தொல்காப்பியம் தமிழ் மொழியின் ஆணிவேர்

தொல்காப்பியம், தமிழ் மொழியின் ஆணி வேர் என்றார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், தமிழியற்புலத் தலைவருமாகிய பேராசிரியர் முனைவர் சு. அழகேசன்.
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் பதியம் இலக்கியச் சங்கமத்தின் நெய்தை தமிழாய்வு நடுவம் சார்பில் தொல்காப்பியம் பயிலரங்கு மாவட்ட மைய நூலகத்தில், அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப் பயிலரங்கைத் தொடக்கிவைத்து, அவர் மேலும் பேசியது:
தமிழின் உயிர் நூலாய் நிலைபெற்று வாழ்வது நமது இலக்கண நூலாகிய தொல்காப்பியமாகும். இலக்கணக் கட்டமைப்பு மிகச்சரியாக இருந்தால்தான், ஒரு மொழி நிலைபேறுடையதாக வாழ்ந்திடும்.
தொல்காப்பியம் நம் தமிழ்மொழியின் ஆணிவேராய் அமைந்துள்ளது. காலங்கள் கடந்தும் நிலைத்தப் புகழோடு, இளமையோடு தமிழ்மொழி உலா வர தொல்காப்பியமே முழுமுதல் காரணியாகும்.
நம் மொழி என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அதை உயிர்ப்போடு கட்டிக் காக்கின்ற இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை அறிமுகப்படுத்துவது, எளிமைபடுத்துவது, ஈடுபாடு கொள்ளச் செய்வது, ஆராய்வது என ஏதேனும் செய்தாக வேண்டும். இவற்றை நிறைவு செய்யும் வகையில், இலக்கணத்தை நாம் நேசிக்க வேண்டும்.
தொல்காப்பியம் போற்றுதலுக்குரியதும், மிக எளிமையானதும் ஆகும். நம்மொழியின் வாழ்வும், வளமும் தொல்காப்பியத்தைப் பேணுவதில் அமைந்துள்ளது.
சமூக தளத்தில் இயங்குகின்ற மொழிச் சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி வெளிப்படுத்தும் பதிவாக தொல்காப்பியம் உள்ளது. தொல்காப்பியத்தைத் தமிழர்கள் தலைமேல் போற்றிப் புகழவேண்டும் என்றார் முனைவர் சு. அழகேசன்.
தொடர்ந்து, வரலாற்று ஆய்வாளர் ரத்தினம் ஜெயபால், சமூக ஆர்வலர் சாரங்கபாணி, கவிஞர் எட்வின், மருத்துவர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தொல்காப்பியத்தின் பல்வேறு இயல்களை ஆசிரியர்கள் வ. சுனில் சகாயராஜ், இரா. ராஜா, இல. வசந்தமல்லிகா, பேராசிரியர்கள் தி. சுமதி, சே. சுரேஷ், ப. செந்தில்நாதன், த. மகேஸ்வரி, மு. சகிராபானு, த. புனிதா, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அழகுலெட்சுமி, க. குமரகுருபரன், மு. முத்துமாறன், கா. அன்பரசு, ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இப்பயிலரங்கில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கினார் திருச்சிராப்பள்ளி தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சு. தம்புசாமி.
இதில், மாவட்ட நூலக அலுவலர் இரா. பத்மா, வேப்பூர் பாரதிதாசன் மகளிர் உறுப்புக் கல்லூரி, குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி, அரியலூர் அரசு கலைக் கல்லூரி, பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி, முசிறி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர் மீனாட்சி ராமசாமி கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாவட்ட மைய நூலகர் கோ. சேகர் வரவேற்றார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் தி. தர்மராஜ் நன்றி கூறினார்.
தொல்காப்பியம் தமிழ் மொழியின் ஆணிவேர் தொல்காப்பியம் தமிழ் மொழியின் ஆணிவேர் Reviewed by நமதூர் செய்திகள் on 02:35:00 Rating: 5

No comments:

Powered by Blogger.