அழிந்த மோடி எழுத்துக்கள்!

லகில் தோன்றிய எத்தனையோ மதங்கள், இனங்கள், எழுத்துக்கள், மொழிகள் பல மண்ணோடு மண்ணாகிப் போயின.
இந்நூற்றாண்டில் அந்தமானில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்களின் இனமே அழிந்தது. அந்த அழிந்த சுவடுகளில் ஒன்றுதான் மோடி எழுத்துரு.
மராத்தி மன்னர் ஆட்சிக்காலத்தில் வரலாற்றுக்கான முக்கிய சான்றுகளாக மோடி எழுத்தில் எழுதப்பட்ட மோடி ஆவணங்கள் அமைகின்றன. அரண்மனை மற்றும் மராட்டிய மன்னர்களின் அன்றாட செயல்பாடுகளை இவை பதிவு செய்துள்ளன. மோடி எழுத்துக்கள்  மற்றும் மோடி ஆவணம் குறித்து பா.சுப்பிரமணியன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"மோடனே" என்றால் மராட்டி மொழியில் "உடைதல்" என்று பொருள். அதிலிருந்து "மோடி' என்ற சொல் வந்திருக்க கூடும். மோடி எழுத்துரு என்பது தேவநாகரி எழுத்தை உடைத்து சிதைத்து உருவாக்கியது எனக்கொள்ளலாம். தொடக்க காலத்தில் மராட்டிய மொழி பேச்சு வடிவினின்று எழுத்துருக்கொண்டபோது, அதற்கெனத் தனி வரி வடிவம் இல்லையாதலால் முன்னரே வழக்கிலிருந்த சமஸ்கிருத மொழிக்குரிய "தேவநாகரி" எழுத்தைக் கைக்கொண்டனர்.
முகலாயர் இந்தியாவைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய போது, அவர்கள் இருவகை வரிவடிவங்களைத் தங்களுடைய பார்சி மொழிக்குப் பயன்படுத்தினர். "நாஸ்தலிக்" என்னும் எழுத்து முறை விரைவாக எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அதனைக் கண்ட ஹேமாட்பந்த் என்ற தேவகிரி யாதவ அரசர்களின் அமைச்சர் மராட்டி மொழிக்கும் ஒரு வகை சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். அவ்வாறு தேவநாகரி எழுத்தை உடைத்து சிதைத்து மாற்று வடிவம் கொடுத்து உருவாக்கிய எழுத்துரு முறையே "மோடி" எழுத்தாயிற்று. "கிகஸ்த" என்ற சொல்லுக்குரிய "உடைந்து" என்ற பொருளே "மோடி" என்பதற்கும் உரியதாதலின் இதுவே பொருந்துமெனல் தகும்.
 
சத்திரபதி சிவாஜியின் காலத்திற்கு முன்பிருந்தே வரலாற்றுக் குறிப்புகள், கடிதப்போக்குவரத்து, நாட்குறிப்பு, வரவு செலவுக்கணக்குகள் முதலியன மராட்டி மொழியில் மோடி எழுத்துருவில் எழுதப்பட்டன. அரசியல் ரகசியங்கள் பிறர் அறியாமல் காப்பதற்கு இந்த எழுத்துரு பயன்படுத்தப்பட்டது. கால ஓட்டத்தால் அழிந்த எத்தனையோ எழுத்துருக்களில் மோடி எழுத்துருவும் ஒன்றாகிவிட்டது.
ஆதாரம்:
தமிழகத்தில் அடிமை முறை-ஆ.சிவசுப்பிரமணியன்-பக்கம் 51
அழிந்த மோடி எழுத்துக்கள்! அழிந்த மோடி எழுத்துக்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 19:27:00 Rating: 5

No comments:

Powered by Blogger.