புராதனச் சின்னங்களை பாதுகாக்க புதிய முயற்சி!
அகழ்வாராய்ச்சியின்போது பாதுகாக்கப்படும் பண்டைய புராதன நினைவுச் சின்னங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, தமிழக அரசு 1961ஆம் ஆண்டு தொல்லியல் துறையை ஏற்படுத்தியது. இருப்பினும், இது அந்த துறைசார்ந்தோரின் பணி மட்டுமல்ல; மக்கள் ஒவ்வொருவரின் கடமையும்கூட. இந்நிலையில், புராதன நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி ‘பிரண்ட்ஸ் ஆஃப் ஆர்க்கியாலஜி’ என்ற பெயரில் நண்பர்கள் குழுவை ஏற்படுத்தி, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் துறை இயக்குநர் முனைவர் டி.ஜெகநாதன் ‘தி இந்து’நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 90 புராதன நினைவுச் சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 16 நினைவுச் சின்னங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 நினைவுச் சின்னங்களும் விழுப்புரம் மாவட்டத்தில் 11 நினைவுச் சின்னங்களும் உள்ளன.
உதாரணமாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் உள்ள பாறை ஓவியங்கள், வானூர் தாலுகா, உலகபுரம் கிராமத்தில் உள்ள சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள், மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால், ஆனைமலையில் உள்ள தீர்த்தங்கரர் கல்வெட்டுகள், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் கோட்டை மற்றும் பிரிட்டிஷ் கல்லறைகள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த புராதன நினைவுச் சின்னங்களை சிலர் ஆக்கிரமிக்கின்றனர். இதனால், அந்த நினைவுச் சின்னங்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. அத்துடன், சில சமூக விரோதிகள் இவற்றை சேதப்படுத்தும் செயலை மேற்கொள்கின்றனர். இவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே, பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள 90 இடங்களிலும் அப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், தொல்லியல் துறை சிறப்பு அலுவலர்கள், காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய ‘பிரண்ட்ஸ் ஆப் ஆர்க்கியாலஜி’ என்ற பெயரில் குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்தாலோ, சேதப்படுத்தினாலோ உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
புராதனச் சின்னங்களை பாதுகாக்க புதிய முயற்சி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:52:00
Rating:
No comments: