"ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாது
எரிவாயு இணைப்பு பெற ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாதென எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன் தலைமையில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் பேசியது:
பெரம்பலூரில் உள்ள கேஸ் நிறுவனத்தில் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உரிய பதில் அளிக்காமல் அவமதிக்கின்றனர். பதிவு செய்து நீண்ட நாள்கள் ஆன பிறகே, வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்கின்றனர். மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமும், எரிவாயு உருளைகள் விநியோகம் செய்வோர் குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றனர். அதேபோல, கேஸ் நிறுவனம் மூலம் எரிவாயு இணைப்பு உள்ளவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வரும் நபர்கள் ரூ. 75 வசூலிப்பதால், நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எரிவாயு இணைப்புக்கு ஆதாரா அட்டையை கட்டாயப்படுத்தி வரும் நிலையை கைவிட்டு, பழைய விலைக்கே விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும், எரிவாயு விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுத்தவர்களுக்கு இதுவரை அட்டை கிடைக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில், 40 சத நபர்களே ஆதார் அட்டை பெற்றுள்ளனர். எனவே, எரிவாயு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
மூத்த குடிமக்கள் சங்க மாவட்டத் தலைவர் அசன் முகமது பேசியது: ஒவ்வொரு எரிவாயு நிறுவனங்களும், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. ஒரு எரிவாயு நிறுவனத்தில் எத்தனை இணைப்புகள் இருந்தாலும், ஒரு மாதத்திற்கு 8 ஆயிரம் எரிவாயு உருளைகள் வழங்க வேண்டும் என்ற விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். எரிவாயு உருளைகள் பெற ஒரு மாதம் காலதாமதமாகிறது. மேலும், எரிவாயு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அவமதிதிக்கக்கூடாது. ஆதார் அட்டை இல்லையென்றாலும், எரிவாயு உருளை வழங்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களை ஒன்றிணைத்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த வி. சந்திரா பேசியது:
கிராமங்களில் எரிவாயு விநியோகம் செய்வோர் பெண்களிடம் அதிகளவு சர்வீஸ் கட்டணம் வசூலிக்கின்றனர். 80 நாளுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்கின்றனர். தற்போது, ஒரு எரிவாயு உருளைக்கு மானியத்துடன் ரூ. 1,281 முதல் ரூ. 1,320 வசூலிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் குறிப்பிட்ட இடத்திலிருந்து எரிவாயு உருளை விநியோகம் செய்வதைத் தவிர்த்து, அனைத்து தெருக்களுக்கும் செல்ல வேண்டும். பெரம்பலூரில் உள்ள இணைப்புதாரர்களை, செட்டிக்குளத்தில் உள்ள கேஸ் நிறுவனத்திற்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்றார் அவர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வேப்பந்தட்டை வட்டத் தலைவர் பி. ரமேஷ் பேசியது:
கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி, அந்தந்த பகுதிகளில் உள்ள எரிவாயு நிறுவனங்களுக்கு காலதாமதமின்றியும், இலவச எரிவாயு இணைப்பு பெற்ற நபர்களுக்கு, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகளையும் வழங்க வேண்டும். பெரம்பலூரில் உள்ள ஒவ்வொரு எரிவாயு நிறுவனங்களுக்கும், எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில், 100 கிலோவிற்கும் கூடுதலாக எரிவாயு உருளைகள் வைத்துள்ளவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டால், எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த. மலையாளம், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். ராஜேந்திரன் உள்பட எரிவாயு நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
"ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாது
Reviewed by நமதூர் செய்திகள்
on
19:53:00
Rating:
No comments: