மோடியின் ஏமாற்று வேலை நீடிக்காது : முலாயம்சிங் யாதவ் ...

மோடியின் ஏமாற்று வேலை நீடிக்காது : முலாயம்சிங் யாதவ் ...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
403 தொகுதிகள் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 7 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், பாஜக மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 இடங்களைக் கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. மேலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் பா.ஜனதா கூட்டணி 325 இடங்களை தன்வசம் வைத்து அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியைச் சந்தித்தது. அதேபோல, மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் சரிவைச் சந்தித்தது. ஆனாலும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு விழுந்த ஓட்டுகளை மொத்தமாகக் கூட்டி கணக்கிட்டுப் பார்த்தால் பாஜக-வை விட இந்தக் கட்சிகளுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன.
பாஜக-வுக்கு எதிராக மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்திருந்தால் இந்தக் கட்சிகளே வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், வருகிற 2 ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று மாயாவதி கூறியிருந்தார். இதுகுறித்து, அகிலேஷ் யாதவும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மற்ற கட்சிகளுடன் குறிப்பாக, பகுஜன் சமாஜூடன் கூட்டணி அமைப்பதற்கு அவர் தயார் என்பதுபோல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம்சிங் யாதவ், இன்று ஏப்ரல் 17ஆம் தேதி லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருக்கிறது. எங்களால் பாஜக-வை தோற்கடிக்க முடியும். எனவே, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் பாஜக-வை வீழ்த்த முடியும் என்ற நிலை எங்களுக்கு வரவில்லை. கூட்டணி இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில், எங்கள் கட்சி தோற்றதற்கு ஊடகங்கள்தான் முக்கியக் காரணம். எங்கள் குடும்பத்தில் நடந்த சிறிய வி‌ஷயங்களை பெரிதுபடுத்தி செய்திகளாக்கிவிட்டார்கள். மோடியைப் பற்றி பொய் தகவல்களைக் கூறி பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்கள். இதன்மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். எனவேதான் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. அதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சொல்ல முடியாது.
அகிலேஷ் யாதவ் ஆட்சியில் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் அதை ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. நான் இப்போது கட்சித் தலைவராக இல்லை என்றபோதிலும் அதனால் கட்சிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம்மனோகர் லோகியா போன்றவர்கள் எல்லாம் எந்தக் கட்சிக்கும் தலைவர்களாக இருந்தவர்கள் அல்ல. ஆனாலும் அவர்கள் மாபெரும் தலைவர்களாக இருந்தார்கள். அதேபோல நானும் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
மோடியின் ஏமாற்று வேலை நீடிக்காது : முலாயம்சிங் யாதவ் ... மோடியின் ஏமாற்று வேலை நீடிக்காது : முலாயம்சிங் யாதவ் ... Reviewed by நமதூர் செய்திகள் on 22:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.