குஜராத் வளர்ச்சி மாடலில் மறைந்துள்ள உண்மை!

சிறப்புக் கட்டுரை: குஜராத் வளர்ச்சி மாடலில் மறைந்துள்ள உண்மை!

இந்திரா ஹிர்வே

குஜராத் மாடல் என்றால் என்ன? எளிமையாகச் சொல்லப்போனால், 2002-03 முதல் 2011-12 ஆண்டு வரையிலான காலகட்டம் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், குஜராத் மிகப் பெரிய வளர்ச்சி விகிதத்தை அடைந்தது. வளர்ச்சியைத் தூண்டும் சக்தியாக அன்றைய முதல்வர் நரேந்திர மோடியின் நவதாராளமயக் கொள்கைகள் குறித்த புதுமையான நடவடிக்கைகள் இருந்தன.
என்னதான் செய்தார்கள்?
இவரது வளர்ச்சி உத்தி மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. பெருநிறுவன முதலீடுகளை ஊக்குவிக்க மிகப் பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டன; பெருநிறுவன யூனிட்டுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய நிர்வாகம் தயார் நிலையில் இருந்தது; பெரிய அளவில் முதலீடுகளைக் கவர ஊக்கத் தொகைகள் மற்றும் மானியங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டன. உள்கட்டமைப்பு வளர்ச்சி சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் மின்சாரம் ஆகிவற்றில் கவனம் செலுத்தியது. சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்க வழிசெய்யப்பட்டன.
ஒற்றைச் சாளர முறையில் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அத்தனை நடைமுறைகளையும் விரைவாகத் தீர்த்துவைப்பது, சுலபமான வங்கிக் கடன், தேவைப்பட்டால் பெருநிறுவனப் பிரிவுகள் மற்றும் அவற்றின் முக்கிய ஊழியர்களுக்கு இதர துணைச் சேவைகள் வழங்குவது ஆகியவற்றில் அரசு நிர்வாகம் கவனம் செலுத்தியது. முதலீடு தொடர்ந்து குவிவதற்கு வசதியாக அனைத்து நடைமுறைகளையும் துரிதப்படுத்துவதில் இதுதொடர்பான துறைகள் மிகவும் அதிரடியாகச் செயல்பட்டன. பெருநிறுவன முதலீட்டுக்கான ஊக்கத்தொகை, 2006-07 வரை (மத்திய அரசு தடை செய்யும்வரை) விற்பனை வரி மானியங்களையும் உள்ளடக்கியது. விற்பனை வரி மூலம் மாநில அரசுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தில் 40 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டது. விற்பனை வரி என்பது அரசு வருமானத்துக்கு மிக முக்கியமான ஆதாரம்.
நிலமும் வளமும்
அதற்குப் பிறகு, அரசு முதலீடு, வட்டி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் நிலம், நீர் விநியோகம் மற்றும் இயற்கை ஆதாரங்களிலும் மிக அதிகமான மானியங்களை அறிமுகம் செய்தது. முதலீடுகளின் அளவுக்கேற்ப மானியங்களும் அதிகரித்தன. மிகப் பெரிய தொழில்களுக்கு எந்தக் குறிப்பிட்ட விகிதமும் கிடையாது என்பதுடன் ஒவ்வொன்றும் தனித்தனியாக மதிப்பிடப்பட்டன. உதாரணமாக, டாட்டா - நானோ (சுஸூகி, ஹுண்டாய் முதலியவை போன்று) ஒட்டுமொத்தமாக ரூ. 30,000 கோடி மானியம் பெற்றது. பொதுவான மேய்ச்சல் நிலங்கள், தேசியப் பூங்காக்கள் பாசன வசதி உள்ள விவசாய நிலங்கள் ஆகியவற்றிலிருந்து பெருநிறுவனங்களுக்கான நிலங்கள் பெறப்பட்டன. விற்க இயலாது எனப் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அந்தப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டு அந்த நிலங்களும் இதற்காக விற்கப்பட்டன. இந்த நிலங்களுக்கான விலை ஏக்கருக்கு ரூ.1 முதல் தொடங்கின. வளர்ச்சியின் கடைசி ஆண்டுகளில் விலை அதிகரித்தது என்றாலும்கூட சந்தை விலையைவிட குறைவாகவே இருந்தன.
விரிவடைந்துவரும் உலகளாவிய சந்தைகளும் இந்த வளர்ச்சிக்கு உதவின. குஜராத், பெட்ரோ கெமிக்கல், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் மின்னணுவியல், விலை உயர்ந்த கற்கள், நகைகள் விவசாயப் பயிர்கள் உள்ளிட்ட அனைத்துப் பெரிய தொழில்களிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், சிறப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் குஜராத் உயர் விவசாய வளர்ச்சியைக் (7-8%) கண்டது. கிட்டத்தட்ட ஒன்பதாண்டு காலம் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்தது, மேம்படுத்தப்பட்ட விதைகள் குறித்த அரசின் கொள்கைகள் (பி.டி. பருத்தி பிரதானம்), கிருஷி ராத் மூலமான விரிவாக்கங்கள், நவீன விவசாய நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு 24 மணி நேர மின்சாரம் ஆகியவையும் இதற்குக் காரணம்.
ஆனால், 2011-12க்குப் பிறகு, ஏற்பட்ட வறட்சியும், அதன் காரணமாக ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையும் இந்த விகிதத்தை 3.7% அளவுக்குக் குறைத்தன. விவசாயம் மிகவும் குறைவான குறைந்தபட்ச ஆதரவு விலை (சாகுபடிச் செலவு மிக அதிகம்), மிகக் குறைவான பயிர் காப்பீடு (மிகச் சிறந்த பகுதிகளுக்குக்கூடப் பயிர் காப்புறுதி 10-12% அளவுதான்), விவசாயத்தில் பொது முதலீடு குறைந்துவருவது ஆகிய காரணங்களாலும் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அதோடு, வளர்ச்சி நிலையானதாகவோ (நீர்ப்பாசனத்துக்கான முக்கிய ஆதாரமான நிலத்தடி நீர் போதுமான முயற்சிகள் இல்லாததால் மிகவும் குறைந்துவருதல்) அல்லது சமமானதாகவோ (சிறு, குறு விவசாயிகள் அதிக நலன்களைப் பெறவில்லை) இல்லை. அதிகரித்துவரும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியம் நாட்டிலேயே இங்குதான் மிகவும் குறைவு.
வளர்ச்சியின் மறுபக்கம்
மிகப் பெரிய அளவிலான பெருநிறுவன முதலீடுகள் மற்றும் வளர்ச்சியினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்தத் தாக்கம் என்ன?
கார்ப்பரேட் யூனிட்டுகளுக்கு ஊக்கத் தொகைகளை வாரி வழங்கிய பின் பெருவாரியான மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக்கு வழங்க குஜராத் அரசிடம் போதுமான நிதி மிஞ்சியிருக்கவில்லை. குஜராத்தில் கல்விக்காக மாநிலத்தில் வருவாயில் 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே (விதிமுறையின்படி 5-6% இருக்க வேண்டும்) செலவிடப்படுகிறது. இதன் விளைவாக குஜராத்தில் உள்ள 45% தொழிலாளர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவோ அல்லது மிக மோசமான கல்வித்தரம்கொண்ட ஐந்தாம் வகுப்பு வரையில் படித்தவர்களாகவோ உள்ளனர். உயர் கல்வி அளவிலும்கூட இதே கல்வித் தரத்தின் விளைவாக, வேலையில்லாத பொறியாளர்கள் மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பொது வருமானத்திலிருந்து சுகாதாரத்துக்காக 4-6% செலவிட வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து விலகி, மிகவும் குறைவாக 0.8% சதவிகிதம் மட்டுமே செலவிடப்பட்டது. குஜராத், ஏறக்குறைய அனைத்து சுகாதாரக் குறியீடுகளிலிருந்தும் மிக வேகமாக சரிந்துவருகிறது. மாநிலத்தில் உள்ள நாற்பத்தி ஐந்து சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். உடல்நலன் பாதுகாப்புத் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் பெருமளவில் பின்தங்கியுள்ளதோடு மகப்பேறு கால இறப்பு விகிதம் குறைவதிலும் பின்தங்கியுள்ளது.
மாநிலத்தில் (ஹரியானாவுக்கு அடுத்து) மிக அதிகமான தொழிலாளர் பங்கேற்பு குறித்து அம்மாநிலத் தலைவர்கள் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். ஆனால், இவர்களில் 6.8 சதவிகிதம் பேர் முறைசார் (இந்த சதவிகிதம் பெரும்பாலான பிற மாநிலங்களில் அதிகரித்துவரும் போக்கோடு ஒப்பிடுகையில் குறைந்துவருகிறது) தொழிலாளர்கள். ஏறக்குறைய 93-94% தொழிலாளர்கள் முறைசாரா மற்றும் மரபுசார் துறைகளில் பணியாற்றி வருபவர்கள். இவர்கள் மிகவும் குறைவான வருமானத்துடனும் குறைந்த சமூகப் பாதுகாப்புடனும் வாழ்கின்றனர். இந்தியாவின் பிற முக்கிய மாநிலங்களைவிட குஜராத்தில் வருமான விகிதம் மிகவும் குறைவு. கடந்த பத்தாண்டுகளில் இது ஊதிய விகிதங்கள் பட்டியலில் கீழ் நோக்கிச் சரிந்துவருகிறது. ‘அதி நவீன’ தொழில்நுட்பத்துக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால், வளர்ச்சி மூலதனப் பெருக்க அடிப்படையில் இருந்தது. வளர்ச்சி வேலைவாய்ப்பின் நெகிழ்வுத் தன்மை உற்பத்தித் துறைகளுக்கு வேகமாகத் தாவியது. சுமாரான வருமானம் ஈட்டித்தரும் மிகப்பெரிய அளவிலான உற்பத்தி தொழில்களை உருவாக்குவதுதான் மாநிலத்தின் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த முனைப்பின் தோல்விதான் குஜராத்தில் தற்போது போராட்டங்கள் நடைபெறுவதற்கான காரணம்.
குஜராத்தில் 40-45% குடும்பங்களின் வாழ்வாதாரம் இயற்கை ஆதாரங்களையே (விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, வனவியல், மீன்பிடி தொழில்கள்) நம்பி இருக்கிறது. ஆனால், இந்த வளங்கள் கடுமையான மாசுபாட்டுடன், பெருமளவில் குறைக்கப்பட்டும், சீரழிக்கப்பட்டும் உள்ளதால் இவர்களது உற்பத்தித் திறன் குறைந்து, இந்தத் துறைகளின் வருமானம் மிக அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சி அதிகரித்துள்ளதாகப் போலியாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளப்படும் நிலையில் இதனால் பழங்குடி மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் இடங்களை விட்டுவிட்டு நகர்ப்புறச் சாலைகளில் அல்லது தற்காலிகக் கூடாரங்களில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களும் அம்மாநிலத்தின் குடிமக்கள்தான் என்பதை அரசு மறக்க வேண்டாம் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அடிக்கடி மாநில அரசிடம் கூறிவருவதில் எந்த வியப்பும் இல்லை.
குஜராத் மாடல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த விளைவாக இம்மாநிலத்தில் 40% மக்கள் பல பரிமாண வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசித்து வருகிறர்கள். வளர்ச்சியின் பலன் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. பெருவாரியான சாதாரண மக்களை இது சென்றடையவில்லை. ஏழை மக்களின் நலனுக்கான மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும்கூட அவற்றை நடைமுறைப்படுத்துதல் மிகவும் மோசமாக உள்ளது. சுருக்கமாக, குஜராத் மாடல் வளர்ச்சி என்று பெரிய அளவில் பேசப்பட்ட விஷயம் ஆழமில்லாதது; போலியானது.
(கட்டுரையாசிரியர் இந்திரா ஹிர்வே, அகமதாபாத்தில் உள்ள மேம்பாட்டுக்கான மாற்றுகளுக்கான மையத்தின் (Centre for Development Alternatives (CFDA) பொருளியல் பேராசிரியை.)
நன்றி: Thewire.in
தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்
குஜராத் வளர்ச்சி மாடலில் மறைந்துள்ள உண்மை! குஜராத் வளர்ச்சி மாடலில் மறைந்துள்ள உண்மை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.