முத்துகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை : வலுக்கும் போராட்டம்!
தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை இன்று செய்யப்பட்டது. இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரிசிப்பாளையம் சாமிநாதபுரம் அருகே மருதநாயகம் தெருவை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நவீன வரலாறு துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த திங்கள் கிழமை தனது நண்பர்கள் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அவருடைய தந்தை ஜீவானந்தம், உறவினர்கள் ராஜேந்திரன், காளிதாசன் ஆகியோர் டெல்லி விரைந்தனர். முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது என அவருடைய தந்தையும் சக மாணவர்களும் புகார் அளித்தனர். விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவர் மரணம் குறித்துடெல்லி காவல்துறை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்று மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவர் 5 பேரும், ஜீவானந்தம் தரப்பு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். இந்த பிரேத பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் முத்துகிருஷ்ணன் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின் மருத்துவமனை முன்பு முத்துக்கிருஷ்ணனின் உடல் மாணவர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் முத்துக்கிருஷ்ணனின் உடல் மாணவர்கள் முன்னிலையில் சிறிது நேரமே வைக்கப்பட்டது. எம்பால்மிங் செய்ய எடுத்து செல்வதாகக் கூறி உடல் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவனின் உடல் மாணவர்கள் அஞ்சலி செலுத்த மீண்டும் கொண்டு வரவேண்டும். உடல் வரும் வரை போராட்டம் நடைபெறும் எனக் கூறி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை : வலுக்கும் போராட்டம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:54:00
Rating:
No comments: