தீர்ப்பு நிமிடங்கள்! திக் திக் ரிப்போர்ட்!

தீர்ப்பு நிமிடங்கள்!  திக் திக்  ரிப்போர்ட்!

2001ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேச வாய்ப்பில்லாமல் ஒரு துண்டுச் சீட்டில், ‘அநீதி வீழும் அறம் வெல்லும்’ என்று தன் கைப்பட எழுதிக் கொடுத்தார். கருணாநிதியின் அந்த வார்த்தைகள் 2ஜி தீர்ப்புக்கும் பொருந்தும் என்று உற்சாகப்படுகிறார்கள் திமுகவினர்.
திமுகவை ஒரு வரலாற்றுப் பழியில் இருந்து மீட்டிருக்கிறது 2ஜி வழக்கில் இன்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அளித்த தீர்ப்பு. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜா, திமுகவின் மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி சைனி.
இந்தத் தீர்ப்புக்கு முன்னால் பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த நிகழ்வுகளை மின்னம்பலத்துக்காக, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இருந்து வழங்குகிறார் வழக்கறிஞர் அருண் வைத்தியலிங்கம்.
பரபரப்பு பாட்டியாலா!
இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதை ஒட்டி டெல்லியிலுள்ள பாட்டியாலா நீதிமன்றம் நேற்றிலிருந்தே பரபரப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது. இன்று காலை பாட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்குள் ஜாமர் பொருத்தப்பட்டது. யாரும் அங்கிருந்து வெளியே தொடர்புகொள்ள முடியாது, வெளியே இருந்து யாரும் உள்ளே தொடர்புகொள்ள முடியாது என்ற நிலை நிலவியது. பாட்டியாலா என்பது சுமார் இருபது விசாரணை நீதிமன்றங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு. இதில் சைனி நீதிமன்றத் தீர்ப்புக்காக இன்று மற்ற நீதிமன்றங்களும் பரபரப்பில் சிக்கிக் கொண்டன.
இந்த நிலையில் இன்று தீர்ப்பை ஒட்டி ஆயிரக்கணக்கான திமுகவினர் நீதிமன்ற வளாகத்தில் கூடிவிட்டனர். டெல்லியின் கடும் குளிருக்கு இடையே செயல் தலைவர் ஸ்டாலின் டெல்லிக்கு அனுப்பிய முக்கியஸ்தர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், பொன்முடி ஆகியோர் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டனர். ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா உள்ளிட்ட ஏராளமானோர் வளாகத்தில் திரண்டனர்.
சிறைக்கு போடப்பட்ட பாதை!
காலை ஒன்பது முப்பது மணிக்கு திமுகவினர் திரளாகக் கூடியிருந்த நிலையில் பத்து மணி வாக்கில் டெல்லி காவல்துறையினர், தொழில் காவல் படையினர் ஆகியோர் திடீரென பெரிய பெரிய கயிறுகளை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவந்தனர்.
பாட்டியாலா என்பது விசாரணை நீதிமன்றங்களின் தொகுப்பு என்பதால் இந்த வளாகத்திலேயே கிளைச் சிறையும் இருக்கிறது. அதேபோல சைனியின் நீதிமன்றத்துக்குப் பின்னால் சுமார் இருபது முதல் ஐம்பது அடி தூரத்திலேயே ஒரு கிளைச் சிறை இருக்கிறது. நீதிபதி சைனியின் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பின்னால் இருக்கிற கிளைச் சிறை வரை அந்தக் கயிறுகளால் மூன்றடுக்காக ஒரு பாதை அமைத்தனர் காவல்துறையினர். அதாவது நீதிமன்ற வளாகத்தின் வாசலில் இருந்து சிறை வாசல் வரை அந்த கயிறுப் பாதை அமைக்கப்பட்டது. இதைப் பார்த்த திமுகவினருக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது.
ராசா வந்தார்!
காலை 10.20க்கு ஆ.ராசா நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரைச் சுற்றி கூட்டம் முண்டியடித்தது. திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் ராசாவை சூழ்ந்தனர். அப்போது ராசா, ‘தயவு செய்து எல்லாரும் வெளிய போயிடுங்க. கோர்ட் ஹால் வரைக்கும் சத்தம் கேட்குது. அது நல்லதில்ல. எல்லாரும் வெளிய போய் இருங்க’ என்று தனக்கே உரிய குரலில் கைகளை கூப்பி எல்லாருக்கும் வேண்டுகோள் கொடுத்தார். நீதிமன்ற வளாகத்துக்குள் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் வந்து காத்திருந்தனர். அனைவரது முகத்திலும் பதற்ற ரேகைகள் படர்ந்துகொண்டிருந்தன.
பாய் ஜாவோ பாய் ஜாவோ!
ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். வெளியே கூச்சல் அதிகமானதால் போலீஸார் குவிந்திருந்த திமுகவினரை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வெளியே திரண்ட திமுகவினருக்கு குழப்பம். ஒருவேளை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுவிட்டதோ என்று. ’பாய் ஜாவோ பாய் ஜாவோ’ என்று டெல்லி போலீஸார் இந்தியில் சத்தமாக சொல்லிக் கொண்டே திமுகவினரை விரட்டினர். இந்தியில் பாய் ஜாவோ என்றால் வெளியே போ என்று அர்த்தம். இதைக் கேட்ட திமுகவில் சிலர், ‘அட... வெளியே போக சொல்லிட்டாங்களாம். தீர்ப்பு சொல்லிட்டாங்களாம். வெளியே போக சொல்லிட்டாங்களாம்’ என்று உற்சாகத்தில் குதித்தனர். ஆனால் பின்னர்தான், கோர்ட் வளாகத்தில் இருந்து வெளியே போகச் சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டு வெளியேறினர். 
இடம் கிடைக்காத சுவாமி!
இந்த பரபரப்புக்கு இடையே சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்ற ஹாலுக்குள் வந்தார். அங்கு இடமே இல்லை. அமர்ந்திருந்த ஒரு பெண் வழக்கறிஞரிடம், இடம் கொடுக்குமாறு ஆங்கிலத்தில் ஏதோ பேசினார். அதற்கு அந்த பெண், ‘ ஹு ஆர் யு?’ என்று கேட்க அதிர்ந்து போனார் சுவாமி.
‘ i am de-facto complaintant|’ என்றார். அதாவது, ‘இந்த வழக்கு பதியப்படுவதற்குக் காரணமான முதன் முதலில் புகார் கொடுத்தது நான் தான்’ என்றார்.
அதற்கு அந்த பெண், ‘நீங்க யாரா இருந்தாலும் அங்க போய் நில்லுங்க’ என்று சொல்லிவிட்டார். இதனால் ஒரு ஓரமாக போய் நின்று கொண்டார் சுப்பிரமணியன் சுவாமி.
தீர்ப்பு நேரம்!
10.35 மணி அளவில் நீதிபதி ஓ.பி. சைனி நீதிமன்றத்துக்கு வந்தார். உள்ளே கனத்த மௌனம் நிலவியது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அந்த நிமிடத்தை எதிர்பார்த்துப் படபடப்போடு காத்துக் கொண்டிருந்தனர். நீதிபதி சைனி வந்ததும் சில நிமிடங்களில் தீர்ப்பு பெரிய பெரிய கட்டுகளாக அவரது மேசையின் முன் வைக்கப்பட்டது. 10.42 மணியளவில் தனது நீதிமன்ற இருக்கைக்கு வந்தார் நீதிபதி ஓ.பி. சைனி. அனைவருக்கும் க்ளைமேக்ஸ் பதற்றம் பற்றியது. அனைவரும் நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்தனர்.
எந்த விதமான முக பாவனையும் காட்டாமல் இருக்கையில் அமர்ந்த நீதிபதி நிமிர்ந்து பார்த்து, ‘இது இரண்டாயிரம் பக்கத் தீர்ப்பு. அதனால் முழுவதையும் வாசிக்க இயலாது. ஆல் ஆர் அக்யூட்டடு’ என்று ஒரே வரியில் சொல்லி முடிக்க... அனைவரும் வெடித்து அழுதுவிட்டார்கள் ஆனந்தத்தில்! இந்த வழக்கில் சி.பி.ஐ. சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி ஓ.பி.சைனி.
தீர்ப்பு பற்றிய தகவலை வெளியே ஓடிவந்து திமுக வழக்கறிஞர்கள் சொன்னதும் அந்த வளாகமே உற்சாகமானது. வெற்றி முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
சொத்துகள் ஒப்படைப்பு!
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் நீதிபதி ஓ.பி. சைனி, ‘வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர அனைவரும் வெளியே செல்லுங்கள்’ என்று உத்தரவிட்டார். பின் அனைவரும் தங்கள் ஜாமீனுக்காக கோர்ட்டில் ஒப்படைத்திருந்த தங்கள் சொத்துகளையும், ஆவணங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார். அதன்படியே அதற்கான படலங்கள் ஆரம்பித்தன.
2ஜி வழக்கும் விராட் கோலியின் ஊழலும்!
தீர்ப்பு வெளிவந்து உற்சாகமான நிலையில் திமுக வழக்கறிஞர்களும் டெல்லி வழக்கறிஞர்களும் பேசிக் கொண்டிருக்கையில்... ஒரு வழக்கறிஞர் 2ஜி வழக்கு பற்றி எளிய உதாரணம் சொல்லி விளக்கினார்.
‘கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள். அந்த ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தால் 36 ரன்கள் கிடைக்கும். இதுவே ஐம்பது ஓவர்களிலும் எல்லா பந்துகளிலும் சிக்ஸர் அடித்தால் 1,800 ரன்கள் அடிக்க முடியும். அதாவது ஐம்பது ஓவர்களில் அதிகபட்சமாக 1,800 ரன்கள் அடிக்க முடியும். ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய டீம் 360 ரன்கள்தான் எடுக்கிறது. அப்படியென்றால் நிச்சயம் மேச் ஃபிக்ஸிங் நடத்தி, இந்திய கிரிக்கெட் அணிக்கு 1,500 ரன்கள் இழப்பு ஏற்படுத்திவிட்டார் என்று கோலி மீது வழக்குப் போட்டால் எப்படி இருக்குமோ அதுதான் ராசா மீது போடப்பட்ட வழக்கு’ என்றார்.
தீர்ப்பு நிமிடங்கள்! திக் திக் ரிப்போர்ட்! தீர்ப்பு நிமிடங்கள்! திக் திக் ரிப்போர்ட்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.