மதுவிலக்கு குறித்த அமைச்சரின் பதில் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்கும் செயல்! எஸ்.டி.பி.ஐ தலைவர் அறிக்கை!


மதுவிலக்கு குறித்த அமைச்சரின் பதில் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்கும் செயல்!
எஸ்.டி.பி.ஐ தலைவர் அறிக்கை!
***************************************************************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நடப்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் அமலக்காக்கத்துறை கோரிக்கை மீதான விவாதத்தில் மதுவிலக்கு தொடர்பாக பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்; திருவள்ளுவர் காலம் முதலே மதுவிலக்கு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்த முடியாத ஒன்று. மதுவிலக்கை அமல்படுத்தினால் அது கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் வாய்ப்பாக மாறி விடும். அரசு கஜானாவுக்கு வரவேண்டிய பணம் சமூக விரோதிகளின் கைக்குச் சென்று விடும். மது விற்பனையை அரசு ஏற்று நடத்துவதன் மூலம் கள்ளச்சாராய இறப்புகள் குறைந்துள்ளன. தீமையிலும் இது ஒரு நன்மையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த பதில் அரசின் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்கும் செயலாகும். அமைச்சரின் இந்த பதில், அறிக்கைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், ஆனால் யதார்த்தத்தில் மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

மனிதர்களை சீரழிப்பதில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்ற வேறுபாடு கிடையாது. கள்ளச் சாராயத்தால் ஏற்படும் இழப்பை விட தற்போது டாஸ்மாக் கடைகள் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

கள்ளச்சாராயத்தை தடுக்கவே டாஸ்மாக் மதுபானக்கடை என அரசு ஒப்புக்கு அறிவித்தாலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்காகவே அரசு மதுக்கடைகளை செயற்படுத்தி வருகிறது என்பதை அமைச்சரின் பதிலிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.

மது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, அரசின் திட்டங்களுக்கு அரசு திருப்பி விடுகிறது. இதன்மூலம் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என கூறும் அமைச்சர், மதுவால் விளையும் தீமைகளையும் கவனிக்க தவறவிட்டுள்ளார் என நினைக்கிறேன்.

ஒருபுறம் அரசுக்கு வருமானமாக இருந்தாலும் மறுபுறம் லட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதன் காரணமாக வறுமை, தற்கொலை, கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் மது விற்பனையை அரசு விரும்பி ஏற்று நடத்தவில்லை என்று அமைச்சர் கூறினாலும், மறுபுறம் மதுவால் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் காரணமாக மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அரசு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது தமிழகம் முழுவதும் 6800 டாஸ்மாக் கடைகளையும், 4271 டாஸ்மாக் பார்களையும் அரசு நடத்தி வருகிறது. மது விற்பனையால் 2013-14 ஆண்டில் ரூபாய் 21,641 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

இலவசங்களை வழங்கி, வாக்கு வங்கியை அதிகரிக்கும் அரசியல் லாபத்துக்காக மதுபானக்கடைகளை அரசு செயல்படுத்தி வருகின்றது. மதுவால் கிடைக்கும் வருமானம் மூலம் அரசின் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் திறமையற்ற நிர்வாகத்தை பிரதிபலிக்கிறது. குடிகாரர்களை உருவாக்கி, குடிகளை அழித்து, குடி மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துவது மிகுந்த அவமானகரமானது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மதுப் பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்களின் எண்ணிக்கை 74.3 சதவீதமாக அதாவது முன்பைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழு சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்துள்ளது.

கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை. அதனை விடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்கவே மதுக்கடைகள் என கூறும் அமைச்சரின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

ஆகவே அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும். பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு உண்டான திட்டங்களை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும். மேலும் அரசுக்கு வருமானத்தை வேறு துறைகளின் மூலம் பெருக்கிக்கொள்ளும் வழிகளை கண்டறிந்து மது விற்பனையை அரசு நிறுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்...
மதுவிலக்கு குறித்த அமைச்சரின் பதில் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்கும் செயல்! எஸ்.டி.பி.ஐ தலைவர் அறிக்கை! மதுவிலக்கு குறித்த அமைச்சரின் பதில் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்கும் செயல்! எஸ்.டி.பி.ஐ தலைவர் அறிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 06:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.