வாடிவாசலும்… நெடுவாசலும்!… – வி.களத்தூர் எம்.பாரூக்


தமிழ் சமூகம் எதற்கும் லாயக்கற்ற சமூகம், தமிழ் இளைஞர்கள் சுயநலவாதியாகிவிட்டனர். தான், தன் குடும்பம், தனது பொருளாதார மேம்பாடு என தனது எண்ணத்தை, குணத்தை சுருக்கிக் கொண்டுவிட்டார்கள். தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும், மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் பாதிப்பு நிகழும்போதுகூட அமைதியாகவே அனைத்தையும் கடந்து போகிறார்கள் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சில காலம் முன்பு வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் சமூகத்தின் மீது பலர் குற்றம் சுமத்தி பேசியும், எழுதியும் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் மட்டுமே கருத்துக்களை செலுத்தி வந்ததால் “முகநூல் போராளிகள்” என கிண்டல்கூட செய்யப்பட்டார்கள். இன்று அந்த சமூக ஊடக போராளிகளே பலருக்கு கிளியை ஏற்படுத்திருக்கிறார்கள், பல அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.
தமிழ் சமூகம் ஒரு நீண்ட வரலாற்றுக்கு சொந்தமானது. தனது கோரிக்கைகளை, நியாயங்களை போராட்டத்தின் மூலமே வென்றெடுத்திருக்கிறது. இந்தியாவின் அரசியலமைப்பில் முதல் திருத்தத்தை கொண்டு வரச்செய்ததே தமிழர்களின் போராட்டம்தான். இந்தியை திணிக்க முற்பட்டபோது “இந்தி வேண்டுமா, இந்தியா வேண்டுமா” என இந்திய ஆட்சியாளர்களையே தெறிக்க விட்டது தமிழர்களின் போராட்டம்தான். பல மாநிலங்களும் அஞ்சி நடுங்கிய நெருக்கடி நிலை அடக்குமுறைகளை துணிச்சலாக எதிர்கொண்டது தமிழர்களின் போராட்ட குணத்திற்கு மற்றொரு சான்று. 1980 காலகட்டங்களில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளை செயல்பட வைத்தது அப்போது நடைபெற்ற தமிழர்களின் எழுச்சிமிக்க போராட்டம்தான்.
இவைபோல் எத்தனையோ போராட்டங்களை துணிந்து மேற்கொண்டவர்கள் தமிழர்கள், தமிழ் சமூகத்தினர். இறுதியாக 2009 ல் ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பிற்கு உள்ளானபோது தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. மாணவர்களும், இளைஞர்களும் போராட்ட களம் கண்டார்கள். பல்வேறு அடக்குமுறைகள் மூலமும், அரசியல் சூழ்ச்சிகள் மூலமும் அப்போராட்டம் நீர்த்துபோகச் செய்யப்பட்டது. அதன்பிறகு ஒரு மிகப்பெரிய வெகுமக்கள் போராட்டம் தமிழகத்தில் நிகழவில்லை.
இந்த இடைப்பட்ட காலங்களில் பல்வேறு பிரச்சனைகளை தமிழ் சமூகம் சந்திக்கத்தான் செய்தது. பல போராட்டங்களும் நடைபெற்றுத்தான் வந்தன. மீத்தேன், சேல் கேஸ், கூடங்குளம் அணுவுலை, ஸ்டெர்லைட், விவசாயிகள் மரணம், தீராத காவிரி பிரச்சனை, ஆணவக் கொலைகள், இணையம் துறைமுகம், முல்லை பெரியாறு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா அணை கட்டுவது என பல சிக்கல்களும், பிரச்சனைகளும் விஸ்வரூபம் எடுத்தன. அதற்கான பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றன. ஆனால் அவைகளெல்லாம் தமிழகம் தழுவிய வெகு மக்களின் போராட்டமாக உருவெடுக்கப் பெறவில்லை. அந்தந்த பகுதிகளின் போராட்டமாகவே அது நிலைகொண்டுவிட்டது.
நீண்டநாள் அடக்குமுறைகளை சுமப்பவன் ஒருநாள் வெடிக்கத்தான் செய்வான் என்பதுபோல நீண்ட காலமாக பல வகைகளில் ஒடுக்கப்படும் தமிழ் சமூகம் வெடித்து கிளம்பித்தானே ஆகவேண்டும். தமிழ் சமூகம் கிளம்பிற்று. ஆம்! அது ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமாக வெடித்தது. மாணவர்களும், இளைஞர்களும் முன்னெடுத்த இந்த அகிம்சை போராட்டம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த போராட்டமாக உருமாறியது. இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென்றால் தான் பெரிய சமூக குற்றம் செய்யாதவனாக போய்விடுவேன் என்று பலரையும் எண்ண வைத்தது. இதுவே இப்போராட்டத்தின் முதல் வெற்றி. வரலாற்றில் இல்லாத வகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு பற்றி அறிந்திராத, பார்த்திராத என்னைப்போன்ற எத்தனையோ நபர்கள் இப்போராட்டத்தை ஆதரித்து களம் கண்டார்கள். காரணம் தமிழ் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுக்கப்படுகிறது, அநீதி இழைக்கப்படுகிறது என்பதற்காகத்தான். அப்போராட்டம் இந்தியாவை மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்கச் செய்தது. தை புரட்சி வென்றது. வாடிவாசல் திறந்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஒன்றும் செய்யமுடியாது என்று காரணம் கூறி ஏமாற்றியவர்களை அஞ்சி நடுங்கச் செய்தது. போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி பரவி விடுமோ என்று அவசர அவசரமாக கோரிக்கையை நிறைவேற்றி “முடித்தும்” வைக்கப்பட்டது.
மிகக்குறைந்த கால இடைவெளியிலேயே மீண்டும் ஓர் அகிம்சை போராட்டம் நெடுவாசலில் மையம் கொண்டிருக்கிறது. அங்கு மேற்கொள்ளவிருக்கும் ஹைட்ரோ -கார்பன் திட்டத்தை எதிர்த்து பிப்ரவரி 16 நெடுவாசலில் துவங்கிய போராட்ட தீ இன்று தமிழகம் தழுவிய அளவில் பரவிக்கொண்டிருக்கின்றது. ஆளும் அரசுகள் இப்போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எரிய துடித்துக்கொண்டிருக்கின்றன. அதையும் மீறி இப்போராட்டம் வெற்றியை தனதாக்கும். காரணம் தமிழர்கள் எப்போதெல்லாம் தனது போர்க்குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்களோ அப்போதெல்லாம் அதில் வெற்றியை மட்டுமே சுவைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு.
தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். தங்கள் எதிர்கால சந்ததியினர்களுக்காக போராடுகிறார்கள். தங்கள் மண் மலடாக்கப்படுவதை எதிர்த்து போராடுகிறார்கள். அதில் வெற்றி பெறுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. யார் இந்த போராட்டத்தையும், போராட்டக்காரர்களையும் எதிர்க்கிறார்களோ, யார் இந்தியாவின், தனியார் முதலாளிகளின் நலனிற்காக தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்களோ அவர்களை தமிழர்களும், தமிழகமும் தனிமைப்படுத்தி தியாகம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்த இடத்தில் புரட்சியாளர் மால்கம் எக்சின் கூற்றை சுட்டுவது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். “யாரும் விடுதலை, சமத்துவம், நீதி ஆகியவற்றை உனக்கு தர முடியாது! நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்”. நமக்கான விடுதலையை, நீதியை, சமத்துவத்தை யாரும் எளிதில் நமக்கு தந்துவிட மாட்டார்கள். நாம்தாம் போராடி பெறவேண்டும். அப்படிப்பட்ட போராட்டத்தைத்தான் வாடிவாசலும், நெடுவாசலும் முன்னெடுத்து செல்கின்றன.
– வி.களத்தூர் எம்.பாரூக்
வாடிவாசலும்… நெடுவாசலும்!… – வி.களத்தூர் எம்.பாரூக் வாடிவாசலும்… நெடுவாசலும்!… – வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 00:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.