பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!
பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து பாஜகவை வீழ்த்துவதே இப்போதைய நோக்கம் என பரப்பப்படுகிறது.
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு அடிப்படையான காரணமே காங்கிரஸ் ஆட்சியின் அட்டூழிய நடவடிக்கைகளும், அநியாயமான ஊழல் குற்றச்சாட்டுகளும்தான். மக்களின் கடும் வெறுப்பு காங்கிரஸ் அரசின் மீது ஏற்பட்டு இருந்தது. அதை எப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்திருக்க முடியும்?
தன் குரூர மதவாத வடிவத்தை தற்காலிகமாக மறைத்துக்கொண்டு “ஊழலை ஒழிப்போம்”, “கருப்புப் பணத்தை மீட்டு மக்களிடம் தருவோம்”, “மின்சாரம், தண்ணீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வோம்” என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி காங்கிரஸ் மீது இருந்த மக்களின் கோபத்தையெல்லாம் பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொண்டது என்பதே உண்மை.
ஆக, பாஜகவின் இத்தகைய அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் ஆட்சி செய்த விதமும், மக்களுக்கு விரோதமாக நடவடிக்கைகளும்தான். சி.பி.எம்மின் நிலைபாட்டை எதிர்க்கிறவர்கள், காங்கிரஸின் ஆட்சிமுறை குறித்து வாயைத் திறப்பதே இல்லை.
இன்றைக்கு பாஜகவை நிமிர்ந்து நின்று எதிர்ப்பதற்கான அனைத்து தார்மீக பலத்தையும் இழந்து நிற்கிறது காங்கிரஸ் அரசு. பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினானல், “நீ மட்டுமா யோக்கியமா?’ எனத் திருப்பிக் கேட்கிறது பாஜக. பெட்ரோல் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வு குறித்து பேசினால், “நீ மட்டும் யோக்கியமா?” எனத் திருப்பி காங்கிரஸின் செவிட்டிலேயே அறைகிறது பாஜக. மதவாதத்தைத் தவிர்த்து, பாஜகவின் அனைத்து செயல்களிலும் காங்கிரஸ் கையாண்ட வழியே இருக்கிறது. இந்த காங்கிரஸை எப்படி கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க முடியும்?
இந்த முதலாளித்துவ அமைப்பில், ஆட்சியதிகாரத்தில் காங்கிரஸ் இருந்தாலும், பாகஜ இருந்தாலும் சாதாரண மக்களுக்கு ஒருபோதும் நன்மைகள் விளையப் போவதில்லை. ஒன்றின் வெறுப்பை இன்னொன்று சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியதிகாரத்தை அவைகளே மாற்றி ,மாற்றி கைப்பற்றிக் கொள்ளும். பேய்க்கு பயந்து பிசாசுக்கும், பிசாசுக்குப் பயந்து பேய்க்கும் காலமெல்லாம் ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருக்க முடியாது.
காங்கிரஸை விட பாஜக பேராபத்து என்பதில் சந்தேகமில்லை. அதற்காக மத அடிப்படை வாதத்தை முறியடிக்க முதலாளித்துவ அமைப்பின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் எப்படி ஆதரிக்க முடியும்? மேலும் இன்று முதலாளித்துவ அமைப்பே மத அடிப்படை வாதத்தை முன்னெடுத்துச் செல்லும் பாசிசம் தலைதூக்கி இருக்கிறதே. ஆக, முதலாளித்துவம், மத அடிப்படைவாதம் இரண்டையும் சேர்த்து எதிர்க்காமல், தீர்வுகளைக் காண முடியாது. அதை நோக்கித்தான் சி.பி,எம் கட்சி தங்கள் அரசியலை பேசுகிறது, பிரச்சாரம் செய்கிறது, தொடர்ந்து இயங்குகிறது.
இன்று பாஜகவின் மிருக பலம் கொண்டிருப்பதற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று சொல்கிறவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்கள் பாஜகவை ஆதரிக்காமலோ, பாஜகவோ அதிகாரத்தை பகிராமல் இருந்திருக்கின்றனவா என்று முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.
இந்துத்துவா இந்த மண்ணில் விதையூன்றப்பட்ட காலத்திலிருந்து அதையும், அதன் ஆபத்தையும் அறிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆரம்பத்தில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி இருந்த போது அதை அடையாளம் கண்டு எச்சரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆட்சி காலங்களில் எடுக்கப்பட்ட இந்துத்துவா ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்து இயக்கம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். மன்மோகன்சிங்கின் ஆட்சிக் காலத்தில், மக்களின் வெறுப்பை சுட்டிக்காட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள். என்றைக்காவது கம்யூனிஸ்டுகளின் பேச்சைக் கேட்டிருக்குமா இந்த காங்கிரஸ்?
சிறு சக்தியாய் இருந்தபோதும் இந்துத்துவாவின் வளர்ச்சிக்கு எதிராக நிமிர்ந்து, தார்மீக பலத்தோடு நிற்கும் வல்லமை கம்யூனிஸ்டுகளுக்கே இருக்கிறது. அதனால்தான் தோழர் பினாரயி விஜயன் மீது இந்துத்துவா சக்திகளுக்கு அத்தனை ஆத்திரம் வருகிறது. இன்று இந்தியாவில் வேறு எந்தத் தலைவர்களோடும் இந்துத்துவா சக்திகள் கடைவாய்ப் புன்னகையோடு கைகுலுக்க முடியும்.
அந்த தெம்பையும், நேர்மையையும், திராணியையும் கம்யூனிஸ்டுகள் தக்க வைத்து வளர்ப்பது சரியா அல்லது அதையும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து இழந்து நிற்பது சரியா?
மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:58:00
Rating:
No comments: