ராஜசங்கீதன் ஜான்
ராஜசங்கீதன்
கவண் பட விமர்சனங்களிலும் நீயா நானா வரதட்சணை நிகழ்ச்சி பகுதி 2 பற்றிய பதிவுகளிலும் மூழ்கி முத்தெடுக்க போகிற முகநூல் தமிழர் வாழ் பிரதேசத்தில், கடந்து போன ஒரு முக்கியமான பிரச்சினையை திரும்ப கொண்டு வர விழைகிறேன். ‍‍
கோயம்புத்தூரில் நடந்த ஃபாரூக் கொலை! ‍‍
ஃபாரூக் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர். நாத்திகர். நபிகள் பற்றி ஒரு புத்தகம் எழுத இருந்தவர். கடவுள் நம்பிக்கைக்கு எதிராக வாட்சப் குழு ஒன்று நடத்தியவர். அவர் கொல்லப்பட்டது, அந்த குற்றத்துக்கு பொறுப்பேற்று சரண் அடைந்தவர்களும் இஸ்லாமியர்கள் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த முன் கதை. ‍‍
சரண் அடைந்தவர்கள் ஃபாருக் நாத்திகம் பேசியதால் கொன்றதாக போலீஸாரிடம் சொன்னதாகவும் தகவல். இருக்கட்டும். ‍‍
இஸ்லாமிய எதிர்ப்பு கூச்சல், இஸ்லாமியர்களிடம் இருந்து தங்களை தள்ளி நிறுத்தி கொண்ட தி.க. தலைமை, மனுஷ்யப்புத்திரன் கவிதை, ஜெயமோகனின் கருத்தாழம் மிக்க பதிவு எல்லாம் பிறகு நடந்த செயல்பாடுகள். ‍‍
போலீஸ் வழக்கம் போல், பொதுப்புத்தி போகும் திசைக்கு ஏற்ப வழக்கை தயார் செய்ய நடப்பவற்றை கூர்ந்து கவனித்து வருகிறது. ‍‍
இனி… ‍‍
இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு உலகில் எல்லா பக்கமும் இருக்கிறது. பிரான்ஸில் குண்டு வெடித்தால் இஸ்லாமியர்கள். ஐரோப்பாவில் எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் ஐஎஸ்ஐஎஸ். ஆனால், அந்த ஐஎஸ்ஐஎஸ் உருவாக முழு பணமும் அமெரிக்கா பாக்கெட்டிலிருந்து போகிறது என்பதற்கு பல ஆதார தரவுகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு ஊன்றப்படுகிறது. உலக நாடுகள் விதைக்கும் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் எண்ணெய் என்றால், இந்தியாவில் விதைக்கப்படும் வெறுப்புக்கு காரணம், அதிகாரம் கைப்பற்றுதல், majoritarianism மற்றும் வியாபாரம்! ‍‍
ஊருக்கு இளைத்தவனை அடிக்க எல்லாரும் திரளுவோம். அடிக்க கூட்டி செல்பவனை தலைவன் ஆக்கி கொள்வோம். அப்படித்தான் இங்கும். இளைத்தவன் இஸ்லாமியன், தலைவன் பாஜக! ‍‍
சரி, அதென்ன வியாபாரத்துக்காக இஸ்லாமிய வெறுப்பு? ‍‍
பொருளாதார நலன் இல்லாமல் எங்கும் எதுவும் இல்லை. மதம், சாதி, இனம், மொழி, கலாசாரம் என எதுவும். இந்தியாவில் வளர்ந்து வந்த இஸ்லாமிய தொழில் முனைவோர்களை ஒடுக்கத்தான் இஸ்லாமிய வெறுப்பு, மற்ற மத முதலாளிகளால் வளர்க்கப்படுகிறது என சொன்னால் நம்புவீர்களா? ‍‍
தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு கோயம்புத்தூர் என்ற தொழில் நகரத்தில்தான் இஸ்லாமிய வெறுப்பு மேலோங்கி இருக்கிறது என்பதை கவனிக்கவும். ‍‍
இன்றைய இந்திய அரசியலின் equation ரொம்ப சுலபம். அதிகாரத்துக்கு பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்கு பிற மத துவேஷத்தை கொள்கையாக கொண்ட ஒரு கட்சி. தொழிற்போட்டியை ஒடுக்கவும் லாபத்தை அதிகப்படுத்தி கொள்ளவும் இஸ்லாமிய வெறுப்பை விதைத்து, வளர்க்க தயங்காத முதலாளிகள். இருதரப்பின் நோக்கங்களும் ஒன்றிணைந்து விளைந்திருப்பதுதான் இன்றைய அதிகாரம். Majoritarianism! ‍‍
இந்த equation பல வகைகளில் தன்னை prove செய்துகொள்ள முயலும். எதிர் தரப்பில் இருந்து செயல்படுவதை போலவே, பல சமயங்களில் பல சரடுகள் வழியாக, ரிஷிமூலம் தெரியாத வகையில் உள்ளுக்குள்ளேயே செயல்படும். ISIS-ல் இருப்பவர்களுக்கே அமெரிக்க நிதியில்தான் தாம் இயங்குகிறோம் என்ற உண்மை தெரியாமல் இருப்பதுபோல். ‍‍
Body of lies என ஒரு ஆங்கில படம். டிகாப்ரியோ நடித்திருப்பார். படத்தில் சிஐஏ உளவாளி அவர். ஈராக்கிலும் அரபு நாடுகளிலும் குழப்பம் விளைவிப்பதுதான் அவர் வேலை. மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு, ஒரு தீவிரவாதி குழுவின் பெயரில் ‘நாங்கள்தான் செய்தோம்’ என அறிவிப்பை வெளியிட்டு விடுவார். அந்த குழுவின் தலைவன் டிகாப்ரியோவை தூக்கி வந்து, கொல்ல முடிவு செய்வான். அப்போது ஜோர்டான் அரசில் இருக்கும் தன் நண்பர் அமர்த்திய உளவாளி ஒருவன், அந்த தீவிரவாத குழுவுக்குள் இருப்பதை டிகாப்ரியா கவனித்து விடுவார். குழு தலைவனிடம் அவர் இப்படி சொல்வார்: ‍‍
“Someone has betrayed you. He works for the head of Jordanian Intelligence… …which means he works for us… …which means… which means you work for us.” ‍‍
இந்த வசனத்தின் பாணியில், பாரூக்கின் கொலையை சொல்வதானால், பாரூக்கை கொன்ற கொலையாளிக்கான ஊக்கமும் மூளைச்சலவையும் கொடுத்தவர்கள் உண்மையிலேயே வேலை பார்த்தது இந்துத்துவாவுக்கு ஆதரவாகத்தான். அவர்கள் இஸ்லாமியர்களாகவே இருக்கலாம். அவ்வளவு நுட்பமானதுதான் இங்கு ஊடாடும் அரசியல் பொருளாதார நலனுக்கான இழைகள். ‍‍
நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ‘ஏழு மலை ஏழு கடல் தாண்டி’ என்ற சிறுவர் கதை போல் தெரியலாம். Conspiracy Theory-யாக கூட உணரலாம். அப்படித்தான் அரசியல் நடக்கும். ‍‍
Malegaon குண்டுவெடிப்பு ஞாபகம் இருக்கிறதா? கர்கரே மரணம்? அட நம்ம ஊர் ராம்குமார் மரணம் என பல பார்த்திருக்கிறோமே ஏற்கனவே! ‍‍
நான்கு பேரை தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, மற்றவர் தோற்றாலும் ஒருவரேனும் காந்தியை கொன்றுவிடும் அளவுக்கு வாய்ப்புகள் உருவாக்கி, அந்த ஒருவர் கையிலும் இஸ்லாமிய பெயரை பச்சை குத்துமளவுக்கு ஸ்கெட்ச் போட்டவர்கள் ஆளும் நாடு இது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். ‍‍
ராஜீவ் காந்தியை கொன்றதற்கு பின் பன்னாட்டு அரசியல் பின்னல் இருப்பதை புரிந்து கொள்ளாமல் விடுதலைப்புலிகளின் மீது மாத்திரம் பழி போடுபவராக நீங்கள் இருந்தால் பாரூக்கை கொன்றது இஸ்லாமிய தீவிரவாதி என்று நம்பும் முழு தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. ‍‍
முக்கியமாக, ஜெயமோகனின் சிந்தனையை இந்த மாதிரி விஷயங்களில் தெளிவடைய பயன்படுத்தி கொள்ளலாம். கடலில் திசை தொலைத்த மாலுமிக்கு உதவும் Mariner’s compass போல்தான் ஜெயமோகனின் கொண்டையும். அது காட்டும் திசைக்கு நேரெதிரில்தான் உண்மை இருக்கும். ‍‍
இந்த விஷயத்தை தொடர்ந்து ஜெயமோகனின் கொண்டை காட்டுவது இஸ்லாமியர்கள் மீது அவர் கொண்டிருக்கும் அச்சத்தை. அதற்கு அவர் உதாரணமாக, ஒரு சராசரி வியாபாரியின் மனநிலையை, இஸ்லாமிய மதத்தின் பண்பாக சுட்டி, முழு பணம் கேட்கிறார்கள் என பேசுவதெல்லாம் பேரபத்தம். அன்னார் மட்டும் தான் வசனம் எழுதும் படங்களில் கொடுக்கப்படும் முழு தொகையிலிருந்து குறைத்துக் கொண்டுதான் வாங்குவார் போலும்.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍ சில புலவர்கள் பாடல் பாடி புகழ் பெறுவார்கள். சிலர் குறை சொல்லியே புகழ் பெறுவார்கள். பிழைத்து தொலையட்டும். ‍‍

திராவிட கழகத்தினர் அவசரப்பட்டதுதான் என்னுடைய வருத்தம் எல்லாம். நிகழும் அரசியல் காட்சிகளை கருத்தில் கொண்டு பேசியிருந்தால் சரியாக இருந்திருக்கும். இஸ்லாமியர்களுக்கும் தி.க.வுக்கும் இருக்கும் உறவில் பிளவு ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை, ‘அப்படியான நோக்கமும் பின்னணியில் இருந்திருக்கலாமே’ என்ற கண் கொண்டு ஏன் தி.க.வினர் பார்க்க தவறினர் என்பதுதான் புரியவில்லை. போகட்டும். எல்லாரும் பெரியார் அல்லவே! ‍‍
இந்த கொலையில் இஸ்லாமியர்கள் மீது துவேஷம் தூவ ஓடி வருபவர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். கொன்றவர்கள் இஸ்லாமியர்கள் என்ற உங்கள் கூச்சலுக்கு நடுவே கொல்லப்பட்டவரும் ஒரு இஸ்லாமியர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கொலையை இஸ்லாமிய அமைப்புகள் பல கண்டித்திருக்கின்றன. கைதான அறுவரையும் ஜமாத் இஸ்லாமிலிருந்து விலக்கி இருக்கிறது. கொன்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இஸ்லாமியர்கள் எல்லாம் கொல்பவர்கள் என புரிந்துகொள்ள கூடாது. ‍‍
‍‍‍‍‍ ‍எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். மதுரை திருமங்கலத்தின் மசூதி தெருவில் வாழ்ந்தவன். என் நண்பன் கனி எனக்காக நோன்பு கஞ்சி எடுத்து ஓடி வந்திருக்கிறான். ஒன்றாக தண்டவாளத்தில் இரும்பை வைத்து காந்தம் ஆக காத்து கிடந்திருக்கிறோம். ஆற்றில் மீன் பிடித்திருக்கிறோம். சுன்னத்தை சொல்லி விளக்கி சிரித்திருக்கிறான். அவனுடைய வாப்பா எனக்கும் வாப்பாதான். ‍‍
ஜெயமோகன் கட்டுரையில் நான் ஒத்துக்கொள்ள கூடிய விஷயம் ஒன்று மட்டுமே. இஸ்லாமியர்கள் நம்மிலிருந்து சற்று தள்ளி நிற்கிறார்கள்தான். ஆனால், ஏன் தெரியுமா? ‍‍
கோபம், பயம், பரிதவிப்பு! ‍‍
1992-ல் பாபர் மசூதியில் இறங்கிய கடப்பாரை என் கனியை என்னிடமிருந்து தள்ளி வைத்துவிட்டது. அவன் கோபப்படுகிறான். ஏனெனில் அவனுக்கு வலிக்கிறது. ‍‍
இஸ்லாமியர்கள் தள்ளி நிற்கிறார்கள் என சொல்லும் ஜெயமோகன் யார் அவர்களை தள்ளிவிட்டது என சொல்வாரா? ‍‍
தோழர் தாமிரா பதிவிட்டிருந்தது போல், இன்றும் உட்கார்ந்து மொகலாய பிரியாணியை சாப்பிட்டு கொண்டு, கறியில் நாக்கு படாமல் பேச தெரிந்த ஜெயமோகனுக்கு அந்த உண்மையை சொல்ல வாய் வராது. ஏனெனில் அந்த உண்மைதான் அவர் அரசியல். ‍‍
பாரூக்கை கொன்றது தனி நபர் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது சரணடைந்தவர்கள் கூறியிருப்பதுபோல் தனிப்பட்ட வெறுப்பாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்ததற்கு பின்னால், பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு மிக ஆபத்தான அரசியல் நடவடிக்கையின் ஞாபக மிச்சம் தொக்கி நிற்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். கொலையாளிகளின் கோபம் விதைந்து, வளர்ந்து, கிளைத்ததெல்லாம் அங்கிருந்துதான். ‍‍
இவர்களை திட்டும் அதே வாய்களை கொண்டே அவர்களையும் திட்டுவோம் ஒருசேர. ஏனென்றால் கொல்பவனை விட கொல்ல தூண்டுபவன் தான் பெரும் குற்றவாளியாம்!
ராஜசங்கீதன், ஊடகவியலாளர்
.