சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார்.
இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் என்ற அமைப்பினரின் தொடர்பு எண் கொடுத்தேன். அதன்பிறகு எப்படியோ காவல்துறையினர் மூலம் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கிறார்கள்.

காதலுக்கு குறுக்கே நிற்கும் வழக்கமான சாதி பிரச்னைதான் இந்த காதல் தம்பதியை பிரிக்க முயற்சிப்பதற்கும் காரணம்.
திருச்சியைச் சேர்ந்த திலீபன் என்ற இளைஞருக்கும் சாத்தூரிலிருக்கும் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த …. பெண்ணுக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு காரணமாக இருவரும் முன்னதாக பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் நன்கு படித்தவர்கள். வேலை பார்ப்பவர்கள்.
இந்நிலையில் ஊருக்கு சென்ற அந்த பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அது இப்போது சல்மா அவர்களின் முயற்சியால் தடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக பல காதல் கதைகளில் வரும் செண்டிமெண்ட் அட்டாக்கான தற்கொலை செய்து கொள்வோம் என்று அந்த பெண்ணின் பெற்றோர் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பெண் செய்தவறியாமல் தவித்து வருகிறார். இளைஞரோ மனைவியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அச்சத்திலிருக்கிறார்.
சரி இதில் வைகோ எங்கிருந்து வருகிறார் என்ற கேள்வி உங்களுக்கு இந்நேரம் எழுந்திருக்கும். காவல் நிலைய பஞ்சாயத்தின்போது, பெண்ணின் வீட்டார் “வைகோ எங்கள் சமூகம் தான்.. எங்கள் நெருங்கிய உறவினர்தான். நாங்கள் அவர் மூலம் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து பெண் காவலர்கள் தம்பதியை பிரித்து வைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த பெண்ணின் வீட்டார் வைகோவின் உறவினர் என்பதால் மட்டும் நாம் வைகோவுக்கு இந்த கோரிக்கையை வைக்கவில்லை. திவ்யா இளவரசன் காதலையொட்டி ஏற்பட்ட சாதி வெறியாட்டத்தின்போதெல்லாம் சாதிவெறியை கண்டித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தவர் வைகோ.
ஆகையால் இன்று தன் நெருங்கிய உறவினர் சாதியைக் காரணம் காட்டி, ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டவர்களை பிரிக்க முயல்வதை வைகோ தடுக்க வேண்டும். பெண்ணின் பெற்றோரை அழைத்து, “நாமெல்லாம் திராவிடர்கள்.. நமக்குள் சாதிவெறி இருக்கக் கூடாது..” என்பதை வைகோ தன் சொந்த சாதிக்காரரான உறவினர்களுக்கு புரிய வைப்பார் என நம்புகிறேன்.
வைகோவுக்கு துணையாக சாதி ஒழிப்பில் தீவிரம் காட்டும் இடதுசாரி தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் திருமா ஆகியோர் துணை நின்று சாதியின் பெயரால் ஒரு காதல் ஜோடி பிரிக்கப்படுவதை தடுத்து அவர்களை திருமண வாழ்க்கையில் இணைத்து வைக்கும்படி வேண்டுகிறோம். முடிந்தால் தங்கள் பிரச்சார மேடையிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து சாதிவெறிக்கு எதிரான தங்களின் போராட்டத்தை முன்னெடுக்கலாம்.
சாதி ஒழிப்பு பேசும் வைகோவுக்கும் அவரது கூட்டணி தலைவர்களுக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு இது. இந்த விவகாரம் மதிமுகவின் செய்தி தொடர்பாளர் மின்னல் அலி மூலம் வைகோவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
அப்படி தகவல் சொல்லவில்லையென்றாலும் பரவாயில்லை.. இணையத்தில் புரட்சி புயல்களாக சுற்றி வரும் திராவிட சாதி ஒழிப்பு போராளிகளான மதிமுகவினர் தங்கள் தலைவரின் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன்.
கார்ட்டூனிஸ்ட் பாலா, ஊடகவியலாளர். 
சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..! சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..! Reviewed by நமதூர் செய்திகள் on 23:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.