அவசரத் தேவை மஞ்சேரி ஃபார்முலா!

சிறப்புக் கட்டுரை: அவசரத் தேவை மஞ்சேரி ஃபார்முலா!

வரலாற்றுப் புகழ்பெற்ற காரணங்களால் ஆர்.கே. தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை கரன்சி கரையான்கள் அரித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. வழக்கத்தை விட பன் மடங்கு பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் என்று தேர்தல் ஆணையம் தன் கழுகுக் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கண்காணித்தும் கரைபுரண்டோடும் கரன்சி வெள்ளத்தைத் தடுக்க முடியவில்லை. இதை தேர்தல் ஆணையமே தனது இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.
பொதுவாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல் என்று வந்தால்... அந்தத் தொகுதி மக்கள் அதிர்ஷ்டசாலி என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி அழைக்கப்படும்போதே ஜனநாயகம் துரதிர்ஷ்டசாலி ஆகிவிடுகிறது. கடந்த பல வருடங்களாகவே இடைத் தேர்தல் என்பது அரசு எந்திரத்தின் மூலம் ஆளுங்கட்சி வெற்றியை வாங்கும் ஒரு ஜனநாயக சடங்காகவே நடந்துவந்திருக்கிறது.
இடைத் தேர்தல் என்றால் ஆளுங்கட்சியின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் தேர்தல் பணிக்குழுவாக மாற்றப்படும். இதுவே எதிர்க்கட்சி என்றால் ஒட்டுமொத்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் களமிறப்படுகிறார்கள். இந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இதைத்தான் செய்தன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அத்தனை அமைச்சர்களும் ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள். கடந்த இருபது நாட்களாக அவர்கள் மக்கள் பணியை விட தேர்தல் பணிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், வேட்பாளருமான தினகரன், 'எங்கள் கட்சி நிர்வாகிகள் சுமார் ஒரு லட்சம் பேர் தேர்தல் பணியாற்றினர்' என்று வெளிப்படையாக பேசுகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு 62 ஆயிரம் என்று கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆக ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரி பாதி அளவுக்கு அ.தி.மு.க.வின் நிர்வாகிகளே தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு சற்றும் குறையாமல் தி.மு.க.வினரும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆர்.கே.நகரை முற்றுகையிட்டு தேர்தல் பணியாற்றினார்கள். இந்த இரு கட்சிகளும் கொண்டு வந்து இறக்கிய நபர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலே அது ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.
இப்படிக் குவிப்பதன் பின்னால் இன்று தேர்தல் ரத்தானதற்குக் காரணமான கரன்சி விநியோகம்தான் இருக்கிறது. இடைத்தேர்தல் நடக்கும் சிறு தொகுதி பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. சிறு சிறு டீம்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டீமுக்கும் சுமார் நூறு வாக்காளர்களை மெயின்டெயின் செய்யும் 'பொறுப்பு' வழங்கப்படுகிறது. தேர்தல் பணியாற்றும் இருபது நாட்களிலும் அந்த நூறு பேரின் முகங்களும் பொறுப்பாளர்களுக்கு பரிச்சயம் ஆகிவிடும். இந்த பரிச்சயத்தின் பின்னால்தான் ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று கரன்சி விநியோகம் எளிதாக நடக்க ஏதுவாகிறது.
இருபெரும் கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான தகவமைப்பை ஏற்படுத்தவே இத்தனை பெரிய பணிக் குழுவை அமைக்கின்றனர். ஆக அவை பணிக்குழுக்கள் என்று அழைக்கப்படுகிற பணக் குழுக்களே.
இந்தத் தேவையற்ற நெரிசலால் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அசூயை அடைந்திருப்பதை அவர்களின் பேட்டிகளே காட்டுகின்றன. இடைத்தேர்தல் ரத்து அறிவிப்புக்குப் பின் ஊடகங்களிடம் பேசிய ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், ''இருபது நாளா எந்தப் பக்கமும் திரும்ப முடியலை. சந்துபொந்துல கூட வெளியூர் காரங்கதான். ஏற்கனவே நெருக்கடியான எங்க ஏரியா வெளி மாவட்ட கார்களால தவிச்சுப் போச்சு. அடாவடி பண்ணிட்டாங்க. இப்பதான் நிம்மதியா இருக்கு'' என்கிறார்கள்.
திருமங்கலம் ஃபார்முலா, ஏற்காடு ஃபார்முலா, ஆர்.,கே.நகர் ஃபார்முலா என்று பெயர்கள் வேறுபட்டாலும் கரன்சியை கடைமடை வரை பாய்ச்சுவதே இந்த ஃபார்முலா.
இந்த ஃபார்முலாக்களுக்கு மாற்றாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இப்போது தேவைப்படுகிற ஃபார்முலா ஒன்று இருக்கிறது. மஞ்சேரி ஃபார்முலாதான் அது.
மஞ்சேரி ஃபார்முலா?
கேரள மாநிலத்திலுள்ள மஞ்சேரி தொகுதி இன்று மலப்புரம் தொகுதியாக அறியப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் இந்த நாடாளுமன்றத் தொகுதியில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் 1962, 67, 71 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்றார். காயிதே மில்லத் அவர்களின் வாக்கு அப்போது சென்னையில் பரங்கிமலை தொகுதியில் இருந்தது. அகில இந்திய செல்வாக்கு பெற்ற தலைவர் என்பதால் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் தொடர்ந்து அவர் போட்டியிட்டு வென்றார். அவரது தேர்தல் ஃபார்முலாதான் இப்போது ஜனநாயகத்தைக் காப்பாற்ற பெருந்தேவையாக இருக்கிறது.
மஞ்சேரி தொகுதியில் போட்டியிட கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்போது சைதாப்பேட்டை கலெக்டர் அலுவகத்தில் ஒன்றே கால் ரூபாய் ஸ்டாம்ப் கட்டி தனது பெயர் பரங்கிமலை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருப்பதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் காயிதே மில்லத் அவர்கள் சென்னையில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் அல்லது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு கோழிக்கோடு அடைவார். அங்கே தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்வார். அன்று இரவே கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்டு திருச்சூர் வழியாக கோவை வந்து அங்கிருந்து சென்னை வந்துவிடுவார். மீண்டும் வெஸ்கோஸ்ட் அல்லது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எளிதாக சென்னை திரும்ப மாட்டார். ஏனென்றால், அந்த ரயில்கள் தான் போட்டியிடும் மஞ்சேரி தொகுதி வழியாக வருவதால் அதில் பயணிக்காமல் திருச்சூர் வழியாக கோவை வந்து சென்னை திரும்புவார்.
இதற்கு கண்ணியம் மிகு காயிதே மில்லத் அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா?
''நான் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டேன். நான் உட்பட யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை வேட்பு மனு பரிசீலனை முடிந்தபின் தேர்தல் ஆணையம் மக்களிடம் அறிவிக்கும். அந்த வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்பதை மக்கள் சுயமாக முடிவு செய்ய வேண்டும். மக்களிடம் போய், 'எனக்கு ஓட்டு போடுங்கள்' என்று நான் பிரசாரம் செய்யமாட்டேன். அவர்களின் மனதுக்குள் சென்று வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்தக் கூடாது. யார் சிறந்தவர்கள் என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்'' என்று விளக்கம் அளித்தார் காயிதே மில்லத்.
மஞ்சேரி தொகுதியில் போட்டியிட்ட மூன்று முறையும் காங்கிரஸும், கம்யூனிஸ்டும் காயிதே மில்லத்துக்கு எதிராக செல்வாக்கு மிக்க வலிமையான வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால் காயிதே மில்லத் வேட்பு மனு தாக்கல் செய்ததும் அந்தத் தொகுதியைக் கூடத் தொடாமல் சுற்றிக் கொண்டு சென்னை திரும்புவார். ஆனபோதும் மக்கள் மூன்று முறையும் காயிதே மில்லத்தையே வெற்றி பெற வைத்தனர். வெற்றி பெற்றதும் தன் தொகுதியின் குக்கிராமங்களுக்குக் கூட சென்று மக்களுக்காகப் பாடுபடுவார் காயிதே மில்லத். தேர்தல் காலங்களில் மட்டும் தன் தொகுதிக்கே செல்லமாட்டார்.
தேர்தல் காலத்தில் கூடிக் கும்மாளமிட்டு தொகுதியை முற்றுகையிட்டு பிரச்சாரம் என்ற பெயரில் ஜனநாயகத்தை பண நாயகமாக்கிவிட்டு... வெற்றி பெற்றதும் தொகுதிப் பக்கமே திரும்பிப் பார்க்காத அரசியல்வாதிகள் மத்தியில், இப்படியும் ஓர் அரசியல் வாதி இருந்திருக்கிறார் என்பதால்தான் அவர் கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அழைக்கப்படுகிறார்
எனவே இப்போதைய ஜனநாயகத்தின் தேவை திருமங்கலம் ஃபார்முலாவோ, ஆர்.கே.நகர் ஃபார்முலாவோ அல்ல... கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் கற்றுக் கொடுத்த மஞ்சேரி ஃபார்முலா
மட்டுமே! அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தேர்தல் ஆணையமும் இந்த மஞ்சேரி ஃபார்முலாவை இப்போது நடைமுறைப்படுத்த பரிசீலனை செய்ய வேண்டும்.
அப்போதுதான் இடைத்தேர்தல் என்ற பெயரில் ஜனங்களும் ஜனநாயகமும் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்க முடியும்!
-ராகவேந்திரா ஆரா
அவசரத் தேவை மஞ்சேரி ஃபார்முலா! அவசரத் தேவை மஞ்சேரி ஃபார்முலா! Reviewed by நமதூர் செய்திகள் on 00:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.