உடலை வாங்க மாட்டோம் : தொடரும் மீனவர் போராட்டம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நேரில் வரும் வரை, இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் உடலை வாங்க மாட்டோம் என்று, இரண்டாவது நாளாக விடிய விடிய போராட்டம் நடத்தி வருகிறார்கள் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள். கடந்த திங்கட்கிழமை மாலை ராமேஸ்வரத்தில் இருந்து 464 படகில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் இரவு 10 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துவந்த இலங்கை கடற்படையினர், பிரிட்ஜோ விசைப்படகு மீது சரமாரியாகச் சுட்டனர்.
இதில் பிரிட்ஜோ என்ற மீனவருக்கு கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொரு மீனவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மீனவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த பிரிட்ஜோ உடல் நேற்று காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராமேஸ்வர அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீனவர்களின் கோரிக்கை என்னவென்றால், ‘மீனவர் பிரச்னைக்கு இதனுடன் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் . இந்த உயிரிழப்பே கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசிடம், தமிழக அரசு பேசி இனிமேல் தமிழக மீனவர்கள்மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து இனி தமிழக மீனவர்களின் உயிருக்கோ, உடமைகளுக்கோ இலங்கை கடற்படையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர். மத்திய அமைச்சர்கள் இவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்களா என்பது பற்றிய தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கட்சித் தலைவர்கள், மாணவர்கள் போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டக் குழுவை வழிநடத்த 15 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தமிழக மக்களிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். அதாவது, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எப்படி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வந்து ஆதரவு தெரிவித்து வெற்றி பெறவைத்தீர்களோ, அதேபோல் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதரவு தெரிவித்து முடிவு கொண்டுவர நீங்கள்தான் வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, இன்று ஏராளமான மீனவர்களும் மாணவர்களும் போராட்டத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடலை வாங்க மாட்டோம் : தொடரும் மீனவர் போராட்டம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:40:00
Rating:
No comments: