மால்கம் எக்ஸ்; சமரசமற்ற போராளி - வி.களத்தூர் எம்.பாரூக்
மால்கமை படிப்பது என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட மனிதனை படிப்பது ஆகாது. அது ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை படிப்பது போன்றது. அவர்களின் வாழ்க்கையை அறிவது போன்றது. மால்கம் உறுதியான எண்ணம்கொண்ட சமரசமில்லாத போராளி. ஆப்ரிக்க அமெரிக்க கறுப்பின மக்களுக்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணம் செய்தவர். கறுப்பின மக்களுக்காக அவருக்கு முன்னும் கார்வி, ஏர்ல், வாசிங்டன் போன்ற பல தலைவர்கள் போராடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடமிருந்து மால்கம் தனித்து விளங்குகிறார். உத்வேகமான அவருடைய சொற்கள் கேட்பவரின் ஆழ்மனதிற்கு சென்று எழுச்சி கொள்ள வைக்கிறது.
"உங்களுக்கு யாரும் விடுதலையோ, சமத்துவத்தையோ, நீதியையோ தரவியலாது. நீங்கள் மனிதர்களாக இருந்தால் நீங்களாகவே எடுத்துக்கொள்ளுங்கள்". "நமது போராட்டத்தை நாமே நடத்துவோம்".
"உண்மை என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் இருக்கிறது".
இவைகள் மால்கமின் போராட்ட முழக்கங்கள். அவை இளைஞர்களை கட்டிப்போட்டது. அவர்களது கால்கள் மால்கமின் பின்னால் நடைபோட்டன. சிறு வயதிலேயே கறுப்பின மக்களுக்காக போராடிய தனது தந்தையை இழக்கிறார். குடும்பம் வறுமையில் தள்ளப்படுகிறது. தாய் மனப்பிறழ்ச்சியால் பாதிக்கப்படுகிறார். சகோதர, சகோதரிகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து பல இடங்களின் வாழத்தள்ளப்படுகிறார்கள். அதனோடு மால்கமின் படிப்பு முடிவுறுகிறது. வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற அவருடைய ஆசையும் விடைபெறுகிறது.
தபால் போடுவது, வீட்டு வேலை செய்வது, கூலி வேலை செய்வது என மால்கம் செய்யாத வேலையே இல்லை. எந்த வேலை செய்தாலும் உறுதியும், திடமான நம்பிக்கையும் இருக்கும். அதேபோல் அவர் செய்த மற்றொரு வேலைதான் திருட்டு, கொள்ளை, விபச்சாரம், வழிப்பறி, போதை பொருள் விற்பது போன்றவையாகும்.
ஒருநாள் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டார். சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது வயது 20. விடுதலையாகி வெளியே வரும்போது வயது 27. இந்த 7 வருடங்கள் மால்கமே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அவரை மாற்றியது. நிறைய படித்தார், சிந்தித்தார், உறுதியான எண்ணங்களை வளர்த்துக்கொண்டார். சிறை மால்கமை புரட்சியாளனாக மாற்றி வெளியேற்றியது. வெளியில் வந்த மால்கம் கறுப்பின மக்களின் போராட்ட வரலாற்றில் நீங்கா இடத்தை பிடித்தார். அப்போதைய காலத்தில் கறுப்பின மக்களுக்காக மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் போராடி வந்தார். அவருடைய போராட்ட வழிமுறை அகிம்சையை வலியுறுத்தி வந்தது. அந்த போராட்டத்திற்கு மாற்றமான போராட்டத்தை மால்கம் முன்வைத்தார். அதற்கான காரணங்களை அடுக்கினார். பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்.
"எங்கள் பெண்கள், பிள்ளைகள் அடித்துக்கொன்று வன்முறை புரிவர்களிடம் மறுகன்னத்தை காட்டும்படி சொல்வது கேலிக்கூத்து. எதிர்ப்பு ஒன்று மட்டும்தான் அவர்களுக்குப் புரியக்கூடிய மொழி" என கர்சித்தார். வெள்ளையின ஆதிக்க வெறியர்கள் மால்கமை கவலையோடு பார்த்தார்கள். உளவுத்துறையின் கழுகுப்பார்வை அவர்மீது விழுந்தது. ஊடகங்கள் மால்கமிருக்கு எதிராக கட்டுக்கதைகளை அள்ளிவிட்டன. இவைகள் அனைத்தையும் தனது திறமையால் சிறப்பாக எதிர்கொண்டார். அவர் உழைத்து வளர்த்த தமது இயக்கத்தினர்கூட மால்கமின் மீது பொறாமை கண்டனர். அவதூறுகளை கக்கினர்.
அவர்களிடமிருந்து விலகி தனியொரு அமைப்பை துவக்கினார். "நீ விமர்ச்சிக்கப்படாமல் விரும்பியதை அடைய முடியாது" என்று கூறி அனைத்தையும் கடந்து சென்றார். ஆப்ரிக்க, இஸ்லாமிய தேசங்களுக்கு பயணம் சென்று மேலும் உத்வேகமாக பணியாற்றினார். மாற்றுக் கருத்துடைய மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் உடன் இணைந்து பணியாற்ற தயார் என அறிவிப்பு செய்தார். மால்கமின் போராட்ட குணத்தையும், செயல்பாடுகளையும் பார்த்த ஆப்ரிக்க, அரபு தேசங்கள் தனது தேசத்தில் அமைச்சராக சேர்ந்து பணியாற்றும்படி விரும்பி வேண்டின. அதை மறுத்து இறுதிவரை அமெரிக்க கறுப்பின மக்களுக்காகவே போராடுவேன் என உறுதியாக இருந்தார். "ஒரு விஷயத்தில் நீ உறுதியாய் இல்லையென்றால் எல்லா விஷயத்திலும் சறுக்கிவிடுவாய்" என்ற மால்கமின் கூற்று அவருக்கே பொருத்தமாக இருந்தது.
மால்கமின் தெளிவான செயல்பாட்டாலும், வசீகரமான சொற்பொழிவாலும் நாளுக்கு நாள் அவருடைய செல்வாக்கு கூடியது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகமெங்கும். அமெரிக்காவையே வெறுத்த பிடல் காஸ்ட்ரோகூட மால்கமை தனது நண்பனாக அறிவித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் தங்களது வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். "சொந்த வரலாற்றை மறந்த சமூகம் வரலாற்றை படைக்க முடியாது" என விவரித்தார். மால்கமின் இந்த கூற்று உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
மால்கமின் உறுதியான போராட்டங்களும், தெளிவான செயல்திட்டங்களும், எழுச்சிகரமான முழக்கங்களும், வளர்ந்துவரும் அவரது ஆதரவு வட்டமும் எதிரிகளின் கண்ணை உறுத்தியது. மால்கமை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று கொலைவெறியோடு திரிந்தனர். இதை மால்கமும் நன்கு உணர்ந்திருந்தார். இருக்கும் வரை துணிவோடு போராடவேண்டும் என்ற உறுதியுடன் பயணித்தார். அவரது நலன் விரும்பிகள் உங்களுக்கு எதிராக ஒரு கூட்டம் தூண்டிவிடப்பட்டுள்ளது. அதனால்... என்று இழுத்தபோது மால்கம் சொன்னார் "ஒரு பெருச்சாளியை போல் கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் பதுங்கி கிடப்பதற்கு பதிலாக சிறுத்தையைப்போல் பாய்ந்து ஒரு நிமிடம் வாழ்ந்து உயிர் கொடுப்பது சிறந்தது" என்று. இது அவரின் மன தைரியத்தை வெளிப்படுத்துகிறது. மக்களின் விடியலுக்காக போராடுபவர்கள் தனது உயிரை விதையாக போட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
மேடையில் ஏறினார். கறுப்பின மக்களுக்காக தனது குரலை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார். மறுபக்கம் துப்பாக்கி குண்டு பெரும் சப்தத்துடன் பாய்ந்தது. 16 குண்டுகள் மால்கமின் உடலை குத்திக் கிழித்தன. துரோகிகளும், எதிரிகளும் சேர்ந்துக்கொண்டார்கள். வஞ்சகம் தீர்த்தார்கள். மால்கம் வீர மரணம் அடைந்தார். புரட்சியாளர்கள் அனைவருமே வீரமரணம் அடைவதுதானே இவ்வுலக நியதி. மால்கம் மட்டும் விதிவிலக்கா என்ன?
"புரட்சி என்பது ரத்தம் சிந்துவது, புரட்சி என்பது சமரசமற்றது. புரட்சி என்பது தனது பாதையில் எதிர்படும் அனைத்தையும் தலைகீழாக புரட்டிப்போடுவது". "ஒடுக்குமுறைக்கு எதிராக சிந்திப்பவர்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தாம்" இது மால்கமின் வெற்றி முழக்கங்கள்.
ஆம்! மால்கம், ரத்தம் சிந்தினார். சமரசமில்லாமல் போராடினார். தனது பாதையில் எதிர்ப்பட்ட அனைத்தையும் தலைகீழாக மாற்றினார். ஒடுக்குமுறைக்கு எதிராக சிந்தித்தார். களமாடினார். அதற்கான பரிசாக வீர மரணம் அடைந்தார். உலக புரட்சியாளர்களில் மால்கம் எக்ஸ் நீங்கா இடம் பிடித்தார். ஒடுக்குமுறைகள் எங்கெல்லாம் கட்டவிழ்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் மால்கமின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
- வி.களத்தூர் எம்.பாரூக்
மால்கம் எக்ஸ்; சமரசமற்ற போராளி - வி.களத்தூர் எம்.பாரூக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:48:00
Rating:
No comments: