நைஜீரியர்கள்மீது தாக்குதல்: ஐ.நா. கண்டனம்!
‘நொய்டாவில் ஆப்பிரிக்கர்களைத் தாக்கிய இந்தியர்கள் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும்’ என ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இப்பகுதி கடந்த 10 வருடமாக ஆப்பிரிக்கர்கள் அதிகம் வசிக்கும் இடமாக உள்ளது. ஆப்பிரிக்கர்கள் போதைப்பொருள் குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுவதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், நொய்டாவில் கடந்த மார்ச் 26ஆம் தேதி ஞாயிறன்று அதிகளவில் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதன் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் மணிஷ்காரி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. இப்பகுதியில் உள்ள ஆப்பிரிக்கர்களே போதைப்பொருள்களை மாணவர்கள், இளைஞர்களுக்கு வழங்குகின்றனர் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி மார்ச் 26ஆம் தேதி ஞாயிறன்று மாலை இரு நைஜீரியர்களை தாக்கினர்.
இதையடுத்து ஐந்து ஆப்பிரிக்கர்களை போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீஸார் கைது செய்தனர். பின்னர் போதைப்பொருள் தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்தனர். இதனால், போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து ஆப்பிரிக்கர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதைக்கண்டித்து, உள்ளூர் மக்கள் தரப்பில் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்தபோது, வன்முறையில் முடிந்தது. அதைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்க மாணவர்களுக்கான சங்கம் ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததன்பேரில், உ.பி. அரசு சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது. தாக்குதல் சம்பவம் குறித்து, ஆப்பிரிக்க மாணவர் லாரன்ஸ் பேசுகையில், “நாங்கள் அமைதியாக வாழவே இந்தியாவுக்கு வந்து உள்ளோம், எங்கள் மீது வன்முறை, அடக்குமுறையை பிரயோகிப்பதன் மூலம் நாங்கள் பணிய மாட்டோம்” என கூறினார். மேலும், “காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. எங்களைத் தாக்கியதற்கான காரணம் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. அதேபோல், இந்தியர்கள் எங்களை தாக்கியபோது அருகில் இருந்த பொதுமக்களிடம் உதவி கோரினோம். ஆனால் அவர்களில் யாரும் உதவவில்லை” என கூறினார்.
இந்நிலையில், நைஜீரியர்களைத் தாக்கிய இந்தியர்கள் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஸ்டீபன் துஜாரிக் ஏப்ரல் 4ஆம் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என நம்புகிறோம்” என்றார். ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
நைஜீரியர்கள்மீது தாக்குதல்: ஐ.நா. கண்டனம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:22:00
Rating:
No comments: