தேமுதிக வரும் என்ற திமுகவின் அறிவிப்பு : சாணக்கியதனமா! வெகுளித்தனமா!! - வி.களத்தூர் சனா பாரூக்

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை 10.00 மணிமுதல் மதியம் 12.45 வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தான ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடித்து செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஒரு கேள்விக்கு பதிலளித்தது தமிழக அரசியலை மீண்டும் பரப்பரப்பிற்கு உள்ளாக்கிவிட்டுள்ளது. 


"தேமுதிக திமுக கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறீர்களா" என்ற கேள்விக்கு "வரும் என்ற நம்பிக்கையை தான் இன்னும் இழக்கவில்லை" என்கிறார். மற்றொரு கேள்வியான "தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா" என்ற கேள்விக்கு "பேசிக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறுகிறார். இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது பலருக்கு. 

சில நாட்களுக்கு முன்பு இதுபோன்ற கேள்விக்கு "பழம் கனிந்து விட்டது, எப்போது பாலில் விழும் என்று தெரியவில்லை" என்று கூறியபோது திமுக-தேமுதிக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தேமுதிக மகளிர் அணி கூட்டத்தில் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் "தேமுதிக  தனித்து தான் போட்டியிடும் என்றும் அல்லது மற்றகட்சிகளை இணைத்துக்கொண்டு தன் தலைமையில் கூட்டணி அமைக்கும்" என்று அறிவித்தார்கள். அது திமுக-தேமுதிக நெருங்குகின்றன என்ற யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

தேமுதிகவின் இந்த அறிவிப்பால் திமுகவிற்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. குறிப்பாக அரசியல் சாணக்கியர் என்று பலராலும் சொல்லப்படும் கலைஞர் கருணாநிதியின் அரசியில் வியூகங்கள் தோற்றுவிட்டன என்று பலர் எள்ளி நகையாடினர். சமூக வலைதளங்களிலும் அவர் பயன்படுத்திய பழம், பால் என்ற உவமை கடும் விமர்ச்சனதிற்கு உள்ளானது. இது திமுகவின் முதல் தோல்வியாக பார்க்கப்பட்டது.

இதனால் திமுகவிலும் "தேமுதிகவிற்கு ஏன் காத்திருக்க வேண்டும். அவர்கள் இல்லாமலே நாம் தேர்தலை துணிந்து எதிர்கொள்ளலாம்" என்ற குரல் கேட்க ஆரம்பித்தன. துரைமுருகன், சுப வீரபாண்டியன், கி.வீரமணி, காசி முத்துமாணிக்கம் போன்றவர்கள் தேமுதிகவை விமர்சிக்க தொடங்கினர். இரண்டு நாட்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினிடம் "தேமுதிக உடன் பேச்சு நடக்கிறதா" என்று செய்திளார்கள் கேட்டனர். அதற்கு "எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று தெரிவித்தார். இவ்வளவு விசயத்திற்கு பிறகும் திமுகவின் தலைவர் "தேமுதிக திமுக கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை தான் இன்னும் இழக்கவில்லை" என்றும் அவர்களுடன் "பேசிக்கொண்டிருக்கிறோம்" என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு திமுக, தேமுதிக வினரை விட மற்றக் கட்சிகளை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் ஒரு விவாதத்தை இது கிளப்பியுள்ளது.

குறிப்பாக பாஜக, மக்கள் நலக் கூட்டணி, அதிமுக போன்ற கட்சிகள் பதட்டப்படுத்தியுள்ளது இந்த அறிவிப்பு. வைகோ "தேமுதிக தங்களுடன்தான் வரும்" என்று உறுதிபட பல இடங்களில் தெரிவித்து வருகிறார். தேமுதிக வந்தால் தான் தாங்கள் ஓரளவு வெற்றிபெற முடியும் என்று உறுதியாக நம்புகிறார். அதனால்தான் விஜயகாந்தை "கேப்டன் விஜயகாந்த்" என்று உயர்வாக பேசி வருகிறார். ஒரே சமயத்தில் மூன்று இடங்களிலும் பேச்சு நடத்தும் தேமுதிகவை சேர்க்கக்கூடாது என்று மக்கள் நலக் கூட்டணியின் நலன் விரும்பிகள் பலர் நினைக்கிறார்கள். அதனால்தான் "யாருடனும் பேசவில்லை தேமுதிக தனித்து போட்டியிடும்" என்ற அறிவிப்பை முதலில் வைகோ வரவேற்றார். தேமுதிக விடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற திமுகவின் அறிவிப்பு மக்கள் நலக் கூட்டணிவிற்கு பின்னடைவை தரும். "திமுகவுடன் மறைமுகமாக பேசிக்கொண்டிருக்கும் தேமுதிகவுடன் இணைந்து செயல்படக்கூடாது" என்று மக்கள் நலக் கூட்டணி சில நெருக்குதல்களை அவர் சந்திக்க கூடும். அதனால்தான் திமுகவின் இந்த திடீர் அறிவிப்பை  "வெக்கமில்லையா, மானமில்லையா"  கடுமையாக விமர்சிக்கிறார் வைகோ. திமுக விடம் பேசுவதை நிறுத்திவிட்டார், பாஜக மீதும் அவர் வருத்தத்தில் இருக்கிறார் அதனால் கண்டிப்பாக மக்கள் நலக் கூட்டணிக்கு தான் வருவார் என்ற எதிர்பார்ப்பு திமுகவின் இந்த அறிவிப்பின் மூலம் பொய்த்துள்ளது.

அதேபோல பாஜகவையும் இந்த அறிவிப்பு மனதளவில் தளர்ச்சியடைய செய்துவிட்டது. "தேமுதிகவை நம்பி நாங்கள் இல்லை. தேமுதிகவை நாங்கள் கட்டாயப்படுத்த விரும்பவில்லை" என்று தமிழிசை வெறுத்துபோய் கூறுகிறார். தேமுதிகவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற அறிவிப்பு அவர்களை சோர்வடைய வைத்துவிட்டது என்பதே உண்மை. திமுக தேமுதிகவிடம் பேசுவது பாஜகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும். குறைந்தது இந்த அறிவிப்பை மறுக்காத வரை பாஜக தலைவர்கள் தேமுதிகவுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். இது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கும்.

இதில் திமுகவும் தேமுதிகவும் சேர விடக்கூடாது என்று ஆரம்பம் முதலே காய்களை நகர்த்தி வருகிறது அதிமுக. இந்த அறிவிப்பினால் அதிமுகவிற்கும் சிறிது பதட்டம் உருவாகி இருக்கும். அவர்கள் இனி சேர மாட்டார்கள் என்று தனது வேலைகளை முன்னோக்கி நகர்த்தியது. அடுத்த கட்ட வேளைகளில் கவனம் செலுத்தியது. இப்போது மீண்டும் அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்கான வேலைகளில் கவனம் திசைதிரும்பும். திமுகவுடன் தேமுதிக சேர்ந்தால் தான் மீண்டும் வெல்ல முடியாது என்று அதிமுக நினைப்பதால் அவர்கள் நெருங்க விடக்கூடாது என்ற வேலைகளை மீண்டும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இவை எல்லாவற்றையும் விட திமுகவின் அறிவிப்பு தேமுதிகவில்தான் பூகம்பத்தை கிளப்பும். தேமுதிகவில் பெரும்பாலனவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். ஆனால் திமுகவை விரும்பாத அதன் தலைமை "எனக்கும் ஆசைதான் ஆனால் திமுகதான் இறங்கி வர மறுக்கிறது" என்று சொல்லி அவர்களை ஆறுதல்படுத்தி வருகிறார். திமுகவின் இந்த அறிவிப்பு "நாங்கள் இந்த அளவு இறங்கி வந்திருக்கிறோம். தேமுதிகதான் இறங்கி வர மறுக்கிறது" என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. இதனால் தேமுதிக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்க அதன் தலைமையை நெருக்குவார்கள். அதை விஜயகாந்த் ஏற்றுக்கொண்டு திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அதை விஜயகாந்த் மறுக்கும்பட்சத்தில் திமுகவை விரும்பும் அதன் நிர்வாகிகள் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் சேர்வதற்கு தயாராகி விடுவார்கள்

பலர் கிண்டல் செய்தாலும் திமுக இந்த அறிவிப்பை சரியாக உணர்ந்தே விடுக்கிறது. அதன்மூலம் ஏதாவது ஒரு நன்மை பிறக்கும் என்று நினைக்கிறது. ஒன்று தேமுதிக திமுக கூட்டணிக்கு வரலாம். அப்படி இல்லையென்றால் அதன் நிர்வாகிகள் திமுகவின் பக்கம் வர வைக்கலாம். தேமுதிக வேறு கூட்டணிக்கு சென்றாலும் அதன் வலிமையை குறைக்கலாம். உதாரணமாக "திமுகவுடன் கடைசி வரை பேரம் பேசிய கட்சிதானே தேமுதிக" என்று மக்கள் வெறுக்கும் நிலைக்கு அந்த கட்சியை தள்ளலாம். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளை ஒரு முடிவு எடுக்கமுடியாமல் தடுமாற வைக்கலாம் அல்லது காத்திருக்க வைக்கலாம். இதன்மூலம் அவர்களின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். இதில் எதாவது ஒன்று நடந்தால் கூட அது திமுகவிற்கு சற்று சாதகமான அம்சம்தான்.

"அரசியல் குட்டையை குழப்பலாம் ஏதாவது ஒரு மீன் கிடைக்கும்" என்று பார்க்கிறார் கலைஞர் கருணாநிதி. யார் மீன் பிடிக்க போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தேமுதிக விற்காக திமுக காப்பது என்பது வேதனையான உண்மை என்றாலும். திமுகவின் செயலால் மற்றவர்களையும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் காக்க வைத்து விடுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இதில் சாணக்கியத்தனம் மிகுந்துள்ளதா! வெகுளித்தனம் மிகுந்துள்ளதா என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

- வி.களத்தூர் சனா பாரூக்
தேமுதிக வரும் என்ற திமுகவின் அறிவிப்பு : சாணக்கியதனமா! வெகுளித்தனமா!! - வி.களத்தூர் சனா பாரூக் தேமுதிக வரும் என்ற திமுகவின் அறிவிப்பு : சாணக்கியதனமா! வெகுளித்தனமா!! - வி.களத்தூர் சனா பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 01:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.