டெல்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு: தனியார் மின் நிறுவனங்களில் சி.ஏ.ஜி தணிக்கை!
புதுடெல்லி: "டெல்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் நுகரும் வாடிக்கையாளருக்கு அதற்குரிய கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இக் கட்டணச் சலுகை புதன்கிழமை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் கூறினார்.
டெல்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"டெல்லியில் 34,64,000 மின் நுகரும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில் 28 லட்சம் வாடிக்கையாளர்கள் 400 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் நுகர்வோர் ஆவர். அவர்கள் செலுத்தும் மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை மானியமாக வழங்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால் டெல்லி அரசுக்குக் கூடுதலாக ரூ. 200 கோடி செலவாகும். இதில் ரூ. 61 கோடி டாடா பவர் நிறுவனத்துக்கும், மீதமுள்ள ரூ. 139 கோடி, பிஎஸ்இஎஸ் யமுனா, ராஜ்தானி ஆகிய இரு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 4,000 கோடி நிலுவைத் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.
மின்சார கட்டணத்துக்கான அரசு மானியம், மின் விநியோக நிறுவனங்களிடம் இனி வழங்கப்படாது. அத் தொகையை மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்திரபிரஸ்தா, பிரகதி, டெல்லி டிரான்ஸ்கோ ஆகிய அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு நேரடியாக டெல்லி அரசே வழங்கும்.
டெல்லியில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று தனியார் நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்வது அவசியம். இது குறித்து தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சசிகாந்த் சர்மாவுடன் ஆலோசனை நடத்தினேன். தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு மானியமாக கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அரசு ஒதுக்கி வருகிறது. எனவே, அதன் கணக்குகளைத் தணிக்கை செய்ய ஆட்சேபம் இல்லை என்று சசிகாந்த் சர்மா கூறினார். எனவே, அதற்கு ஒப்புதல் தெரிவிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
டெல்லியில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று தனியார் நிறுவனங்களின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை புதன்கிழமை அவற்றின் தலைவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, அந் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கை மீது மீண்டும் டெல்லி அமைச்சரவை கூடி விவாதிக்கும். அதன் பிறகு, அதன் கணக்குகளை சிஏஜி தணிக்கை செய்வார். அதற்கு ஏதுவாக துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க டெல்லி அரசு கேட்டுக் கொள்ளும்' என்றார் கெஜ்ரிவால்.
டெல்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு: தனியார் மின் நிறுவனங்களில் சி.ஏ.ஜி தணிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:26:00
Rating:
No comments: