மதக் கலவரத்தை தூண்டும் பாஜக : கி.வீரமணி கண்டனம்!
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவு ராமன் கோவிலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. இதற்கு மேலும் ராமன் கோவில் கட்டுவதை தள்ளிப் போடக்கூடாது என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ். என்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதக் கலவரத்தை தூண்டும்வகையில் செயல்படும் பாஜக நடவடிக்கை குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியதாவது: அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோவில் கட்டவேண்டுமென்று சங் பரிவார் அமைப்புகள் கூறிக்கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜனசங்கம் என்ற கட்சி உருவானது. இந்தக் கட்சியை பின்னாட்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவாக மாற்றி பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய பெயரில் உருவானது. இந்தக் கட்சியின் வளர்ச்சியே மத மோதல்களில் துவங்கியதே. 1990ஆம் ஆண்டுகளில் ராமஜென்ம பூமிக்கான ரத யாத்திரையை எல்.கே.அத்வானி துவங்கினார். இந்த ரத யாத்திரை சென்ற பகுதிகளில் எல்லாம் மதக் கலவரம் உருவானது. (தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டைத் தவிர).
இந்நிலையில் 1992 ஆம் டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் பெருங்கலவரம் மூண்டது. இதில் அதிகபட்சமாக 13,000 பேர் மரணமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குஜராத் கலவரம், டில்லி கலவரம், மும்பை கலவரம் என தொடர்ந்து மத மோதல்கள் வெடித்துக் கிளம்பின. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உ.பியில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு கலைக்கப்பட்டது. இருப்பினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து கூறி வந்தன.
இந்நிலையில், 15 ஆண்டுகள் கழித்து உ.பி.யில் பாஜக தற்போது வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. அங்கு முதல்வராக யாரை நிறுத்த வேண்டும் என்றநிலையில், முதல்வர்கூட முடிவாகாத இந்த காலகட்டத்தில்கூட அதற்குள் ராமர் கோவில் முழக்கத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாஜகவின் முக்கியத் தலைவர்களும் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி பேசும்போது, மக்கள் ராமர் கோவில் கட்டுவதை விரும்புகின்றனர். ராமர் கோவில் கட்டுவது என்பது முழுப்பலம் வாய்ந்த பாஜக-வால்தான் முடியும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆகவேதான், அன்று உத்தரப்பிரதேசத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பினர். அதன் அடுத்த நடவடிக்கையாக மூன்றில் இருபங்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ராமர் கோவில் கட்டும் மக்களின் பெருவிருப்பத்தையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான எம்.ஜி.வைத்யா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் இந்த அறிவிப்பால் உ.பி.யில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதே அருண்ஜேட்லி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசும்போது, அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச தேர்தலில் ராமர் கோவில் கட்டுவது போன்ற பிரச்சினைகள் இருக்காது. அந்த தேர்தலை பாஜக வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தைக் கொண்டே முன்னெடுக்கும் என்றும், கோவில்களைக் கட்டி மக்களிடையே மோதல்களை உருவாக்குவது எங்கள் எண்ணமில்லை என்றும், உ.பி-யில் மோடி தலைமையில் தேர்தலைச் சந்திக்கும்போது எங்களுக்கு வளர்ச்சி மட்டுமே முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும் கூறினார். (‘டெய்லி நியூஸ் அனலைஸ்’, 8.6.2016).
இப்பொழுது (12.3.2017) அதே அருண்ஜேட்லி என்ன சொல்லுகிறார்? அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்படும் என்று கூறியுள்ளார். பொருள் என்ன? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையான ராமராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் அமைப்பதற்கான முயற்சியில் இறங்க உள்ளனர் என்பது தெளிவாகிவிட்டது. இன்னொரு வகையில் சொல்லவேண்டுமானால், இந்தியா முழுமையும் மதக் கலவரத்திற்கு கத்தியைத் தீட்ட திட்டமிட்டுள்ளனர் என்பதும் உறுதியாகிவிட்டது.ஏற்கெனவே அய்.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இன்னொருபக்கம்; இந்தச் சூழ்நிலையில், அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவது என்றால், அதன் விபரீதம் எதில் கொண்டு போய்விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்னும் மதச்சார்பின்மை சக்திகள் தேர்தலில் எத்தனை இடங்கள் என்பதில் கவனம் செலுத்தி சிதறுண்டு போகும் அரசியலைத்தான் நடத்தப் போகிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். ராமன் கோவிலைக் கட்டி - அதன்மூலம் ஏற்படும் கலவரங்களுக்கு மதவாத எதிர்ப்பு அணியினரின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இன்மையும் ஒரு வகையில் காரணமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. பொது பாதுகாப்பு அணியை உருவாக்கவேண்டியது அவசரம், அவசியம் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
மதக் கலவரத்தை தூண்டும் பாஜக : கி.வீரமணி கண்டனம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:56:00
Rating:
No comments: