நீங்களும் தலைவர் ஆக வேண்டுமா? அப்படியாயின் முதலில் இதை படியுங்கள்...
‘கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவர், சிறந்த தலைவராய் இருக்க முடியாது’ என்கிறார் அரிஸ்டாட்டில்.
நமது வரலாற்றையோ, வாழ்க்கையையோ புரட்டிப் பார்த்தாலே பல தலைவர்கள் சட்டென நமது கண்ணுக்குப் புலப்படுவார்கள்.
நெல்சன் மண்டேலா நமது மனக்கண்ணில் புன்னகையுடன் வருவார். அடுத்த வினாடியே இறுகிய கண்களுடன் ஹிட்லரும் வரலாம்.
அன்னை தெரசா மனதில் சிரிக்கும் அடுத்த வினாடியில் ராஜபக்சேவும் எட்டிப் பார்க்கலாம்.
சிலர் அவர்களுடைய நல்ல பண்புகளுக்காகவும், சிலர் அவர்களுடைய கொடூர பண்புகளுக்காகவும் நமது மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.
தலைவர்கள் எந்த நிறத்திலோ, எந்த வடிவத்திலோ இருக்கலாம். ஒல்லிப்பிச்சானாய், ஆறடி உயரத்தில் மனதில் தோன்றும் ஆபிரகாம் லிங்கனாகவும் இருக்கலாம், சக்கர நாற்காலியில் வலம் வரும் ரூஸ்வெல்டாகவும் இருக்கலாம்.
முதுமையின் சுருக்கம் முகமெங்கும் கூடாரமிட்டிருக்கும் கிருஷ்ணாம்பாளாகவும் இருக்கலாம், பளிச் ஆடையுடன் வலம் வரும் பில்கேட்ஸ் ஆகவும் இருக்கலாம்.
தலைவர்கள் யாரும் ரெடிமேடாய் செய்யப்படுபவர்கள் அல்ல. மக்களிடையே இருந்து புறப்பட்டு வருபவர்கள் தான்.
ஒரு குழுவில் பத்து பேர் இருப்பார்கள். ஒருவர் தலைவராகிவிடுவார். ஒரு நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். ஒரு சிலர் தலைவர்களாகி விடுவார்கள். அந்த குறிப்பிட்ட மனிதர்களை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவர்களிடம் ஏதோ ஒரு ‘ஸ்பெஷாலிட்டி’ இருப்பது புரியும்.
தலைவர்களாக வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம் இருந்தால், இந்த சிறப்புத் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்துக் கொண்டாலே போதுமானது!
மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டியது தலைவருடைய முதல் பண்பு. உற்சாகமாக இல்லாத ஒரு தலைவரால் தனது குழுவையும் உற்சாகமாக வைத்திருக்க முடியாது. ஏகப்பட்ட எரிச்சல்கள், கஷ்டங்கள், மன அழுத்தம் இவையெல்லாம் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி மனதை உற்சாகமாய் வைத்திருக்க வேண்டியது தலைவருக்கான முக்கியமான தகுதிகளில் ஒன்று.
‘கற்காலத்தில் தலைவர்கள் உடல் பலத்தால் நிர்ணயிக்கப்பட்டனர். தற்காலத்திலோ, மக்களோடு இரண்டறக் கலக்க முடிபவர்களே நல்ல தலைவர்கள்’ என்கிறார் மகாத்மா காந்தி.
தலைவர் என்பவர் மக்களோடு கலந்து அவர்களுக்கு முன்னால் செல்லும் ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். தான் எல்லோருக்கும் பணியாளன் எனும் மனநிலை உடையவனே மிகச் சிறந்த தலைவன்.
‘சாரி… மறந்துட்டேன்’ என நாம் சகஜமாகச் சொல்லும் வார்த்தை தலைவருடைய அகராதியிலேயே இருக்கக் கூடாது.
ரொம்ப நேர்த்தியாக எல்லா செயல்களையும் ஒழுங்குபடுத்திச் செய்ய வேண்டியது அவருடைய மிக முக்கியமான பணி. எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எனும் சிறப்பான திட்டமிடல் ரொம்ப அவசியம்.
தலைவர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்பவர் அல்ல! எல்லா வேலைகளையும் செய்ய வைப்பவர்.
யாரிடம் எந்த வேலையைக் கொடுக்கலாம், எந்த வேலையைக் கொடுக்கக் கூடாது, அவர்களிடம் நாசூக்காய் வேலை வாங்குவது எப்படி எனும் சூத்திரங்களெல்லாம் ஒரு நல்ல தலைவனின் அடையாளங்கள்.
ஜெய் தீசன் என்பவர் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர். நல்ல தலைமைப் பண்புகள் கொண்ட அவரிடம் யாராவது பைல் கொண்டு வந்து கையொப்பமிடச் சொன்னாலோ, மெயில் வாசித்து பதில் போடச் சொன்னாலோ ‘நேரமில்லை, அப்புறம் பார்க்கலாம்’ என்று ஒதுக்கி வைப்பார்.
அன்று இரவு அந்த வேலைகளையெல்லாம் வீட்டில் வைத்து முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வருவார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர் ஒரு ரகசியத்தை வெளியிட்டார்- ‘எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது!’.
உடன் பணிசெய்தவர்களெல்லாம் அதிர்ந்தனர். இப்படி ஒரு குறையை வெளியே தெரியாமல் எப்படி மறைத்தார் என ரொம்பவே வியந்தனர்.
தனது 56வது வயதில்தான் கொஞ்சம் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார் அவர்.
‘மக்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், எப்படிச் செய்ய வேண்டுமென சொல்லாதீர்கள். அப்போதுதான் வியப்பூட்டும் வகையில் வேலை சிறப்பாக நடக்கும்’ என்கிறார் ஜார்ஜ் எஸ் பேட்டன்.
இது மக்களுடைய உண்மையான திறமைகளை வெளிக்கொணரும் நல்ல முயற்சி என்பதைத் தலைவர்கள் அறிவார்கள்.
தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு குணம் தைரியம்.
சில முடிவுகள் எடுக்கும் போது மன திடம் ரொம்பவே தேவைப்படும். தோல்வியை நேர்மையாய் ஏற்றுக் கொள்வதும் தைரியத்தின் ஒரு பாகமே!
சொல்லப்படாத ஒரு விஷயம் எப்போதும் கேட்கப்படுவதில்லை. தேவையான விஷயங்களை பகிர்ந்து கொண்டே இருப்பது முக்கியமான தலைமைப் பண்பு. அதே போல, பிறர் பேசுவதைக் பொறுமையுடன் கேட்பதும் தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி. அப்படிக் கேட்கும்போது தான் பல்வேறு விதமான ஐடியாக்கள் தலைவருக்குக் கிடைக்கும். மக்களும் உற்சாகமடைவார்கள்.
தனது மக்களைப் பற்றித் தெரியாதவர் நல்ல தலைவராய் இருக்க முடியாது. வெறும் அலுவலக விஷயங்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களையும் தெரிந்திருப்பது தலைவருக்கும், அவருடைய குழுவுக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும்.
தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும் தலைவருக்குத் தேவையான இரண்டு விஷயங்கள். தலைவருக்கே தன்னம்பிக்கை இல்லையேல் குழுவும் தன்னம்பிக்கை இல்லாமல் தான் இருக்கும்.
குழப்பமான வேளையில் வழிகாட்ட வேண்டியது தலைவருடைய இன்னொரு பணி. மற்றவர்களை உற்சாகப்படுத்தி அந்த சூழலை எதிர்கொள்ள வைப்பது அவருடைய சிறப்புத் தகுதி. வேலையைச் சரியாய் செய்வது மட்டுமல்ல, சரியான வேலையைச் செய்வதும் ஒரு தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையாகும்.
தலைவர் என்பவர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குழுவினருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பவராக இல்லாமல் போனால் ஒருவர் நல்ல தலைவராகப் பரிமளிக்க முடியாது.
எல்லோருமே ஒரு திறமைசாலியைத் தலைவராகக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். எனவே தலைவருக்கு நல்ல திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். தனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும், அந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களாகும்.
பல தலைவர்கள், திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதற்குக் காட்டுவதில்லை. தனது குழுவினர் சிறப்பாகச் செயல்படத் தூண்டுதலாய் இருக்க வேண்டியதும், அப்படிச் செயல்படும்போது மனம் திறந்து பாராட்ட வேண்டியதும் தலைமைப் பண்பின் அம்சங்களாகும். தனது குழுவின் செயல்பாடை வைத்துத் தான் தம்முடைய மதிப்பு கணக்கிடப்படும் எனும் எண்ணம் எப்போதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும்.
நிறுவனத்தில் லட்சியத்தை நோக்கிச் செல்பவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும். எங்கே இருக்கிறோம், எங்கே செல்ல வேண்டியிருக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் எனும் மூன்று அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும். இந்த லட்சியத்தை அடைய புதுமையான திட்டங்கள், வித்தியாசமான சிந்தனை போன்றவற்றைப் பயன்படுத்தினால் சிறந்த தலைவராகலாம்.
ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ கடந்த பத்து ஆண்டின் சிறந்த சி.இ.ஓ ஆக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு ஜாம்பவான் நிறுவனங்கள் எலக்ட்ரானிக் பிளேயர்களைத் தயாரித்து இசை உலகை ஆக்கிரமித்திருந்த சமயம் அது. தனது புதுமையான திட்டங்களால் இசை, சினிமா, மொபைல் என மூன்று ஏரியாவிலும் புகுந்து பட்டையைக் கிளப்பி, நிறுவனத்தை சரேலென உச்சியில் கொண்டு போய் நிறுத்தினார் இவர்.
காரணம் இவரிடமிருந்த தனித்துவமான வித்தியாசமான சிந்தனைகள்.
ரிஸ்க் எடுக்கத் தயங்காதவராகவும் தலைவர் இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் ‘கால்குலேட்டட் ரிஸ்க்’ எனப்படும் கணிக்கப்பட்ட ஆபத்துகளை எடுக்கத் தயங்காதவர்தான் தடைகளைத் தாண்டி முன்னேற முடியும். ‘எல்லோரையும், எப்போதும் திருப்திப்படுத்துவது தலைவருடைய வேலையல்ல. எல்லோரையும் எப்போதும் கூடவே வைத்துக் கொள்வதும் தலைவருடைய பணியல்ல’ என்பதை ஒரு தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருங்கள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தத் திறமைகளை உங்களுடைய அலுவலகத்தில் வெளிப்படச் செய்யுங்கள். விரைவிலேயே தலைமைப் பதவிகள் உங்களை வந்தடையும்!
துணிவும், பணிவும் தலைமைக்கு
இருந்தால் வாழ்க்கை வளமைக்கு!
இருந்தால் வாழ்க்கை வளமைக்கு!
நீங்களும் தலைவர் ஆக வேண்டுமா? அப்படியாயின் முதலில் இதை படியுங்கள்...
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:06:00
Rating:
No comments: