண்மைகளை அறிய உருவாக்கப்பட்ட குழு, மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் (NCHRO) தேசிய தலைவர் பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் கடந்த 23ஆம் தேதி பகல் முழுவதும் நாகூரில் பலரையும் சந்தித்தது.
அன்றைய நிகழ்வில் தாக்கப்பட்ட இளைஞர்களான ரஞ்சித், பிரபு, காட்டுப்பள்ளி ஜமாஅத் தலைவர் எம்.எம்.தாஹிர், செயலர் முகம்மது தாஜுதீன், நாகூர் ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே நிஜாமுதீன், தற்போது கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்கள், விடுதலைச் சிறுத்தை அமைப்பின் முன்னாள் நகரச் செயலர் முருகன், த.மு.மு.க மாவட்டத் தலைவர் ஜபருல்லா முதலானோரைச் சந்தித்தது. காவல்துறைக் கண்காணிப்பாளர் அப்போது விடுப்பில் இருந்ததால் இந்தப் பிரச்சினையை விசாரித்து வரும் நாகை க்ரைம் பிராஞ்ச் துணைக் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் அவர்களிடமும் விரிவாகப் பேசியது.
மறுநாள் மாலை நாகையில் செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் பேரா.அ.மார்க்ஸ் நாகூர் பதற்றம் குறித்த உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிட்டு அவர் கூறுகையில்: கடந்த ஆகஸ்ட் 30 தேதி மியான் தெருவில் நடந்த சம்பவம் தற்செயலாக நடந்தது என்றும், பெருந்திரளான மக்கள் ஊர்வலத்தில் வரும் போது காவல்துறை ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று காவல்துறையின் அலட்சியத்தை கண்டித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "ரஞ்சித், பிரபு தாக்கப்பட்ட சம்பவம் லேசான தள்ளு முள்ளு என்றும் அதற்காக காவல்துறை கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது" என்றார். மேலும், இந்த வழக்கில் கைது செய்துள்ள மற்றும் சேர்த்துள்ள பலரும் அப்பாவிகள் என்று பாதிக்கப்பட்ட தரப்பும், காவல்துறை அதிகாரிகளில் சிலரும் உறுதிபடுத்துகின்றனர்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தவறாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட அனைவரையும் இந்த வழக்கில் இருந்து உடனடியாக காவல்துறை நீக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையை கேட்டுக்கொண்டார். இடைக்கால அறிக்கையையில் தெரிவித்துள்ள குழுவின் பரிந்துரையை ஏற்று அப்பகுதியில் அமைதி நிலவிட மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இக்குழுவில் பேரா.அ.மார்க்ஸ், தேசிய தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, வழக்குரைஞர் தை கந்தசாமி (தலித் பண்பாட்டுப்பேரவை), திருத்துறைபூண்டி, மு.சிவகுருநாதன் (மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம்), திருவாரூர், அப்துல் காதர் (சமூக ஆர்வலர்), திருத்துறைபூண்டி, முஹம்மது ஷிப்லி, துணை ஆசிரியர் (மக்கள் ரிப்போர்ட்), சென்னை, அபுஃபைசல் (பத்திரிக்கையாளர்), சென்னை.ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
நாகூரில் அப்பாவி இளைஞர்கள் கைது : உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை நாகூரில் அப்பாவி இளைஞர்கள் கைது : உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை Reviewed by நமதூர் செய்திகள் on 22:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.