இன்று இரவு முதல் “108 ஆம்புலன்ஸ்கள்’ வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் “108 ஆம்புலன்ஸ்’ ஊழியர்கள் புதன்கிழமை (ஜன.8) இரவு 8 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனால், மாநிலம் முழுவதும் உள்ள 924 ஆம்புலன்ஸ்கள் இயங்காது. இந்த வேலைநிறுத்தத்தில் 3,050 பேர் பங்கேற்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை என நிர்ணயிக்க வேண்டும். 8 மணி நேரத்துக்கு மேலான வேலை நேரத்துக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இணையாகவும், கிராம சுகாதார செவிலியர்களுக்கு இணையாகவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியாக மாதம் ரூ. 4,500 வழங்க வேண்டும். ஊதியத்தில் 12 சதவீதம் போனஸாக வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால ஊதியத்துடன் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை இரவு 8 மணிவரை தொடர்ந்து 24 மணி நேரத்துக்கு இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலர் மு. செந்தில்குமார் மூலம் தமிழ்நாடு சுகாதாரத் துறை தலைமைக்கும், ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ள ஜிவிகே நிறுவனத்துக்கும் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி இப்போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் 924 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இவற்றில், பணியாற்றும் 3,050 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் ஓடாது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 19, கன்னியாகுமரியில் 9, தூத்துக்குடியில் 16 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இவற்றில், 250-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட சங்கத் தலைவர் சுடலைக்குமார் கூறியதாவது: 33 அம்ச கோரிக்கைகளில் பிரதானமாக 6 கோரிக்கைகளை ஏற்றாலே வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தும் அரசோ, ஜிவிகே நிறுவனமோ இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவன அதிகாரி கூறியது:
சுகாதாரத் துறையால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றாக மருத்துவப் பணியாளர்களும், ஓட்டுநர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தின் வேறுபகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவப் பணியாளர்களும், ஓட்டுநர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். 108 சேவை மையத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.
இன்று இரவு முதல் “108 ஆம்புலன்ஸ்கள்’ வேலைநிறுத்தம் இன்று இரவு முதல் “108 ஆம்புலன்ஸ்கள்’ வேலைநிறுத்தம் Reviewed by நமதூர் செய்திகள் on 21:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.