தமிழகத்தில் தன்னெழுச்சிப் போராட்டமும் மாற்று அரசியலுக்கான முன் முயற்சியும்
காலனியாதிக்கத்திற்கு எதிராக தேசிய அளவில் எழுச்சிபெற்ற வெகுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, சரியான முழக்கத்தை முன்வைத்து கைப்பற்றியது.
வெள்ளையனே வெளியேறு,உப்புச் சந்தியாகிரகம்,அந்நியத் துணிகளை புறக்கணிப்போம் போன்ற அறைகூவல்கள் வெகுமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிற வடிவங்களாக அமைந்தது. வெகுமக்களின் பங்கேற்புகளுக்கு இடமளிக்கிற ஜனநாயகப் போரட்டமாக வளர்ச்சிப் பெற்றது.
இப்போராட்டத்தின் வெற்றியானது, இங்கிலாந்து ஆட்சியாளார்களிடம் பேரம் பேசுவதற்கும் அரசியல் விடுதலை பெறுவதற்கும் காங்கிரசிற்கு துணை நின்றது.
வெகுமக்களின் தன்னெழுச்சி போராட்டத்தைக் கைப்பற்றி, பின்னர் சரியான முழக்கத்தை முன்வைத்து வெகுமக்கள் உணர்வை அணிதிரட்டி, இவ்வெற்றியை காங்கிரஸ் சாத்தியப்படுத்தியது.
இந்தியாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி இவ்வாறு, வெகுமக்களின் போராட்டத்தின் முதுகின் மீது ஏறிக்கொண்டு வெற்றியடைந்தது. அரசியல் விடுதலைக்கு பிந்தைய இந்தியாவில், இப்போக்கின் பகுதியளவிளான மறுபதிப்பு 1960 களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வழி தமிழகத்தில் நடந்தது.
இம்முறை,இளைஞர்கள் மாணவர்களின் தேசிய இன, மொழி உரிமை கோரிக்கை அடிப்படையிலான தன்னேழுச்சிப் போக்கிற்கு, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முழக்கத்தை முன்வைத்து அரசியல் வெற்றியை பெற்று ஆட்சிக்கு வந்தது. கவர்ச்சிகர மேடைப் பேச்சு,சினிமா ஊடகம் இவ்வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
இவை கடந்த கால வரலாற்று உண்மைகள்.தற்போது எழுந்து வந்த, ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எழுந்து வருகிற தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சி போரட்டங்களை இந்தப் பின்புலத்தில் வைத்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அதேநேரத்தில், இக்குறிப்பான வரலாற்றுக் கட்டத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள், அதன் மீதான இடைநிலை வர்க்கங்கள், மாணவர்களின் சமகால தன்னெழுச்சி போரட்டங்களை சர்வதேச அளவிலும் கவனிக்கவேண்டியுள்ளது.
கடந்த கால் நூற்றாண்டு கால தாராளமயயுக அரசியல் பொருளாதார அமைப்பின்
போதாமைகள், சமூகத்திற்கும் முதலாளித்துவ அரசு அமைப்பிற்குமான முரண்பாடாக பல நாடுகளில் வெளிப்படுகிறது. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி நிலைமைகள் சமூகத்தில் வேலை வாய்ப்பின்மை,வறுமை,குடியிருப்பின்மை போன்ற சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இம்முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் தன்னெழுச்சிப்போராட்ட வடிவத்தில் வெளிப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வால் ஸ்ட்ரீட் முற்றுகை எனும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள். 2011 ஆம் ஆண்டில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 15-M முற்றுகைப் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது.கிரீசில் இது பற்றிப் படரியது. இதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் அரபுப எழுச்சியாக ஆளும்வர்கர்கத்திற்கு எதிராக எழுச்சி பெற்று, ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது.
தற்போது தமிழகத்தில் எழுந்து வருகிற தன்னெழுச்சி அலையானது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், இலத்தீன் அமெரிக்கா நாடுகள்,ஐக்கிய அமெரிக்காவில் அடித்த அலையின் இந்திய பதிப்பாக உருத்திரண்டு வருகிறது.அறுபதாண்டுகால முதலாளித்துவ ஜனநயாக ஆட்சியில் அரசியல் பொருளாதார அவலங்கள், மையநீரோட்ட அரசியல் கட்சிகளின் மீதான வெறுப்பாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. இப்போராட்டங்கள், ஒரு கட்டத்தில் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக வளர்ச்சியுறுவதை கருக்கொண்டுள்ளது.
டெல்லியில் எழுந்த இந்த அலையை ஆம் ஆத்மி கைப்பற்றி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் வாலாக சுருங்கி நாடாளுமன்ற வடிவில் கரைந்து வருகிறது.
இது ஒருப்பக்கம். தமிழகத்தில் அண்மையில் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக தொடங்கிய போராட்டம் முதலில் சிறு குழுவால் துவங்கப்பட்டாலும், ஒருகட்டத்தில் வேறொரு வளர்ச்சிக் கட்டத்திற்கு வந்தடைந்தது. மத்திய அரசின் பண்பாட்டு மேலாதிக்கம் மீதான எதிர்ப்பாகவும் செயலற்ற மாநில அரசின் மீதான எதிர்ப்பாகவும் இழக்கப்பட்ட ஜனநயாக உரிமைக்கான போராட்டமாக பரிணாமம் பெற்றது.
சிவில் சமூகத்தின் மீதான அரசின் அழுத்தங்களை வெடித்துவிட்டு செல்கிற இடமாக எதிர்ப்பரசியலின் புதிய வடிவமாக இப்போராட்டம் வெளிப்பட்டது. இவ்வாறாக ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக துவங்கிய போராட்டம் கோக் பெப்சி என பன்னாட்டு நிறுவனத்திற்கும் எதிரான உலகமயத்திற்கு எதிரான போராட்டமாகவும்,விவசாயக் கோரிக்கைக்காகவும் விரிந்தது.
இவ்வாறாக போராட்டத்தின் திசைவழியானது துவங்கிய புள்ளியில் இருந்து மிகப்பெரிய அளவில் விரிந்த வடிவத்தில் மாபெரும் ஜனநயாகக் கோரிக்கைக்கான போராட்ட திசை வழியில் சிவில் சமூகத்தின் தன்னுணர்வின் வெளிப்பாட்டில் சென்றது.
அதன் தொடர்ச்சிதான் தற்போதைய ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பில் வெளிப்படுகிற
தன்னெழுச்சி போராட்டங்கள். தகவல் தொழில்நுட்பம் – சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை குறிப்பான அரசியல் போராட்ட வடிவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அரசியல்வாதிகள் பதவி அரசியலுக்காக நிற்பவர்கள்’ என்பதனால்தான் மாணவர்கள் அவர்கள் மீது அதிருப்தி கொண்டனர்.
அரசியல் தலைமை என்ற பெயரில் ஓட்டு வங்கி சுயநலக் கட்சிகள் செய்து வருகிற துரோகங்கள், ஊழல்கள் அவர்கள் கண்முன் விரிந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் இவர்கள் தலைமை வேண்டாம் என்கின்றனர். ’அரசியல் வேண்டாம், கட்சி வேண்டாம்’ என்று கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட கருத்துருவாக்கம் இன்றைக்கு ’இயக்கம் வேண்டாம், தலைமை வேண்டாம்’ என்ற இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்த நிலையை சினிமா உதிரிகள் கைப்பற்றிக் கொள்வதையும், அரசியல் ஆதாயம் வேண்டி சில குறுங்குழுவாத மிதவாதக்குழுவும் கைப்பற்ற முனைவதையும் தற்போது
கண்டு வருகிறோம். ஹைஜாக் அடையாள போராட்டங்கள், ஊடக லாபிக்கள் வழியே இந்த தன்னெழுச்சுப் போக்கிற்கு வால் பிடித்து அதை அறுவடை செய்ய முயற்சித்து வருகின்றனர்.
ஸ்பெயினில் இவ்வகையில் கவர்ச்சிவாத ஊடக விவாதம், மாற்றுப் பாபுலிச வழி, இடைநிலை வர்க்கங்களின் ஆதரவைப் பெற்ற பொடாமாஸ் இவர்களுக்கு முன்னுதாரனாக கண் முன் வந்து நிற்கிறது. இந்த மாற்று பாபுலிச கும்பல்கள் தங்களை மாற்றாக நிறுவிக் கொள்கிற முயற்சியில் சில நேரங்களில் வெற்றி அடைந்தாலும், நாடாளுமன்ற வடிவத்திற்கு வெளியே ஜனநாயக போராட்டத்தை
விரித்துச்செல்ல நோக்கில்லாமல் பதவியல் அமர்ந்துகொண்டு ஆதரவழித்தவர்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
கிரீஸ் சிரீசா,ஸ்பெயினில் பொடாமஸ், இந்தியாவில் ஆம் ஆத்மி இதற்கான சமகால உதாரணங்கள். அதேநேரத்தில் ட்ரம்ப் போன்ற வலதுசாரி சந்தர்ப்பவாதிகளும் சமூகத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இனவாத அரசியல் சாயம் பூசி ஆட்சிக்கு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிழைப்புவாத அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்குமான வேற்றுமைகளை அனைத்து மக்களுக்குமான விரிந்த ஜனநாயகத்தின் அவசியத்தை இப்போராட்டத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கள் உணர்த்தவேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக பாடுபடுகிற, அவர்களின் அரசியல் அதிகாரத்திற்காக போராடுகிற புரட்சிகர அரசியலை தேர்ந்துகொண்ட புரட்சிர அரசியல் ஸ்தாபனம் பக்கம் இளைஞர்கள் மாணவர்கள் அணிசேர்க்க வேண்டும். ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்டுதலின்தான் அரசின் ஒருமுறைக்கு எதிராகவும் உழைக்கும் வர்க்க நலனுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் இறுதிவரை இலட்சியத்திற்காக போராட முடியும் என உணர்த்தவேண்டும்.
முதலாளித்துவ வடிவத்தில் மாற்றிலை,அதைக் கவிழ்தால்தான் முழு ஜனநாயகத்தை அனைத்து மக்களுக்கும் வழங்க முடியும் என அரசியல் படுத்த வேண்டும்.
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது
.
.
தமிழகத்தில் தன்னெழுச்சிப் போராட்டமும் மாற்று அரசியலுக்கான முன் முயற்சியும்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:10:00
Rating:
No comments: