பிப்டி - பிப்டி: எடப்பாடி- மோடி டீல்?
பிளவு கொண்ட அதிமுக மீண்டும் இணைய பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் உள்ளே நடக்கும் விவகாரங்களோ, வேறு திசையில் செல்கிறது. இன்னும் அசாதாரண சூழல் தொடரும் நிலையில் பன்னீர் செல்வத்தை கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி திட்டம் தீட்டியுள்ளார் என்பதே அதிமுகவின் ஆன்ட்டி கிளைமேக்ஸ்.
பிரதமர் மோடியை சந்திக்க கடந்த ஒரு வார காலமாக நேரம் கேட்டு காத்திருந்தார் எடப்பாடி. மோடியின் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வாராமல் இருந்த நிலையில் இப்போது ஏப்ரல் 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்துள்ளார் மோடி. இதன் பின்னணியில் என்ன நடந்தது, என்று பிஜேபி வட்டாரத்தில் பேசினோம்.
‘பன்னீர் செல்வத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை மோடி நம்புகிறார். ஆனால் அதிமுகவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மத்தியில் பன்னீருக்கு ஆதரவு இருப்பதாக இருந்தாலும் இதுவரை பன்னீரை நம்பி பெரிய அளவில் அவர்கள் பன்னீர் அணிக்கு வரவில்லை. அமைச்சர்கள், எல்.எல்.ஏ.,க்களுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் இருப்பதால் ஆளும் கட்சியினருடன் இருந்துகொண்டு ஓட்டிவிடலாம் என்கிற மனநிலையில் இருப்பதால் பன்னீரை நம்பி வராமல் இருக்கிறார்கள். சிம்பிளாக சொன்னால், படரும் கொடி அருகில் இருக்கும் தாவரத்தின் மீதுதான் படரும். ஆதலால் ஆட்சி எந்தப்பக்கம் இருக்கிறதோ அந்தப்பக்கமே இருக்க நினைக்கிறார்கள்.
பன்னீரை திருப்பி முதல்வராக கொண்டு வந்தால் மோடியின் உள்ளங்கையில் தமிழ்நாடு அரசு இருப்பதாக அப்பட்டமாகத் தெரிந்து விடும் என்று பிஜேபி நினைக்கிறது. அது தமிழகத்தில் தனக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மோடி நினைக்கிறார். தவிர, முன்பு பன்னீர் செல்வம் கொடுத்த ஒத்துழைப்பைவிட இன்னும் தாராளமாக குனியவும் தயராக இருக்கிறார் எடப்பாடி. அதனால் இந்த செட்டப்பை தொடர்வதுதான் டெல்லிக்கு தோதாக இருக்கும்’ என்கிறார்கள்.
தவிர, இப்போது டெல்லி செல்லும் பழனிசாமியின் கையில் ஒரு கோப்பு இருக்கிறது. அதில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு ‘பிஜேபிக்கு’ தோதாக இருக்கக் கூடிய 20 தொகுதிகளின் பட்டியலையும் தயார் செய்து வைத்துள்ளார். மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக நிற்பதாக முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் ’நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்வதாகத் தகவல்கள் வந்தாலும், உண்மையில் பழனிசாமி செல்வது, அதிமுகவின் ‘விதி’ ஆய்வுக்காகவே என்ற பேச்சு அடிபடுகிறது. தவிர, சட்டமன்றத் தேர்தலிலும் பிஜேபிக்கு கனிசமான இடங்களை ஒதுக்கப்போவதாகவும் பேசிக்கொள்கிறார்கள். மோடி - எடப்பாடி சந்திப்புக்கு அச்சாரம் போட்டவர் அமித்ஷாவுக்கு மிகவும் வேண்டிய கவர்னர் ஒருவர் என்கிறார்கள் பிஜேபி வட்டாரத்தில்.
’ஏப்ரல் 23ஆம் தேதி டெல்லிக்கு பழனிசாமி தனியாகச் சென்று மோடியைச் சந்தித்தால் பன்னீருக்கு கல்தா என்றும், ஒருவேளை கடைசி நேரத்தில் பன்னீரையும் மோடி அழைத்தால் மட்டுமே பன்னீரின் தலை தப்பும்’ என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.
பிப்டி - பிப்டி: எடப்பாடி- மோடி டீல்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:15:00
Rating:
No comments: