பசுவதைத் தடையால் அழியும் மாடுகள்! ...

சிறப்புக் கட்டுரை: பசுவதைத் தடையால் அழியும் மாடுகள்! ...

உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்தப் பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், மாடுகளைக் காப்பதாகக் கூறி அமல்படுத்தும் இந்தப் பசுவதை சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவில் மாடுகளின் இனமே முழுமையாக அழிந்துவிடக் கூடும் என்ற அபாயம் உள்ளது.

இந்நிலையில், பசுவதைச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் அந்தத் தடை எவ்வாறு பசு மற்றும் காளைமாடுகளின் இனத்திற்கே ஆபத்தாக நேரிடும் என்பதைப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இந்தக் கால்நடை கணக்கெடுப்பின்படி, கடந்த 1997முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கை 13 கோடியிலிருந்து 17 கோடியாக உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் காளை மாடுகளின் எண்ணிக்கை 9.6 கோடியிலிருந்து 6.6 கோடியாகக் குறைந்துள்ளது. காளை மாடுகளை வளர்ப்பதில் யாருக்கும் விருப்பமில்லை. விவசாய நிலங்களை உழுவதற்கும், இறைச்சிக்கு மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுவதற்குப் பயன்படுத்தும் காளை மாடுகளுக்கு மாற்றாக டிராக்டர்கள் மற்றும் பால் தரும் எருமை மாடுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்தச் சூழலில் பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால், காளை மாடுகளை இறைச்சிக்குக் கூட விற்க முடியாத சூழல் ஏற்படும்.

எனவே, நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்துவதென்பது காளை மாடுகளின் மீதான தடையாகவே அமைந்து, இந்தியாவிலிருந்தே காளை மாடுகள் முழுமையாக காணாமல்போகும் ஒரு அபாயம் உருவாகலாம்

பசு மாடுகள் பராமரிப்பு செலவுகளும் & பால் விலை உயர்வும்
பசுவதை தடையால் மாடு வளர்ப்பவர்கள் தங்களிடமுள்ள காளைகளை மட்டுமின்றி பசுக்களையும் கூட இறைச்சிக்கு அனுப்ப இயலாது. எடுத்துக்காட்டாக, ஒரு பால் உற்பத்தியாளர் தன்னிடமுள்ள வயது முதிர்ந்த அல்லது பால் தராத பசு மாட்டை அவரால் வெளியேற்ற முடியவில்லையென்றால், அவர் அந்த மாட்டினை வாழ்நாள் முழுவதும் பராமரிக்கவும் தீனி போடவும் வேண்டும். சூழ்நிலை இப்படி இருக்க நாடு முழுவதும் பசுவதை சட்டத்தை அமல்படுத்தினால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதைப் பராமரிக்க தேவையான இடங்களும் அதிகரிக்கும். இதனால் பால் உற்பத்தியார்களின் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் பால் விலை அதிகரிக்கும்.
கடந்த 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 18 கோடி கால்நடைகள் உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் பசுவதை சட்டத்தை அமல்படுத்தினால் வரும் 2027ஆம் ஆண்டிற்குள் கால்நடைகளின் எண்ணிக்கை 36 முதல் 40 கோடியாக உயரும். எண்ணிக்கை உயரும் போது அதற்கான பராமரிப்பு அதிகரிக்கும். அதற்கான செலவுகளும் அதிகரிக்கும். இதனால், மாடு வளர்ப்பாளர்கள் உபயோகமற்ற பசுக்களை வளர்ப்பதைத் தவிர்த்து விடும் சூழல் ஏற்படும். ஒருவேளை அரசாங்கம் வயது முதிர்ந்த பசுக்களை பராமரிக்கப் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து அதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்தாலும் கூட, அது பால் விலையின் உயர்விலேயே முடியும்.

மேலும், பசுவதை காவலர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் எந்தவித அச்சமுமின்றி மக்களைத் தாக்குவதும் படுகொலை செய்வதும் தொடர்ந்தால் பசுவை வளர்ப்பதைக் கூட யாரும் விரும்பமாட்டார்கள். இதனால், பசு மாடுகள் நாட்டிலிருந்து காணாமல் போகக்கூடும்.

முகமது அக்லாக் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாத்திரியில் பிசாரா கிராமத்திலுள்ள தன்னுடைய வீட்டில் உண்பதற்காக மாட்டுக்கறி வைத்திருந்தார் எனப் பொய்யாகக் கூறி படுகொலை செய்யப்பட்டார். இதுபோல பல்வேறு சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தால், அது நாட்டின் இறைச்சி சந்தையையும், தோல் பொருட்கள் ஏற்றுமதி சந்தையையும் கடுமையாகப் பாதிக்கும்.

உலகளவில் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்திலுள்ள நாடு இந்தியா. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியின் அளவு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 14 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2015ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 24 லட்சம் டன் அளவிலான இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாஸ்மதி அரிசியின் மூலம் பெறக்கூடிய வருவாயைவிட இது அதிகமாகும். எனவே, பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தி அதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டிலும், பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தினால் அதனால் நாட்டிற்கும், அதையே தங்களின் வாழ்வாதாரம் என்று நம்பி பிழைக்கக்கூடியவர்களின் நிலையைக் குறித்தும், இதனால் சமுகத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தமிழில்: ரிச்சர்ட்சன்
பசுவதைத் தடையால் அழியும் மாடுகள்! ... பசுவதைத் தடையால் அழியும் மாடுகள்! ... Reviewed by நமதூர் செய்திகள் on 04:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.