பொதுமக்கள் எதிர்ப்பு : மேம்பாலத் திட்டம் ரத்து!
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு விரைவாகச் செல்லும்வகையில், பசவேஸ்வரா சதுக்கத்தில் இருந்து ஹெப்பாள் வரை ரூ.2,100 கோடி செலவில் 6.7 கி.மீ. நீளத்துக்கு நான்குவழி கொண்ட உருக்கு மேம்பாலம் அமைக்க கர்நாடக அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது.
பெங்களூருவின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்த மேம்பாலத்துக்காக 800-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் மக்கள் வீடுகளை இழக்க நேரிடும். எனவே, இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உருக்கு மேம்பாலம் அமைப்பதற்கு பெங்களூரு குடிமக்கள் அமைப்பினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து சமூக வலைதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, இந்த திட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் இந்தத் திட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், உருக்கு மேம்பாலம் அமைப்பதில் பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பல கோடி ரூபாய் ஊழல் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்வர் சித்தராமய்யாவுக்கும் பங்கு இருப்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.
அதையடுத்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமய்யா, பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி, உருக்கு மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றினால் நமது கட்சிக்கு பெரிய சரிவை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகளும் ஊழல் புகாரை கிளப்பியுள்ளதால், மக்களுக்கு தேவையற்ற சந்தேகம் ஏற்படும். எனவே, உருக்கு மேம்பாலத் திட்டத்தை கைவிடுங்கள் என்று ராகுல் கூறியுள்ளார். அதன்பின்னர், முதல்வர் சித்தராமய்யா அமைச்சரவையைக் கூட்டி, இந்தத் திட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் நேற்று கூறும்போது, பெங்களூரு உருக்கு மேம்பாலத் திட்டத்தை கைவிடுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அமைச்சரின் அறிவிப்பைக்கேட்ட பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொதுமக்கள் எதிர்ப்பு : மேம்பாலத் திட்டம் ரத்து!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:54:00
Rating:
No comments: