“ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தாதீர்கள்!’’

“ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தாதீர்கள்!’’

வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் பேட்டி
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்னும், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னும் பணப் பட்டுவாடா என்றும் ஆர்.கே.நகரில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தாண்டவமாடுகின்றன என்றும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்கிறார்கள். பாஜக தலைவர் தமிழிசை ஒரு படி மேலே போய் வாக்குப் பதிவு அல்ல வாக்கு விற்பனை நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்நிலையில் வடசென்னை தமிழ் சங்க தலைவரான இளங்கோ இதுபற்றி நம்மிடம் மிகவும் வேதனை தெரிவித்தார். ஆர்.கே.நகர் என்ற ஒட்டுமொத்த தொகுதி மக்களையும் அனைத்துக் கட்சிகளும் ஊடகங்களும் அவமானப்படுத்துவதாகவும் தெரிவித்த அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.
பொதுவாக அனைத்துக் கட்சியினருமே ஆர்.கே.நகர் மக்களை விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று சொல்கிறார்களே ?
தேர்தலுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் 1960களில் இருந்தே தொடங்கிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள். ஆர்.கே.நகரில் ஒரு லட்சத்துக்கு 70 ஆயிரம் ஓட்டுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் ஒவ்வொரு வாக்கும் பணம் கொடுத்து வாங்கப்பட்டிருப்பது சாத்தியம் இல்லாதது. மேலும் ஆர்.கே.நகரில் இருக்கும் பெரும்பான்மையான மக்கள் அமைப்பு சாராத் தொழிலாளர்கள்,கூலி வேலைக்குச் செல்பவர்கள். கடுமையான உழைப்பாளிகள், உழைப்பின் மூலமே தங்கள் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக அவர்களைப் பணம் வாங்கிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலம் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
அப்படியென்றால் பணம் கொடுத்ததாக வந்த காட்சிகள், செய்திகள் பொய்யா?
சமூகத்தில் எல்லாத் தரப்பினரும் இருக்கிறார்கள். இன்று அதிமுகவில் கட்சிக்கார்களுக்குக்கூடப் பணம் கொடுத்திருக்கிறார்கள். தன் கட்சிக்காரனுக்கே பணம் கொடுத்துத் தன் வாக்கை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் அந்தக் கட்சி இருக்கிறது என்றால் அது யாருக்கு அவமானம்? இதை வைத்து ஒட்டுமொத்த ஆர்.கே.நகர் வாக்காளர்களையும் எப்படி பணம் வாங்கிவிட்டார்கள் என்று சொல்ல முடியும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியினர் வாங்கிவிட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களை சில ஆயிரங்கள் கொடுத்து வாக்கு செலுத்தும் அளவுக்கு வாழ்க்கைத் தரத்தோடு வைத்திருப்பது யார்? அரசியல்வாதிகள்தானே. அப்படியென்றால் மக்களை விட அரசியல் கட்சியினர்தான் அவமானப்பட வேண்டும்.
தினகரனின் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்ன விஷயம் என்றால் ஜெயலலிதாவுக்கு மக்கள் திரளாக வந்து ஓட்டு போட்டார்கள். 2015 ல் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் நின்று ஜெயித்து ஒரு வருடமாகத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மீண்டும் நின்று முதல்வராகிறார். பின் இறந்துவிடுகிறார். இப்போது மக்கள் ஜெயலலிதாவின் வாரிசு யார் என்ற போட்டியில் வாக்களித்திருக்கிறார்கள். அதன் முடிவுதான் இந்தத் தேர்தல் முடிவு. இதனால் நான் தினகரனின் ஆதரவாளர் என்று நினைத்துவிடாதீர்கள்.
ஆர்.கே.நகர் மக்கள் என்றால் அறியாதவர்கள் என்றும் புரியாதவர்கள் என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தினம் தினம் செய்தித் தாள் படிக்கிறார்கள், செய்தித்தாள் பார்க்க இயலாதவர்கள் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை எல்லாம் பார்க்கிறார்கள். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சேரிகளிலும், டீக்கடை வாசல்களிலும், நாஸ்தா கடைகளிலும் ஆர்.கே.நகர் மக்கள் விவாதம் நிகழ்த்துகிறார்கள். எனவே மக்களுக்கு எதுவும் தெரியாது என்று யாரும் கணக்கு போடாதீர்கள்.
பணம் பணம் என்று கூச்சலிடுவதை விட ஆர்.கே. நகர் மக்களின் அரசியல் முடிவை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! பணத்தைக் கொடுத்து ஒரு சிலரை விலைக்கு வாங்கலாம். எல்லோரையும் விலைக்கு வாங்க முடியாது. பணம் கொடுத்தவர்கள்தான் ஜெயிக்க வேண்டுமென்றால் இங்கே அதிமுகதான் தான் ஜெயித்திருக்க வேண்டும்” என்று முடித்தார் இளங்கோ.
-ஆரா
“ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தாதீர்கள்!’’ “ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தாதீர்கள்!’’ Reviewed by நமதூர் செய்திகள் on 23:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.