சிறப்புக் கட்டுரை: அயோத்தி சர்ச்சை : வீதியில் பெறுவதா நீதி ? - ரவிக்குமார்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் கருத்துகள் ஜனநாயகத்தின்மீதும் நீதித்துறையின்மீதும் நம்பிக்கை வைத்திருப்போருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற அதிர்ச்சியிலிருந்தே நாடு மீளாதிருக்கும்நிலையில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்திருக்கும் ஆலோசனை பாராளுமன்ற ஜனநாயகத்தின்மீது மட்டுமின்றி, நீதித்துறையின்மீதும் இனி நம்பிக்கை வைக்கமுடியுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டுமென்ற வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ’இவை மதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். இதில் நீதிமன்றம் முடிவெடுக்க முடியுமா? ஏன் நீங்களெல்லாம் அமர்ந்து பேசித் தீர்வுகாண முயற்சி செய்யக்கூடாது? நீதிமன்றத்துக்கு வெளியே இதற்குத் தீர்வுகாண முடியுமா எனப் பாருங்கள். வேண்டுமானால் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தூதுவராக அனுப்புகிறோம்’எனத் தெரிவித்திருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை பலத்தோடு அமைந்திருக்கும் பாஜக ஆட்சி அந்த மாநிலத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பெரும்பான்மைவாதம் தொடர்பான அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. பெரும்பான்மை ஆட்சிக்கும் பெரும்பான்மைவாத ஆட்சிக்கும் இடையிலான வேறுபாடுகள் அழிந்துபோயினவோ?, ‘இந்து ராஷ்டிரத்துக்கான’முன்மாதிரியாக உத்தரப்பிரதேச மாநில அரசைப் பயன்படுத்தப் போகிறார்களோ? என்ற ஐயம் மக்கள் மனதில் மூண்டுள்ளது. அந்த மாநிலத்தில் இருக்கும் சுமார் இருபது சதவிகித முஸ்லிம்களின் வாக்குகள், தாம் விரும்பும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பலமற்றவையாக, மதிப்பு நீக்கத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ‘பெரும்பான்மையின் தயவில்தான் நீங்கள் இனி வாழ வேண்டும்’என்ற செய்தியை அவர்களுக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றன. இப்போது, நீதித்துறை மட்டுமே மக்களின் பாதுகாப்பு என்று எண்ணிக்கொண்டிருக்கும் சூழலில், நாட்டின் மிக உயர்ந்த நீதி அமைப்பே ‘இரு தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்வு காணுங்கள்’எனச் சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? இது, நள்ளிரவில் விரட்டிவரும் கும்பலிடமிருந்து தப்பிக்க அபயம் கேட்டு கதவைத் தட்டும் பெண் ஒருவரிடம் ’இரு தரப்பினரும் பேசித் தீர்வு காணுங்கள்’எனக்கூறி கதவை அடைத்துக்கொள்வதற்கு ஒப்பானதாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகப்போகின்றன. அது தொடர்பான வழக்குகளுக்கு இன்னும்கூட நீதி கிடைக்கவில்லை. மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னையில் 2010ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. பிரச்னைக்குரிய நிலத்தின் உரிமையை மெய்ப்பிக்கும் ஆவணங்கள் எதையும் எந்தத் தரப்பினரும் வைத்திருக்காத நிலையில் ‘அனுபவப் பாத்யதையின்’அடிப்படையில் மூன்று தரப்பினருக்குமே அது உரிமையானது என்ற விசித்திரமான தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்தது.
புராணங்களைச் சலித்து வரலாற்றைத் தேடும்படி சபிக்கப்பட்ட நம் நாட்டில் நீதிமன்றத் தீர்ப்புகளும் புராணக் கதைகளின் தன்மையைப் பெற்றுவிடுவது வியப்பானதல்ல. நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பும் அதைத்தான் உறுதிப்படுத்தியது. பிரச்னைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என்பதைப் பற்றி அந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளும் முரண்பட்ட கருத்துகளைச் சொன்னார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலொன்று அந்த இடத்தில் இருந்ததாகவும் அதை இடித்துத்தான் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் எனவே, அங்கு கோயிலொன்றைக் கட்டுவதற்கு நியாயமிருக்கிறதென்றும் அந்தத் தீர்ப்புக் கூறியது. இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியையும் அதன் அடிப்படையில் அது சொன்னதையும் மற்ற வரலாற்று அறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக மறுத்தபோதிலும் அதை அப்படியே அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
எவரிடமும் ஆதாரம் இல்லை எனும்போது அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் எனச் சொல்வதே சரியானதாக இருக்கும். அப்படிச் சொல்லியிருந்தால் இந்தப் பிரச்னையில் ஒரு தீர்வைக் காண வேண்டிய பொறுப்பும் நெருக்கடியும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால், பிரச்னையை தீர்த்துவைப்பதற்குப் பதிலாக புதிய பிரச்னைகளை உருவாக்கும்விதமாகவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துவிட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து வக்ஃபு வாரியமும் பிற தரப்பினரும் செய்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
நம்பிக்கை என்பது வழக்கின் ஆதாரமாக மாற்றப்படும்போது அதை ஏற்றுக்கொண்டு மொழியப்படுகிற தீர்ப்பு ‘அருள்வாக்காக’ இருக்குமேயொழிய நீதி என்ற தகுதியைப் பெற முடியாது.
மனிதர்களை முரண்பட்ட இரண்டு எதிரெதிர் முகாம்களாகப் பிரித்து அவர்களுக்குள் பகைமையை நிரப்பிவைப்பது அதிகாரச் செயல்பாடுகளின் அடிப்படை. அந்தச் சூத்திரம்தான் நீதி அமைப்பையும் வழிநடத்துமென்றால் இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது.
சட்டமும் நீதியும் வேறு வேறானவை என்பது நமக்குத் தெரியும். நாம் ஒரு சட்டத்தை இன்னொரு சட்டத்தால் பதிலீடு செய்யலாம். சட்டங்களை மாற்றலாம். ஆனால், நீதியை அப்படிச் செய்ய முடியாது. ”நீதி என்பது தன்னளவில் சமச்சீரற்றதாக உள்ளது”என ழாக் தெரிதா என்ற தத்துவ அறிஞர் குறிப்பிடுகிறார். “அது தீராத போதாமையையும், எப்போதும் கடந்துகொண்டே இருக்கும் தன்மையையும் கொண்டுள்ளது” என்கிறார் அவர். எனவே, நீதிக்கான குரலுக்கு முழுமையான பதிலை ஒருவர் எப்போதுமே அளித்துவிட முடியாது என்கிறார் தெரிதா. அதனால்தான் நான் ”நீதியோடு நடந்துகொண்டேன் என எவரும் கூறிக்கொள்ள முடியாது” என்கிறார் அவர் (John D.Caputo (Ed) – De Construction in a Nutshell - A conversation with Jacques Derrida, Fortham University Press, 1997 )
“ஒரு நீதிபதி, தான் நீதியோடு நடந்துகொள்ள விரும்பினால் அவர் சட்டத்தைப் பிரயோகித்தால் மட்டும் போதாது. அவர் ஒவ்வொருமுறையும் சட்டத்தை மறுகண்டுபிடிப்புச் செய்ய வேண்டும். அவர் பொறுப்பாக இருக்கவேண்டுமென விரும்பினால், அதற்கான முடிவெடுக்க நினைத்தால், அவர் வெறுமனே சட்டத்தைப் பிரயோகிப்பது பயன்தராது. அதை ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான சூத்திரமாகக் கருதக்கூடாது. அவர் தனித்துவமான (singular) அந்தத் தருணத்துக்கு ஏற்றவாறு ஒரு புதிய நீதியான உறவை மறுகண்டுபிடிப்புச் செய்ய வேண்டும்”என்று குறிப்பிடும் தெரிதா, ”நீதியை நாம் அளவிட முடியாது”என்கிறார்.
சட்டத்துக்குட்பட்டு சொல்லப்படும் தீர்ப்பு என்பதற்கும் நீதி என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தீர்ப்பு என்பது சட்டத்தை மறு உறுதி செய்கிறது. நீதியோ, சட்டத்தை மறுகண்டுபிடிப்புச் செய்கிறது. தீர்ப்பு என்பது சட்டத்துக்கு நெருக்கடி எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் நீதியோ, சட்டத்தை மேம்படுத்தவும் கட்டுடைக்கவும் தூண்டுதலை உண்டாக்குவதன்மூலம் சட்டம் தொடர்ந்து அதுபோலவே இருக்க முடியாது என்ற நெருக்கடியை உருவாக்குகிறது. இந்திய நீதிமன்றங்கள் தீர்ப்புச் சொல்வதற்கே முன்வராதபோது, அவை நீதி வழங்கும் என எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?
மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ஒரு தூதுவர், எப்படி இந்தப் பிரச்னையை தீர்த்துவைப்பார்? தற்போது பெரும்பான்மைவாத மமதையில் இருப்போரிடம் சென்று, “ராமர் அயோத்தியில் பிறந்ததனால் அல்ல, அயோத்தியைத் துறந்ததனால்தான் மகத்துவம் அடைந்தார்”என அவரால் எடுத்துக்கூற முடியுமா? சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது ஜனநாயகக் கடமை என்பதை வலியுறுத்த முடியுமா?
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது அதைப்பற்றி கருத்து தெரிவித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “தன்னை ஒரு சமூகக் குழுவாகச் சொல்லிக்கொள்ளும் எவராலும் வழிபடப்படுகிற புனிதத்தன்மைகொண்ட எவரோ ஒருவர் பிறந்த இடம் எனச் சொல்லி எந்த நிலத்தையும் உரிமை கோரலாம் என்ற முன்னுதாரணம் இந்தத் தீர்ப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பொருத்தமான சொத்து எங்காவது இருந்தால், அங்கு ஒரு பிரச்னை கிளம்பினால் இப்படி இன்னும் எத்தனையோ ‘ஜன்மஸ்தான்கள் எதிர்காலத்தில் உருவாகலாம். வரலாற்றுச் சின்னமொன்றை வேண்டுமென்றே இடித்துத் தரைமட்டம் ஆக்கியதை நீதிமன்றம் கண்டிக்காவிட்டால் மேலும் அப்படிப் பலவற்றை இடிப்பதை யார் தடுக்க முடியும்?” எனக் கேட்டார். “இந்த நாட்டின் சட்டமானது நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, அது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற நம்பிக்கை நிலவும்போதுதான் உண்மையான ஒற்றுமையும் சமாதானமும் சாத்தியமாகும்”என்றார். இப்போதும் அது பொருந்தக்கூடிய கருத்துதான்.
பாபர் மசூதி இடிப்புப் பிரச்னையில் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள வழியில் நின்று நீதியை நிலைநாட்டிட உறுதியான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, ’குற்றம்சாட்டப்பட்டவர்களிடமே சென்று நியாயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’என பாதிக்கப்பட்டவர்களிடம் கூறுவது அநீதி மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.
கட்டுரையாளர் குறிப்பு:
ரவிக்குமார் - கவிஞர், மொழிபெயர்ப்பாளர், அரசியல், இலக்கிய விமர்சகர். ‘மணற்கேணி’ஆய்விதழின் ஆசிரியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்.
http://minnambalam.com/k/1490164740
சிறப்புக் கட்டுரை: அயோத்தி சர்ச்சை : வீதியில் பெறுவதா நீதி ? - ரவிக்குமார்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:46:00
Rating:
No comments: