காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசு மெத்தனம்: ஜவாஹிருல்லா!


ராமநாதபுரம்: காணாமல் போன 3 மீனவர்களை மீட்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மெத்தனம் காட்டுவதாக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீழக்கரையில் நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "மண்டபம் வடக்கு கரையிலிருந்து கடந்த 25ஆம் தேதி ஜான் கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில் ஜான்கென்னடி, எஸ்ரோ, டேனியல், வில்சன் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். படகு நடுக்கடலில் பழுதாகி நின்றதால் 4 பேரும் கடலில் குதித்துள்ளனர்.
இவர்கள் படகு விபத்துக்குள்ளான செய்தி கிடைத்ததும் பாம்பனில் உள்ள மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நான் தலையிட்டு கடலோரக் காவல்படை மற்றும் இந்திய விமானப்படை மூலமாக தேடுதல் நடவடிக்கையைத் தொடங்குமாறு கோரிக்கை வைத்தேன்.
ஆனால், அரசு நடவடிக்கை எடுக்க தவறியதால் பாம்பன் மீனவர்கள் தாங்களாகவே மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக படகின் சொந்தக்காரரான ஜான்கென்னடியை மட்டுமே மீட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களை மீட்க அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர்கள் அறிவித்த போது அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் மூன்று மீனவர்களையும் கண்டுபிடித்து விட்டதாக தவறான தகவலை தெரிவித்து மறியலைக் கைவிடச் செய்தனர். மேலும், மற்ற மீனவர்களைத் தேடும் தேடுதல் வேட்டையை தாமதமாக துவங்கியதால் மீனவர்களை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தால் மத்திய, மாநில அரசுகள் மீது மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்" என்றார்
காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசு மெத்தனம்: ஜவாஹிருல்லா! காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசு மெத்தனம்: ஜவாஹிருல்லா! Reviewed by நமதூர் செய்திகள் on 21:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.