எதற்காக இந்தக் கலைப்பு?


மத்திய திட்டக் குழு வேண்டாமென்று பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார். அதே சமயம், அதன் வேலையை வேறு எந்த அமைப்பிடம் - எப்படி ஒப்படைப்பது என்பதையும் யோசித்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாகப் பொதுமக்களும் கருத்துத் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்.
1938-ல் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த நேதாஜி, நாடு சுதந்திரம் அடைந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடலை அப்போதே தொடங்கிவைத்தார். மேகநாத் சாஹா என்ற அறிவியலாளர் நேதாஜியின் கட்டளையை ஏற்று, இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டினார் என்பதிலிருந்தே திட்டமிடலின் முக்கியத் துவத்தைப் புரிந்துகொள்ளலாம். முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட பாதையாக ஜனநாயக சோஷலிசத்தையும், கலப்புப் பொருளாதார முறையையும் நாட்டின் முதல் பிரதமர் நேரு தேர்ந்தெடுத்தார். சோவியத் யூனியனின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாகத் திகழ்ந்த ஐந்தாண்டுத் திட்டங்களை இந்தியாவிலும் புகுத்தினார். அதற்காகவே மத்திய அரசில் தீர்மானம் இயற்றி, 1950 மார்ச்சில் இந்தியத் திட்டக் குழுவை ஏற்படுத்தினார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை வேகமாக உயர்த்தவும், இயற்கை வளங்கள் முழுமையாகவும் திறமையாகவும் தேச நலனுக்காகப் பயன்படுத்தப்படவும், விவசாயம், தொழில்துறை என்று எல்லா துறை களிலும் சமமான வளர்ச்சி ஏற்படவும் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. மக்களிலும் எல்லாப் பிரிவினரும் ஒரே மாதிரியான முன்னேற்றத்தைக் கண்டுவிடவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கவும், பின்தங்கிய பகுதிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்குச் சிறப்புக் கவனம் செலுத்தவும் திட்டக் குழு அவசியமானது.
முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களால் பல அணைகள் கட்டப்பட்டன, வாய்க்கால்கள் வெட்டப்பட்டன, விவசாயம் தழைத்தது. கிராமங்கள் வளர்ச்சி கண்டன. மின்னுற்பத்தி பெருகியது. அரசுத் துறையில் தொடங்கப்பட்ட நிறுவனங்களால் வேலைவாய்ப்பு ஏற்பட்டது. கல்வி நிறுவனங்கள் எழுத்தறிவைப் பரப்பின. சாலை வசதி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்து என்று அனைத்துமே விரிவடைந்தன. ஆனால், ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மெத்தனம், சுயநலம், ஊழல் காரணமாக ஐந்தாண்டுத் திட்டங்களும் தடுமாறத் தொடங்கின.
தற்போது திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, எந்த விதமான நிர்வாக அமைப்பைக் கொண்டுவந்தாலும் அதுவும் இதே விதமான பாதிப்புகளுக்கு உள்ளாவது நிச்சயம். அரசின் முக்கிய முடிவுகளுக்குத் திட்டக் குழுவிடமிருந்துதான் மத்திய அரசு தரவுகளைப் பெற்று வந்திருக்கிறது. இந்த அமைப்பை நீக்கிவிட்டு, நிதி ஒதுக்கீட்டையும் திட்ட அமலையும் மத்திய அரசின் அந்தந்தத் துறைகள் மூலம் மேற்கொள்வது குழப்பத்தில் போய்த்தான் முடியும்.
திட்டக் குழுவுக்கும் அரசுத் துறைகளுக்கும் பதிலாகத் தனியார் துறையும் பன்னாட்டு நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவந்துவிடும் என்று மோடி நினைப்பாரேயானால், அந்த முடிவை மாற்றிக்கொள்வது நல்லது. எல்லாத் துறைகளையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் முனைப்புக் காட்டுவதை விட்டு விட்டு, அரசின் நிர்வாக இயந்திரங்களை மேலும் எப்படி வலுவானவையாக ஆக்குவது என்பதுதான் நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால்!

- தமிழ் ஹிந்து 
எதற்காக இந்தக் கலைப்பு? எதற்காக இந்தக் கலைப்பு? Reviewed by நமதூர் செய்திகள் on 21:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.