நெடுவாசலில் பேரணி : மாணவர்கள் பங்கேற்பு!
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நேற்று 20வது நாளாக நெடுவாசல் மக்கள் போராட்டத்தை நடத்தினார்கள். வழக்கம் போல் தமிழகம் முழுவதும் இருந்தும் கல்லூரி இளைஞர்கள் நெடுவாசல் கிராமத்திற்கு வருகை புரிந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். நெடுவாசல் கிராம மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அதை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று துலுக்கவிடுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாகனங்களில் புறப்பட்டு நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டத்தில் பங்கெடுத்தனர். அதே போல் சித்துக்காடு கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதே போல் தப்பாட்ட கலைஞர்கள் நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்து பறையடித்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.
நெடுவாசல் போராட்ட குழுவினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அந்த வகையில் நேற்று மாலை ஐந்து மணி அளவில், நெடுவாசல் கிராமத்தில் இருந்து, எண்ணெய் வயல் உள்ள நல்லாண்டார் கோயிலுக்கு பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். பேரணியின் முன்னே தப்பாட்ட கலைஞர்கள் பறையடிக்க நெடுவாசல் கிராமமே அதிர பேரணி புறப்பட்டது.
பேரணியின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள் நெடுவாசல் மக்கள். இந்த பேரணி முடியும் தருவாயில் திரைப்பட பிரபலமும் லட்சிய திமுக கட்சித் தலைவருமான டி. ராஜேந்தர் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பேரணியைக் கண்டதும் உற்சாகமடைந்த டி. ராஜேந்தர் உடனே பேரணியில் பங்கெடுத்தார். நல்லாண்டர் கோயிலில் இருந்து பேரணி மீண்டும் நெடுவாசல் கிராமத்திற்கு திரும்பியது. அதன் பின்னர் டி. ராஜேந்தர் ஹைட்ரே கார்பன் திட்டத்தை எதிர்த்தும் நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவு அளித்தும் இடி முழங்கியது போல் உரையாற்றினார். “மத்திய அரசு பின்வாங்கும் வரை போராட்டத்தை கைவிடாதீர்கள். நீங்கள் போராடும் வரை இந்த டி.ராஜேந்தர் உங்கள் பக்கம் இருப்பான்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நேற்று போராடினார்கள்.
நெடுவாசலில் பேரணி : மாணவர்கள் பங்கேற்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:43:00
Rating:
No comments: