நீட் தேர்வு : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
நாடு முழுவதும் வரும் மே மாதம் 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வில் உருது மொழியை சேர்க்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் இந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி ஆகிய மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்களின் தாய்மொழியான உருது மொழியிலும் நீட் தேர்வை எழுத அனுமதி அளிக்க வேண்டும் என மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாடு தழுவிய அளவில் அதிக மக்கள் பேசும் மொழி உருது. ஆனால் உருது மொழியை புறக்கணித்துவிட்டு, ஏழாவது மொழியாக உள்ள குஜராத்தியையும், பன்னிரண்டாவது மொழியாக இருக்கும் அசாமி மொழியையும் இணைத்திருப்பது நியாயமற்றது. ஏற்கனவே, உருது மொழியிலும் நீட் தேர்வுகளை எழுதுவதற்கு மராட்டியம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி பானுமதி, நீதிபதி குரியன் ஜோசப் முன்னிலையில் நேற்று வந்தது. அப்போது, அவசர வழக்காக இதை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில், சி.பி.எஸ்.இ. ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கின் மறுவிசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:46:00
Rating:
No comments: