பொது வாக்கெடுப்பு : அதிபர் வெற்றி!
துருக்கி அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும்வகையில், அரசியல் சாசன சட்டத்திருத்தம் செய்வதற்காக பொதுமக்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு வெற்றியில் முடிந்துள்ளது.
துருக்கியில் நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலில் இருந்துவரும் நிலையில், அடிக்கடி கிளர்ச்சியாளர்களால் ராணுவப் புரட்சி ஏற்பட்டு துருக்கி நாடு பொருளாதாரரீதியாக பெரும் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு, ஜூலை மாதம் உருவான ராணுவப் புரட்சியை அதிபர் தயீப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார். அதையடுத்து, துருக்கியில் நாடாளுமன்ற ஆட்சி முறையை ஒழித்துவிட்டு, அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவர அதிபர் எர்டோகன் திட்டமிட்டார். அதற்கு ஏற்றவகையில் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
மேலும் இது தொடர்பாக மக்கள் கருத்து கேட்கும்வகையில், துருக்கியில் பொது வாக்கெடுப்பு நேற்று ஏப்ரல் 16ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் 5 கோடியே 50 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
மொத்தம் 99.45 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிபர் ஆட்சி முறைக்கு 51.37 சதவிகிதம் பேரும், நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு 48.63 சதவிகிதம் பேரும் வாக்களித்திருந்தனர். அதையடுத்து, அதிபர் ஆட்சி முறைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. பொது வாக்கெடுப்பு ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டதும் அதிபர் எர்டோகனின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதன்மூலம், துருக்கியில் அதிபரின் அதிகாரம் அதிகளவில் கூடியுள்ளது. மேலும் அதிபர் எர்டோகன் வருகிற 2029ஆம் ஆண்டுவரை அதிபர் பதவியில் நீடிப்பார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550இல் இருந்து 600 ஆக உயர்த்தப்பட்டு, எம்.பி.-க்களின் பதவிக்கான வயது வரம்பு 25இல் இருந்து 18 ஆக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்கெடுப்பு முடிவு அறிவிப்பில் நிறைய குளறுபடிகள் இருப்பதாகவும் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி, குடியரசு மக்கள் கட்சி உள்ளிட்ட 2 எதிர்க்கட்சிகள் பொது வாக்கெடுப்பு முடிவை ஏற்க முடியாது என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது வாக்கெடுப்பு : அதிபர் வெற்றி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:10:00
Rating:
No comments: