திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி – எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்
பெண்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மூடப்படும் டாஸ்மாக் கடைக்கு பதிலாக மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில், நெடுஞ்சாலை அருகில் இருந்த 3 டாஸ்மாக் கடைகளுக்கு மூடிவிட்டு, குடியிருப்பு பகுதியில் புதிய மதுக்கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இதனை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி பொது மக்கள் மீது, காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. பெண்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமான தாக்குதலை காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை, திருப்பூர் நகர ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் கொடூரமான முறையில் கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார்.
காவல்துறையினரின் இந்த அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு, குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்ற பொதுமக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளித்து, அத்தகைய முயற்சிகளை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி – எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:46:00
Rating:
No comments: