ஆட்சி : கட்சித் தலைமை மாற்றமா?
அதிமுகவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வந்த களேபர காட்சிகள் முடியும் தருவாய்க்கு வந்துள்ளது. பிரிந்த இரட்டை இலை ஒன்றுசேர நேரம் கூடிவந்துள்ளது. முதல் கட்டமாக நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இரண்டு முறை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஐஎன்எஸ் போர்க்கப்பலை பார்வையிட அழைப்பதாகக் கூறி அனைத்து ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கும் சென்னை வருமாறு அவசர அழைப்பு சென்றுள்ளது. இதனால் எம்எல்ஏக்கள் சென்னை விரைந்துள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு 11 மணிக்கு சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் தங்கமணி வீட்டில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார்' கட்சியை வலிமைப்படுத்தும் நோக்கில் இரு அணிகளும் ஓன்றுசேர்வது குறித்து ஆலோசித்தோம்' என்று கூறினார்.
சம்பந்திக்கு முடிசூட அழைத்தாரா தங்கமணி!
தற்போதுள்ள நிலையில் பன்னீர்செல்வம் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது எனலாம். இந்தச் சூழ்நிலையில் 122 எம்எல்ஏக்களையும் சென்னைக்கு அழைத்தது மின்துறை அமைச்சர் தங்கமணிதான் என்ற தகவல் வந்துள்ளது.ஏனென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், தங்கமணியும் சம்பந்திகள். எனவே தன்னுடைய மச்சானுக்கு முடி சூடவும், அவர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்கவும் அமைச்சர் தங்கமணி விடுத்த அழைப்பின் பேரில்தான் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு எம்எல்ஏகள் வரவுள்ளனர். மேலும், பன்னீர் அணியின் முன்னணி தலைவர்களுடன் நடைபெற்ற ரகசியப் பேச்சு வார்த்தையில் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு பழனிச்சாமி ஆட்சியையும்,பன்னீர்செல்வம் கட்சியையும் கவனித்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனாலும் இதற்கு இன்னும் பன்னீர் தரப்பினர் எந்த இறுதி முடிவு எடுக்கவில்லையாம்.அவர்கள் தரப்பில் இதுகுறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினகரன் தலைமறைவு?
ஏப்ரல் 17ஆம் தேதி காலை செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையிலிருக்கும் சசிகலாவை சந்திக்கச் செல்வதாகக் கூறி சென்றுள்ளார் தினகரன். ஆனால் அவர் சசிகலாவைச் சந்திக்க செல்லாமல் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், தன்னை எந்நேரமும் கைது செய்துவிடலாம் என்ற அச்சத்தில்தான் தலைமறைவாகிவிட்டார் என்கிறார்கள். மேலும் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க தினகரன் சார்பில் முன்ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே நேரத்தில், தினகரன் மீது சசிகலா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்படும் அடுத்தடுத்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு தினகரன்தான் காரணம் என்று நினைக்கிறாராம் சசிகலா. அதற்கேற்றார்போல நடராசனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, இடைத்தேர்தல் ரத்து, வருமான வரித்துறை ரெய்டு, அந்நிய செலாவணி வழக்கின் பிடி இறுகுதல், சமீபத்தில் நிகழ்ந்த மகாதேவன் மரணம் என தினகரன் பதவியேற்றதிலிருந்து நிகழ்ந்துள்ள சிக்கல்களால்தான் இந்த கோபம் என்கிறார்கள். ஆனாலும் சசிகலா குடும்பத்தில் தினகரனைத் தவிர வேறொருவர் தலைமை பொறுப்பிற்கு வந்திருந்தால் மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு பயந்து என்றைக்கோ பாஜகவிற்கு பணிந்திருப்பர். தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றதிலிருந்து தினமும் நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கைதான் வாழ்ந்துள்ளார்.
பன்னீரின் அடுத்த மூவ்
பன்னீர்செல்வம் ஒன்றாக இணைவதற்காக சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதாவது பன்னீர், தான் முதலமைச்சராக வேண்டுமென நினைக்கிறார். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் பன்னீர் நல்ல முடிவை எடுப்பார் எனத் தெரிகிறது. இந்தியா முழுவதும் மடங்கள் வைத்துள்ள,பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான சாமியார் ஒருவரின் சொற்பொழிவு நேற்று இரவு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமியாரிடம் ஆசி பெற்றுள்ளார். எனவே பன்னீர் இன்னும் பாஜகவின் தொடர்பில்தான் உள்ளார் என்று தெளிவாகத் தெரியவந்துள்ளது . இதற்கிடையே இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை என்றத் தகவலைக் கேட்டு பன்னீர்செல்வத்தின் உறவினர்களும், நண்பர்களும் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலையும் ஆட்சியும், கட்சியும் ஒருவரின் கையில் இருந்தால்தான் இரண்டும் நிலைக்கும் என்று நினைகின்றனர். எனவே இரு அணிகளும் விரைவில் ஒன்றுசேரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆக பிரிந்த இரட்டை இலை ஒன்றானால், அது ஜெயலலிதாவின் பழைய இரட்டை இலையாக அமையுமா? அல்லது தாமரையைத் தாங்கும் இலையாக அமையுமா? என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியும்.
ஆட்சி : கட்சித் தலைமை மாற்றமா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:56:00
Rating:
No comments: