ஒரு நூலகம் உங்களுடன் உரையாடுகிறது!

நண்பர்களே! உங்களிடம் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. பல நாட்களாக உங்களுடன் பேச வேண்டும், எனது எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை இன்றுதான் நிறைவேறுகிறது...


உங்களுடைய நண்பனான நான்... உங்கள் அருகாமையில்தான் வசிக்கிறேன். அப்படி இருக்க ஏன் நீங்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நான் உங்களுக்காக, உங்கள் அறிவு விருத்திக்காக எவ்வளவு சுமைகளை சுமந்து கொண்டு இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? நான் இல்லாத பல இடங்களில் எனக்காக எத்தனைப்பேர் கஸ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்காக எத்தனை போராட்டங்கள்.... ஆனால் நான் உங்கள் அருகிலேயே இருக்கிறேன். ஆனால் நீங்க கண்டுகொள்ள மறுக்கிறீர்கள். உங்களுக்காக நான் என்ன என்ன வாங்கி வைத்திருக்கிறேன் என்று வந்து பாருங்கள் ... 

நீங்கள் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தினத்தந்தி, தினமலர், தினமணி, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களை தினமும் வர வைக்கிறேன். பல வார, மாத இதழ்களும் எண்ணிலடங்காமல் உங்களுக்காக நிரப்பி வைத்துள்ளேன். ஆனந்த விகடன் உள்ளிட்ட விகடன் குழுமம், குமுதம், குங்குமம், கல்கி, புதிய தலைமுறை + கல்வி, பாக்யா, ராணி, சமரசம், சமநிலை சமுதாயம், தாமரை போன்ற எண்ணற்ற இதழ்களை உங்களுக்காக சுமந்து கொண்டு காத்திருக்கிறேன். நீங்கள் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.

அதுமட்டுமா நீங்கள் நினைத்து பார்க்க முடியாத வகையில் அறிவுக்களஞ்சியங்களை குவித்து வைத்துள்ளேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் என்னிடம் உள்ளன பல்வேறு தலைப்புகளில்....  அரசியல், அறிவியல், சுற்றுச்சூழல், வரலாறுகள், கவிதை தொகுப்புகள், இலக்கியம், சிறுகதைகள், பொருளாதாரம், ஆன்மீகம், உலகம், சமூகம், தன்னம்பிக்கை நூல் இப்படி விரிந்துகொண்டே செல்கின்றன.

பாருங்கள் நண்பர்களே! எவ்வளவு சுமைகளை நான் சுமக்கிறேன். யாருக்காக, உங்களுக்காகத்தானே! நீங்கள் உங்கள் அறிவை விரிவாக்கிக்கொள்ள, உங்களது பார்வைகளை, எண்ணங்களை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே! ஆனால் நீங்கள் ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள்! நான் இருக்கும் பக்கமே வர தயங்குகிறீர்கள்!

ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் நமது ஊரில் வெறும் முப்பது பேர்தான் ஒருநாளைக்கு வருகிறார்கள்.. அதிலும் பாதிப்பேர் நாளிதழ்களை மட்டுமே படித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். உங்களுக்காக ஆயிரக்கணக்கான புத்தகங்களை சுமக்கிறேனே அதை ஏறிட்டும் பார்ப்பதில்லை... உங்களுக்கு நேரமின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அதற்கு கவலைப்பட தேவையில்லை. புத்தகத்தை எடுத்து சென்று உங்கள் வீட்டிலேயே படிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விசயம்தான்... நீங்கள் என்னுடைய நண்பனாக (உறுப்பினராக) இருக்க வேண்டும். அவ்வளவுதான்!

என்னிடம் உள்ள புத்தகங்கள் பொருளாதாரத்தில் மதிப்பிட்டால் லட்சக்கணக்கில் வரும். அவ்வளவு தொகையை நீங்கள் செலவு செய்து புத்தகங்கள் வாங்க முடியுமா? முடியாது அல்லவா! அதற்காகத்தான் அரசாங்கமும், பல நல்ல உள்ளங்களும் செலவு செய்து இவ்வளவு பெரிய அறிவு களஞ்சியமாக என்னை உருவாக்கி இருக்கிறார்கள். என்னை நீங்கள் இன்னும் உள்வாங்கிகொள்ளவில்லை. அதனால்தான் அலட்சியமாக இருக்கிறீர்கள். உலகில் எல்லா பெரியமனிதர்களும் என்னிடம் வந்த பிறகுதான் வாழ்வில் உயர்ந்தார்கள். 

நண்பர்களே! எனது மனதில் இருந்த எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்டு விட்டேன்.... எனக்கு ஒரே ஒரு கோரிக்கைதான்... என்னை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்... அதன்மூலம் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஊரையும், உங்கள் தேசத்தையும் வளப்படுத்துங்கள்.

- வி.களத்தூர் சனா பாரூக்

நன்றி : vkalathur.in 
ஒரு நூலகம் உங்களுடன் உரையாடுகிறது! ஒரு நூலகம் உங்களுடன் உரையாடுகிறது! Reviewed by நமதூர் செய்திகள் on 00:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.