முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற திமுக ஆட்சிக்கு வர வேண்டும்:ஸ்டாலின்

முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற திமுக ஆட்சிக்கு வர துணை நிற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியது:
அதிமுக ஆட்சியை நம்பி பயனில்லை என்பதால், இனி நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே திட்டத்தை கருணாநிதி வகுத்து கொடுத்தார். அதன்படி மக்கள் குறைகேட்டு வந்துள்ளோம்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது முஸ்லிம்களின் குறைகளுக்காக போராடியது. ஆளும் கட்சியாக வந்தபின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் சிறுபான்மை நலவாரியம் அமைக்கப்பட்டது. அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் வழங்கினார்.
உருது மொழி அகாதெமியும், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகமும் ஏற்படுத்தப்பட்டது.
சிறுபான்மையினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 3.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் முழுமையாக சேர்வதற்கு முதன்மை செயலர் தலைமையில் குழுவும் அமைத்து கண்காணிக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக வந்த பின்பு இதை செயல்படாமல் தடுத்தார்.
நபிகள் நாயகம் பிறந்த நாளை அரசு விடுமுறையாக திமுக ஆட்சியில் அறிவித்தது. சிறுபான்மை சுயநிதி பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 5,499 பேருக்கு அரசு ஊதியம் வழங்க அறிவிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் 6,456 பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட 5 தீர்மானங்களை மாநாட்டில் வைத்துள்ளனர். மீண்டும் கருணாநிதி தலைமையில் ஆட்சி வர உள்ளது. அனைத்தையும் நிறைவேற்றுவார்.
கடந்த 2010ஆம் ஆண்டு மாநாட்டில் நீங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தார் கருணாநிதி. ஆனால், ஆட்சி மாற்றத்தால் அவை நிறைவேற்றப்படவில்லை. அதனையும் நிறைவேற்றுவார். கோரிக்கைகள் நிறைவேறிட திமுக ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சி எதையும் செய்யவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில், பல திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்றார் ஸ்டாலின்.
விஜயகாந்த் அறிவிப்பு: ஸ்டாலின் மௌனம்
தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக வியாழக்கிழமை இரவு சென்னை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் அறிவித்த நிலையில், விழுப்புரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டாலின் பேசினார்.
கூட்டம் முடித்த உடன் விஜயகாந்த்தின் நிலைப்பாடு குறித்து, பத்திரிகையாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் பதில் ஏதும் கூறாமல் மௌனமாக கிளம்பிச் சென்றார்.
முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற திமுக ஆட்சிக்கு வர வேண்டும்:ஸ்டாலின் முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற திமுக ஆட்சிக்கு வர வேண்டும்:ஸ்டாலின் Reviewed by நமதூர் செய்திகள் on 21:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.