ஓகி: தமிழக அரசு படுதோல்வி!

ஓகி: தமிழக அரசு படுதோல்வி!

கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று (டிசம்பர் 13) மனு அளித்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று, கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கிய ஓகி புயலினால் வரலாறு காணாத பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தமிழகத்திலுள்ள கட்சித்தலைவர்கள் கன்னியாகுமரி சென்று, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்தனர். கடந்த வாரம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கன்னியாகுமரி சென்று ஆய்வு செய்தார். அதன்பின், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்துப் பேசினார்.
கடந்த வாரம் கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களைச் சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அதுபற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். இன்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது துரைமுருகன், கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் மீட்புப்பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக, மீனவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே, கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசை ஆளுநர் வலியுறுத்த வேண்டுமென, பன்வாரிலாலிடம் திமுக சார்பில் கோரிக்கை மனு அளித்தார் மு.க.ஸ்டாலின்.
வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், இந்த மோசமான புயலில் இருந்து மக்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாக்க மாநில நிர்வாகம் முற்றிலும் தவறியிருக்கிறது என்பதே என்னுடைய கள மதிப்பீடாகும். மாநிலத்தின் முதலமைச்சரோ, இந்த துயரமான பேரிடர் குறித்து துளியும் கவலைப்படாமல், நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களிலும் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்” என்று மாநில அரசைக் கடிந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதோடு, காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வெளியிடும் தகவல்களில் இருக்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
”இந்த முரண்பாடான தகவல்கள், அரசு நிர்வாகம் முற்றிலுமாக தோல்வியடைந்திருப்பதையே உணர்த்துகிறது. இதன் மூலமாக, காணாமல் போன மீனவர்கள் பற்றியோ அல்லது பல்வேறு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் பற்றியோ உண்மையான, சரியான விவரங்கள் ஏதும் தமிழக அரசிடம் இல்லை என்பது தெளிவாகிறது. கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் பற்றிய எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான ஆயிரக்கணக்கான மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலை நீடிப்பது மீனவ மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. குமரி மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி அறவழிப் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.
அரசியல் சட்டப்படி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்ட ஒரு முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்றுவரும் ஆட்சி என்பதால், தமிழகத்தில் இதுபோன்ற பேரிடர்களை கையாண்ட முன் அனுபவமும், திறமையும் உள்ள தகுதியான அதிகாரிகள் இருந்தும், மீனவர்களை மீட்கும் பணியில் இந்த அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த அரசாங்கம் தொடர்வதால், மாநில நிர்வாகத்தில் இதுபோன்ற பேரிடர் நேரங்களில்கூடப் பல குழப்பங்களும், பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
களத்தில் உள்ள மிக மோசமான நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அவர்கள் தெரியப்படுத்தி, ‘ஒகி புயல்” பாதிப்புக்குள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை ‘தேசிய பேரிடர்’ மாவட்டமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்” என்று இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
ஓகி: தமிழக அரசு படுதோல்வி! ஓகி: தமிழக அரசு படுதோல்வி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.